ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெரிக்கிளீசு காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்சு (Fifth-century Athens) என்பது கிமு 480 முதல் 404 வரையிலான காலத்திய ஏதென்சின் கிரேக்க நகர அரசாகும். இக்காலமானது முன்பு ஏதென்சின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. இது பெரிக்கிளீசு காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஏதென்சின் அரசியல் மேலாதிக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்பாட்டு செழிப்பு ஆகியவை நன்கு வளர்ந்த காலம் ஆகும். கிரேக்கத்தின் மீதான பாரசீக படையெடுப்பு தோல்வியடைந்த பிறகு, டெலியன் கூட்டணி என அழைக்கப்படும் ஏதெனியன் தலைமையிலான நகர அரசுகளின் கூட்டணியானது, பாரசீகர் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசிய கிரேக்க நகரங்களை சுதந்திரமாக வைத்திருப்பதற்காக பாரசீகர்களை எதிர்கொண்ட காலகட்டம் கிமு 478 இல் தொடங்கியது.

கிமு 5 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாரசீகத்துடன் அமைதி ஏற்பட்ட பிறகு, சுதந்திர நகர அரசுகளுடன் ஏதென்சு சமத்துவ பாசாங்குகளை கைவிட்டு, டெலியன் கூட்டணியின் கருவூலத்தை டெலோசிலிருந்து ஏதென்சுக்கு மாற்றிய பின்னர் ஏதென்சு பேரரசாக மாறியது. அந்த கருவூலத்திலிருந்து ஏதெனியன் அக்ரோபோலிஸ் கட்டிடத்திற்கு தேவைப்பட்ட நிதி எடுக்கப்பட்டது. அதில் பாதியை பொது ஊதியத்தில் சேர்த்தது மேலும் கிரேக்க உலகில் மேலாதிக்க கடற்படை சக்தியாக ஏதென்சு தன் நிலையை தக்க வைத்துக் கொண்டது.

பேரரசின் நிதியானது, அதன் இராணுவ மேலாதிக்கம் மற்றும் அதன் அரசியல் நல்வாய்ப்புகள் போன்றவை அரசியல்வாதியும் பேச்சாளருமான பெரிக்கிளீசால் வழிநடத்தப்பட்டது. ஏதென்சு மேற்கத்திய பாரம்பரியத்தின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் நீடித்த கலாச்சார கலை ஆக்கங்களை உருவாக்கியது. நாடக ஆசிரியர்களான எசுக்கிலசு, சாஃபக்கிளீசு, யூரிப்பிடீசு ஆகிய அனைவரும் கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஏதென்சில் வாழ்ந்து தங்கள் படைப்புகளை உருவாக்கினர். வரலாற்றாசிரியர்களான எரோடோட்டசு, துசிடிடீஸ், மருத்துவர் இப்போக்கிரட்டீசு மற்றும் மெய்யியலாளர்கள் பிளேட்டோ, சாக்கிரட்டீசு ஆகியோரும் இக்காலத்தவரே. ஏதென்சின் புரவலர் தெய்வமான ஏதெனாவின் பெயரில், ஏதென்சு தன் பெயரைப் பெற்றது.

கண்ணோட்டம்[தொகு]

பெரிக்கிளீசின் மார்பளவு பளிங்குச் சிலை, சு, கி.மு. 430 கிரேக்க மூலத்திற்குப் பிறகான உரோமானிய நகல்

ஏதெனிய பொற்காலத்தின் போது, ஏதெனியன் இராணுவம் மற்றும் வெளிவிவகாரங்கள், போன்றவை குடிமக்களின் பத்து பழங்குடியின பிரிவினரால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து தளபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஸ்ரடிகெஸ் எனப்படும் தலைவர்களுக்கு இராணுவப் பயணங்களைத் திட்டமிடுதல், பிற நாடுகளின் தூதர்களிடம் கலந்துரையாடுதல் மற்றும் இராசதந்திர விவகாரங்களை வழிநடத்துதல் உள்ளிட்ட கடமைகள் வழங்கப்பட்டன. சனநாயகப் பிரிவின் தலைவராக எபியால்ட்டீசு இருந்த காலத்தில், பெரிக்கிளீசு அவரின் ஆதரவாளராக இருந்தார். மேல்தட்டு வர்கத்தினரின் ஆதிக்கத்தில் இருந்த அரியோபாகஸ் அவையை அரசியல் ரீதியாக மதிப்பிழக்கச் செய்ததற்காக எபியால்ட்ஸ் படுகொலை செய்யப்பட்டபோது. அவரின் இடத்துக்கு பெரிகிளீசு நுழைந்து கிமு 445 இல் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு கிமு 429 இல் அவர் இறக்கும் வரை, தொடர்ந்து ஏதெனியன் அவைத் தேர்தல் மூலம் அவர் தொடர்ந்து பதவி வகித்தார்.

பெரிக்கிள்ஸ் ஒரு சிறந்த பேச்சாளராக இருந்தார். இந்த குணமானது அவரது அரசியல் பார்வையை முன்வைத்து, அவையில் மகத்தான வெற்றியை ஈட்ட முடிந்தது. அவரது மிகவும் பிரபலமான சீர்திருத்தங்களில் ஒன்று, தீட்ஸ்கள் (செல்வ வளமற்ற ஏதெனியர்) பொது அலுவலகத்தை கைப்பற்ற அனுமதித்தது. அவரது நிர்வாகத்தின் மற்றொரு வெற்றி மிஸ்டோபோரியாயாவை ( μισθοφορία , அதாவது சம்பளம் பெற்ற பணி ) உருவாக்கியது. நீதிமன்றங்களில் நடுவர்களாக கலந்துகொண்ட குடிமக்களுக்கான சிறப்பு சம்பளம். இதன் மூலம், இந்த குடிமக்கள் நிதி நெருக்கடியை சந்திக்காமல் பொது சேவையில் தங்களை அர்ப்பணிக்க முடிந்தது. இந்த அமைப்பின் மூலம், நீதிமன்றங்களை நடுவர்கள் நிறைந்ததாக வைத்திருப்பதிலும் (அத். போல். 27.3), பொது வாழ்வில் மக்களுக்கு அனுபவத்தை வழங்குவதிலும் பெரிக்கிள்ஸ் வெற்றி பெற்றார். ஏதென்சின் ஆட்சியாளராக, அவர் தன் நகரத்தை கிரேக்க உலகின் முதல் மற்றும் மிக முக்கியமான நகர அரசாக மாற்றினார். மேலும் அற்புதமான கலாச்சாரம் மற்றும் சனநாயக அமைப்புகளை உருவாக்கினார்.

குடியுரிமையுள்ள மக்கள், இடைத்தரகர்கள் இல்லாமல், அவையில் அரசு விவகாரங்களைத் தீர்மானித்தனர். ஏதெனியன் குடிமக்கள் சுதந்திரமாக இருந்தனர். அவர்கள் தங்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கும் தங்கள் கடவுள்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் மட்டுமே கடமைப்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் அவையில் சமத்துவமாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தனர்: ஒரு ஏழையின் வார்த்தைக்கு ஒரு பணக்காரனின் மதிப்பு இருந்தது.

பல குடிமக்கள் தங்களின் மோசமான வறுமை அல்லது அறியாமை காரணமாக அரசியல் உரிமைகளைப் பயன்படுத்த முடியாததால், அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்ட சமத்துவக் கொள்கை ஆபத்துக்களைக் கொண்டிருந்தது. இதைத் தவிர்க்க, ஏதெனியன் சனநாயகம் பிவரும் முறையை ஏழைகளுக்கு உதவும் பணியில் ஈடுபட்டது:

  • அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் சலுகை.
  • ஏழைகளுக்கு வேலைகளை தேடி வழங்க வேண்டும்.
  • இடம்பெயர்த்தபட்ட கிராம மக்களுக்கு நிலங்களை வழங்க வேண்டும்.
  • போரினால் விதவை, ஊனம், அனாதை, ஆதரவற்று போனவர்களுக்கு பொது உதவி செய்தல்.
  • பிற சமூக உதவி.

மிக முக்கியமாக, சமத்துவக் கருத்தை வலியுறுத்துவதற்காக நடைமுறையில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவம் தேவையில்லாத அனைத்து பொது அலுவலகங்களும் தேர்தல் மூலம் அல்லாமல், குலுக்கு சீட்டு மூலம் நியமனங்கள் செய்யப்பட்டன. ஒரு அரசியல் அமைப்பிற்கு குலுக்கு சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்போதும் சுழற்சி முறையில் பணியாற்றினர். ஒவ்வொரு அதிகாரியின் தனிப்பட்ட திறனைப் பொருட்படுத்தாமல், அரசியல் செயல்பாடுகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதே இதன் பொருள்.

கிரேக்க வரலாற்றாசிரியர் துசிடிடீஸ் (கி.மு. 460–400) அவர்களிடமிருந்து சாட்சியம் நமக்கு வந்ததால், இந்த நடவடிக்கைகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டதாகத் தோன்றுகிறது: "நகரத்திற்குச் சேவை செய்யத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் வறுமை அல்லது குடிமை நிலை என்ற எந்த தடையும் இல்லை. . ."

நிறுவனங்கள்[தொகு]

நீதிபதிகள்[தொகு]

நீதிபதிகள் பதவியை ஏதெனிய அரசு நிர்வாகத்தை உருவாக்கியவர்கள் தங்கள் வசம் வைத்திருந்தனர். நீதிபதிகள் தட்டை மொச்சையைப் பயன்படுத்தி, திருவுளச் சீட்டு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதாவது கருப்பு மற்றும் வெள்ளை நிற மொச்சைகள் ஒரு பெட்டியில் வைக்கப்படும். அதில் ஒருவர் எந்த மொச்சையை வெளியே எடுக்கிறார் என்பதைப் பொறுத்து அவர் பதவியைப் பெற்றுவதோ அல்லது பெறாமல் போவதோ முடிவு செய்யப்பட்டது. இது பணக்காரர்களின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் பதவி பெற சாத்தியமான சூழலை உருவாக்க ஏதுவாக்கும் ஒரு உத்தியாகும். இதில் இரண்டு வகை பதவிகள் மட்டுமே மொச்சை மூலம் தேர்ந்தெடுக்கப்படமல், மக்கள் மன்றத்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை ஸ்ரடிகெஸ், அல்லது பொது, மற்றும் நிதி நீதிபதி. இந்த இரண்டு அலுவல்கள் ஒவ்வொன்றையும் செய்ய குறிப்பிடத்தக்க குணங்கள் தேவை என்று பொதுவாகக் கருதப்பட்டது. ஒருவரின் நீதிபதி பதவி ஒரு ஆண்டுக்கு மேல் நீடிக்காது. இதில் ஸ்ரடிகெஸ் உட்பட, இந்த பொருளில் ஆண்டுதோறும் பெரிக்கிள்ஸ் தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்டது ஒரு விதிவிலக்காகும். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும், ஒரு நீதிபதி தனது நிர்வாகம் மற்றும் பொது நிதி பயன்பாடு பற்றிய கணக்கைக் காட்ட வேண்டும்.

ஏதென்சின் மிகவும் மரியாதைக்குரிய பதவிகள் பண்டைய அர்கோன்ட்ஸ் அல்லது ஆங்கிலத்தில் ஆர்கோன்கள் ஆகும். முந்தைய காலங்களில் இவர்கள் ஏதெனியன் அரசின் தலைவர்களாக இருந்தனர். ஆனால் பெரிகிள்ஸ் காலத்தில் அவர்கள் தங்கள் செல்வாக்கையும் அதிகாரத்தையும் இழந்தனர். இருப்பினும் அவர்கள் தீர்ப்பாயங்களுக்கு தலைமை தாங்குபவர்களா நீடித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் குடிமக்கள் பத்து "ஸ்ரடிகெஸ்" அல்லது ஜெனரல்களை தேர்ந்தெடுக்கப்படனர். அவர்கள் இராணுவ அதிகாரிகளாகவும், இராஜதந்திரிகளாகவும் பணியாற்றினர். இந்த பதவியின் மூலம் தான் பெரிக்கிள்ஸ் கிமு 5 ஆம் நூற்றாண்டு ஏதென்சை வடிவமைத்தார்.

நாற்பதுக்கும் மேற்பட்ட பொது நிர்வாக அதிகாரிகளும், அறுபதுக்கும் காவலர்கள் இருந்தனர். அவர்கள் தெருக்களிலும், சந்தைகளிலும், எடை, அளவீடுகளைச் சரிபார்த்தல், கைதுகள், மரணதண்டனைகளை நிறைவேற்றுதல் ஆகிய பொறுப்புகளைக் கொண்டிருந்தனர்.

மக்கள் பேரவை[தொகு]

எக்லேசியா (கிரேக்க மொழியில், ἐκκλησία , அதாவது, அழைப்பாணை மூலம் கூடிய கூட்டம்), சனநாயகத்தின் முதல் உறுப்பு. கோட்பாட்டளவில் இது ஏதென்சின் அனைத்து குடிமக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது, இருப்பினும் அதிகபட்சமாக 6,000 பங்கேற்பாளர்கள் கூடியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கூட்டம் கூடும் இடம் அக்ரோபோலிசுக்கு முன்னால் உள்ள பினெக்ஸ் என்ற மலையில் ஒரு இடம். அவைக் கூட்டமானது சில நேரங்களில் விடியற்காலையில் இருந்து மாலை வரை நீடித்தது. எக்லேசியா அவை ஆண்டுக்கு நாற்பது முறை கூடியது.

முன்மொழியப்பட்ட சட்டங்கள் மற்றும் ஆணைகள் குறித்து பேரவை முடிவு செய்தது. நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பழங்கால சட்டங்களை சார்ந்து முடிவுகள் எடுக்கப்பட்டன. மசோதாக்கள் இரண்டு நிலைகளில் வாக்களிக்கப்பட்டன: முதலில் சட்டமன்றமே முடிவுசெய்து பின்னர் பூலி (βουλή) இறுதி ஒப்புதலை வழங்கியது.

கவுன்சில் அல்லது பூலி[தொகு]

கவுன்சில் அல்லது பூலி (βουλή) என்பது 500 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதில் ஒவ்வொரு பழங்குடி பிரிவிலிருந்தும் ஐம்பது பேர் உறுப்பினராக இருப்பார்கள். இவர்கள் குலுக்கு சீட்டுமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்பு விவரிக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி, இவர்கள் "மொச்சை உறுப்பினர்கள்" என்று அறியப்பட்டனர்; அதிகாரப்பூர்வமாக அவர்கள் பிரிட்டோனியர் ( πρύτανις , அதாவது "தலைவர்" அல்லது "ஆசிரியர்") என்று அழைக்கப்பட்டனர்.

பூலி உறுப்பினர்கள் சட்ட திட்டங்களை ஆய்வு செய்தனர், நீதிபதிகளை மேற்பார்வையிட்டனர். மேலும் நகரின் தினசரி நிர்வாகம் சரியான பாதையில் செல்வதை கவனித்துவந்தனர், நகர அரசின் வெளிவிவகாரங்களையும் மேற்பார்வையிட்டனர். அவர்கள் பினெக்ஸ் மலையில், நிகழ்வுக்காக திறந்தவெளியில் உருவாக்கப்பட்ட இடத்தில் சந்தித்தனர். அதிகாரத்தில் இருந்த ஐம்பது பினெரிடேனிகள் அங்கு பாறையில் செதுக்கப்பட்டுள்ள பிரமாண்டமான இடத்தில் அமைந்திருந்தனர். மூன்று படிகள் கொண்ட ஒரு சிறிய படிக்கட்டு வழியாக அவர்கள் சென்றடையும் கல் மேடை இருந்தது.

நிதி[தொகு]

முன்பக்கம் நகரின் காவல் தெய்வமான ஏதெனாவின் உருவமும், பின்புறத்தில் ஞானத்தின் சின்னமான ஆந்தையின் சின்னமும் கொண்ட ஏதெனியன் நாணயம் (கி.மு. 490) .

டெலியன் கூட்டணியின் கருவூலம் இல்லாமல் ஏதெனியன் அரசின் பொருளாதார வளங்கள் சாத்தியமில்லை. கருவூலம் முதலில் டெலோஸ் தீவில் இருந்தது. ஆனால் பெரிகிள்ஸ் கருவூலத்துக்கு டெலோஸ் போதுமான அளவு பாதுகாப்பான இடம் இல்லை என்ற சாக்குப்போக்கு சொல்லி கீழ் அதை ஏதென்சுக்கு இடம் மாற்றினார். இது கூட்டணிக்குள் உசரல் மற்றும் உறுப்பினர்களாக இருந்த சில நகர அரசுகளின் கிளர்ச்சிக்கு காரணமாயிற்று. ஏதென்ஸ் விரைவாக இதற்கு பதிலடி கொடுத்தது. மேலும் சில அறிஞர்கள் இது ஒரு கூட்டணி என்பதற்கு பதிலாக ஏதெனியன் பேரரசாக ஆன காலமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

அரசிற்கான மற்ற சிறிய வருமானங்களாக சுங்கக் கட்டணம் மற்றும் அபராதங்கள் வழியாக வந்து சேர்ந்தன. போர் காலங்களில், செல்வந்த குடிமக்களுக்கு சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த குடிமக்களுக்கு நகரத்தின் நலனுக்காக மற்ற வரிகளுடன் இவை நிரந்தரமாக விதிக்கப்பட்டன. ஏதென்சுக்கு பெரும் கடற்படை சக்தியைக் கொடுத்த கப்பல்களைப் பராமரிக்கவும், பெரிய சமய விழாக்களை நடத்தவும் வரிகள் பயன்படுத்தப்பட்டன. பணக்கார ஏதெனியன் ஆடவர் கப்பல்களுக்கு (அநேகமாக அவர்கள் அதை ஆதரித்த காலத்தில் அதன் தலைவர்களாக இருந்ததால்) அல்லது திருவிழாக்களுக்கு நிதியுதவி செய்வதை ஒரு மரியாதைக்குரிய செயலாக கருதினர். மேலும் அவர்கள் நன்கொடை அளிப்பதில் போட்டியிட்டனர்.

பிரேயஸ் வர்த்தக துறைமுகத்திற்கு அருகாமையில் இருந்ததால் அதனால் ஏதென்சு பயனடைந்தது. ஏதென்ஸ் அரசு துறைமுகம் வழியாகச் செல்லும் சரக்குகளுக்கு வரி வசூலித்தது. பைரேயசில் (ஏதென்சின் முக்கிய துறைமுகம் ), இந்த வரி 1% அல்லது அதற்கு மேற்பட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்டது.[1]

பெரிக்கிள்ஸ் காலத்திய ஏதென்சு[தொகு]

ஏதென்சின் மற்ற பண்டைய நகர அரசுகளின் உயரடுக்கினருடன் ஒப்பிடுகையில், ஏதெனிய உயரடுக்கு வர்க்கத்தினர் அடக்கமாகவும் பெரும்பாலும் ஆடம்பரங்கள் இல்லாமல் வாழ்ந்தனர். மிகக் குறைவான பெரிய நல்வாய்ப்புகள் இருந்தன மேலும் நில உடமைகள் ஓரிடத்தில் குவிக்கப்படவில்லை: குடிமக்களில் 71-73% மக்கள் 60-65% நிலத்தை வைத்திருந்தனர், அதேசமயம் குடிமக்களுக்கான ஜினி குறியீடு 0.708 என கணக்கிடப்பட்டுள்ளது.[2] பொருளாதாரமானது கடல்சார் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது, அமேமியாவின் மதிப்பீடுகளின்படி, ஏதென்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56% உற்பத்தியில் இருந்து பெறப்பட்டது.[3] வேளாண்மை முக்கியமானது, ஆனால் அது மக்களுக்கு உணவளிக்க போதுமான அளவு உற்பத்தி உடையதாக இருக்கவில்லை, எனவே பெரும்பாலான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.[4]

அனைத்து முக்கிய சமய விழாக்களையும் அரசு மேற்பார்வையிட்டது. மிக முக்கியமானதாக அதீனா தெய்வத்தின் நினைவாக பனாதெனாயா எனப்படும், ஒரு சடங்கு ஊர்வலமானது ஆண்டுக்கு ஒரு முறை மே மாதம் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூலையில் நடத்தப்பட்டது. இதில் நகரமானது பழைய மரச் சிலையான அதீனாவுக்கு புதிய முக்காடு ( பெப்லோஸ் ) வழங்கியது. பீடியசு இந்த ஊர்வலத்தை சிற்பமாக்கினார். இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. சூலை பனாதேனியாவில் ( கிரேட் பனாதெனியா ), சீருடற்பயிற்சி மற்றும் குதிரை ஏற்றம் உள்ளிட்ட பெரிய போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் புனித ஒலிவ எண்ணெய் நிறைந்த அம்ப்ராக்களைப் பரிசாக பெற்றனர். மற்ற முக்கியமான திருவிழாக்களின் ஒன்றாக டயோனிசுவின் நினைவாக நாடக டியோனிசியா, அங்கு துன்பியல் மற்றும் நகைச்சுவை நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.

கல்வி[தொகு]

பள்ளிக்குச் செல்லும் ஏழு வயது வரை வரை ஆடவரின் கல்வி அவர்களின் வீட்டிலேயே தொடங்கியது. பள்ளியில், அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் பலர் இருந்தனர். அத்துடன் கணிதம், இசை போன்ற பாடங்களையும் கற்றுக்கொண்டனர். மல்யுத்தம், ஓட்டப் பந்தயம், குதித்தல், மற்றும் சீருடற்பயிற்சி போன்றவற்றுடன் எதிர்கால இராணுவ சேவைக்கு தயாராகும் உடற்கல்வி வகுப்புகளிலும் சிறுவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. பதினெட்டு வயதில் அவர்கள் இராணுவத்தில் பணியாற்றினர் மேலும் ஆயுதங்களை எவ்வாறு தாங்குவது என்று அறிவுறுத்தப்பட்டனர். உடற்கல்வி மிகவும் தீவிரமாக இருந்தது மேலும் பல சிறுவர்கள் உண்மையான விளையாட்டு வீரர்களாக மாறினர். இந்தக் கட்டாயப் பாடங்களைத் தவிர, அந்தக் காலத்தின் சிறந்த தெய்யியலாளர்கள், இலக்கண அறிஞர்கள், சொற்பொழிவாளர்களிடம் கலந்துரையாடவும் கற்றுக்கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. சில ஏழைகள் வீட்டில் தங்கி பெற்றோரின் வேலைக்கு உதவ வேண்டியிருந்தது. இருப்பினும், அரிஸ்டோபேன்ஸ், சாக்ரடீஸ், ஏழைகளாக இருந்தபோதிலும், பிரபலமடைந்து வெற்றியடைந்தனர்.

பெண்கள்[தொகு]

பாரம்பரிய ஏதென்சில் சுதந்திர பெண்களின் முதன்மைப் பாத்திரமானது திருமணம் செய்து குழந்தைகளைப் பெறுவதாகும்.[5] குழந்தைப்பேறு மூலம் குடும்பத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு வழியாக திருமணத்தின் முக்கியத்துவம் பண்டைய ஏதென்சிலிருந்து மாறியது. திருமணங்கள் குடும்பத்தை நிலைநாட்டுவது போலவே குடும்ப உறவுகளை உருவாக்குகும் நன்மை பயப்பதாக இருந்தது.[6] திருமணமான பெண்கள் குடும்பத்தின் அன்றாட செயல்களுக்கு பொறுப்பானவர்கள். திருமணத்திற்கு பிறகு, அவர்கள் தங்கள் கணவரின் குடும்பத்தின் செழிப்பு, குடும்ப உறுப்பினர்களின் நலவாழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.[7] குழந்தைகளைப் பேணுதல், வளர்த்தல், பராமரித்தல், துணி நெசவு, ஆடைகள் செய்தல் ஆகியவை அவர்களது முதன்மைப் பொறுப்புகளாக இருந்தன.[8] நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதும், அடிமைகளைக் கண்காணிப்பதும், வீட்டில் போதுமான உணவு இருப்பதை உறுதி செய்வதும் அவர்கள் பொறுப்பாக இருந்தன.[9] பாரம்பரிய ஏதெனியன் திருமணங்களில், கணவன் அல்லது மனைவி சட்டப்பூர்வமாக மணமுறிவு பெறலாம்.[5] விவாகரத்துக்குப் பிறகு, கணவன் தான் பெற்ற வரதட்சணையைத் திருப்பித் தர வேண்டும் அல்லது ஆண்டுதோறும் 18 சதவீத வட்டி செலுத்த வேண்டும். அதேசமயம் அவள் மறுமணம் செய்து கொள்ளலாம்.[5] விவாகரத்தின் போது குழந்தைகள் இருந்தால், அவர்கள் தங்கள் தந்தையின் வீட்டில் தங்கியிருப்பார்கள். அவர்களின் வளர்ப்பிற்கு அவர் பொறுப்பாக இருப்பார்.[5]

சில சூழல்களில், ஏதெனியன் ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமைகளும், பொறுப்புகளும் ஏதெனியன் பெண்களுக்கும் இருந்தன.[10] இருப்பினும், ஏதெனியன் பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடும்போது சட்டத்தில் சில குறிப்பிடத்தக்க குறைபாடுகளைக் கொண்டிருந்தனர். அடிமைகள் மற்றும் மெட்டிக்களைப் போலவே, அவர்களுக்கு அரசியல் உரிமை, குடியுரிமை, வாக்குரிமை ஆகியவை மறுக்கப்பட்டன,[11] சட்ட நீதிமன்றங்கள் மற்றும் சட்டமன்றத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களாக இருந்தனர்.[12] குடியுரிமை உள்ள ஏதெனியர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பிற ஆண்களிடமிருந்து பிரித்து வைக்கவேண்டும் என்ற சித்தாந்தம் இருந்தது.[13] இருப்பினும், பல ஏதெனியர்களால் இப்படி பிரித்துவைக்க முடியாது என்பது அங்கீகரிக்கப்பட்டது. அரசியலில் என்ற நூலில் அரிஸ்டாட்டில் கேட்டார்: "ஏழைகளின் மனைவிகள் வெளியே சென்றுவருவதை தடுப்பது எப்படி?" [14] நடைமுறையில், பணக்கார குடும்பங்கள் மட்டுமே இந்த சித்தாந்தத்தை செயல்படுத்த முடிந்தது.[13] பெண்களுக்கு சுமத்தபட்டுள்ள பொறுப்புகள் காரணமாக அவர்கள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வரவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் - எடுத்துக்காட்டாக கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துவர அல்லது துணி துவைக்க சென்றுவர வேண்டி இருந்தது. செல்வந்த குடும்பத்தில் பெண்கள் வீட்டிலேயே இருப்பதற்கு ஏதுவாக அவர்களின் வெளிவேலைகளைச் செய்வதற்கு அடிமைகள் இருந்திருக்கலாம் என்றாலும், பெண்கள் வெளியே சென்றவருவதை தடுக்குமளவுக்கு போதுமான அடிமைகள் பெரும்பாலானவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.[15]

ஏதெனா (நகரத்தின் பெயர் கொண்ட தெய்வம்) வழிபாட்டு முறை ஏதெனிய சமுதாயத்தின் முக்கியமான ஒன்றாக இருந்தது. அது ஒழுக்கத்தை வலுப்படுத்துவதாகவும், சமூக கட்டமைப்பைப் பராமரிப்பதாகவும் இருந்தது.[8] பெண்கள் அந்த வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்தனர்; அதீனாவின் பூசாரிப் பதவியை பெண்கள் வகித்தனர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.[5] மேலும் பூசாரி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் பதவிகளை ஆதரிப்பதும் இருந்தது.[5]

கலை மற்றும் இலக்கியம்[தொகு]

அக்ரோபோலிசின் தோற்றம்

வரலாற்றாசிரியர்கள் கிமு 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளை ஏதென்சின் சிற்பம், கட்டிடக்கலையின் பொற்காலமாக கருதுங்கள். இந்த காலகட்டத்தின் அலங்கார கூறுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் முந்தைய காலத்திலிருந்து வேறுபடவில்லை. ஆனால் இந்த காலகட்டத்தின் சிறப்பியல்பு என்னவெனில், படைப்புகளின் அளவு மற்றும் அவற்றின் செம்மை மற்றும் முழுமை ஆகும். பெரும்பாலானவை சமய இயல்புடையவை. அதில் முக்கியமானவை கோயில்கள் ஆகும். இந்த காலகட்டத்தவைகளில் இருந்து சில எடுத்துக்காட்டுகள்:

  • ஒலிம்பியன் ஜீயஸ் கோவில் புனரமைப்பு.
  • நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்ட தெல்பியில் உள்ள அப்பல்லோ கோவிலின் புனரமைப்பு.
  • ஏதென்சின் அக்ரோபோலிசின் புனரமைப்பு, கடவுள்களின் மேன்மைக்கான பளிங்கு நகரம். இந்த தளம் பாரசீகர்கள் வைத்த தீயால் பாதிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடிபாடாக கிடந்தது. பெரிக்கிளீசு இதை அருகிலுள்ள பென்டெலிகானினில் இருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட வெள்ளை பளிங்கு மூலம் புணரமைக்கத் தொடங்கினார். அக்ரோபோலிசின் பணரமைப்புப் பணியை முடிக்க சிறந்த கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், தொழிலாளர்கள் கூடினர். இந்தக் கட்டுமானம் 20 ஆண்டுகள் நீடித்தது. டெலியன் கூட்டணியின் கருவூளத்தில் இருந்து நிதியுதவி பெறப்பட்டது.

சிற்பங்கள்[தொகு]

இந்த காலத்தின் மிகப்பெரிய சிற்பியாக பீடியசு கருதப்படுகிறார். அவர் தங்க முலாம் பூசப்பட்ட பிரமாண்டமான தந்த சிலைகளை ("கிரிசெலிபன்டைன் சிலைகள்") உருவாக்கினார். பொதுவாக முகம் மற்றும் கைகள், அவை அவரது காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்டு போற்றப்பட்டன: பார்த்தீனானின் உட்புறத்தில் அமைந்துள்ள ஏதெனாவை திறந்த கதவுகள் வழியாக பக்தர்கள் காணுவகையில் இருந்தது. மேலும் ஒலிம்பியாவில் இருந்த சேயுசு, அதன் பழமையால் பிற்காலங்களில் உலகின் அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது.

இந்த நூற்றாண்டின் மற்ற சிறந்த சிற்பிகளாக மைரான், பாலிகிளெட்டஸ் ஆகியோர் இருந்தனர்.

மட்பாண்டங்கள்[தொகு]

இந்த காலத்திய, மட்பாண்ட துண்டுகள் ஏராளமாக கிடைக்கின்றன. மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பிற நகரங்களுடனான அதிகப்படியான வணிகத்தின் காரணமாக ஆம்ப்போராக்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. இந்த சகாப்தத்தில் இருந்து ஆம்போராவின் பெரிய சான்றுகள் ஒவ்வொரு பெரிய பண்டைய துறைமுகத்திலும் ஏஜியன் கடலிலும் காணப்படுகின்றன. இந்த காலகட்டத்தில், முந்தைய பிரபலமான மஞ்சள் மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்களை விட மிகவும் நுட்பமான வெள்ளை பின்னணி மட்பாண்டங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. இந்த மட்பாண்டங்கள் பெரும்பாலும் வாசனை திரவியங்களை வைக்க அல்லது கல்லறைகளில் சவக்கிடங்கு சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்டன. பல சிறந்த ஓவியர்கள் இருந்தனர் என்பதும் அறியப்படுகிறது. ஆனால் அவர்களின் படைப்புகள் சுதை ஓவியங்கள் மற்றும் தனித்த ஓவியங்கள் ஆகியவை யாவும் அழிந்துவிட்டன.

நடக அரங்குகள்[தொகு]

கிமு 5 ஆம் நூற்றாண்டில் நடக அரங்குகள் அவற்றின் உன்னத நிலையை எட்டியது. பெரிகிள்ஸ் தொடர்ச்சியான பொருளாதார நடவடிக்கைகளுடன் நடாக அரங்குகளை ஊக்குவித்து, ஆதரவளித்தார். பணக்காரக் குடும்பங்கள் நாடகங்களையும், நடிகர்களையும் ஆதரித்தனர். இதன் மூலம், பெரிக்கிள்ஸ் பாரம்பரியத்தை பராமரித்து வந்தார், அதன்படி நாடகக் கலை மக்களின் தார்மீக மற்றும் அறிவுசார் கல்விக்கு உதவியது. நாடகங்கள் பொதுவாக ஆடவர்களுக்காவே உருவாக்கப்பட்டன. மேலும் இந்த மேடை பெரும்பாலும் ஆணாதிக்கத்தை வலுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.[16]

ஏதென்சு கிரேக்க நாடகத்தை ஆதரிக்கும் பெரிய நகரமாக மாறியது. நாடக நிகழ்ச்சிகள் தொடர்ந்து எட்டு மணிநேரம் நீடித்தது. மேலும் நாடகப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் ஒரு நடுவர் குழுவால் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டன. தற்காலிக நாடக அரங்குகளின் அலங்காரமானது மிகவும் எளிமையாக இருந்தபோதிலும், பண்டைய ஏதென்சின் நிரந்தர நாடக அரங்குகள் இறுதியில் மிகவும் ஆடம்பரமாகவும் விரிவாகவானதாவும் மாறியது. நிகழ்ச்சி நடக்கும் இடம் எதுவாக இருந்தாலும், நாடகங்கள், அதிகபட்சம், மூன்று கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டன. அவர்கள் சித்தரித்த கதாபாத்திரங்களுடன் அவர்களை அடையாளம் காண முகமூடி அணிந்தனர்; அவர்கள் கூட்டாக பாடி நடனமாடினர்.

இந்தக் காலத்தைச் சேர்ந்த கீழ்கண்ட நாடக எழுத்தாளர்களின் நாடகங்கள் தற்போதும் எஞ்சியிருக்கின்றன:

மெய்யியல்[தொகு]

இந்த பொற்காலதில் எல்லா காலத்திலும் மிகவும் புகழ்பெற்ற மேற்கத்திய மெய்யியலாளர்கள் சிலர் வாழ்ந்தனர். இவர்களில் முக்கியமானவர் சாக்கிரட்டீசு, அவருடைய கருத்துக்கள் முதன்மையாக அவரது மாணவர் பிளேட்டோவின் டயலாக்ஸ் என்ற நூலில் உள்ளன. பிளேட்டோவின் மாணவர் அரிசுட்டாட்டில் ஆவார்.

பொற்காலத்தின் மற்ற குறிப்பிடத்தக்க மெய்யியலாளர்கள் அனாக்சகோரசு உட்பட; டெமோக்கிரட்டிசு (அனைத்து பொருட்களிலும் எது உள்ளது என்பதை முதலில் கேட்டவர், இப்போது அணு அல்லது அதன் துணை அலகுகள் என்று அழைக்கப்படுபவற்றின் ஆரம்பகால முன்மொழிவு); எம்ப்பிடோகிளீசு ; இப்பியாசு ; ஐசோக்ரேட்ஸ்; பார்மனைட்ஸ்; ஹெராக்ளிடஸ்; புரோட்டோகோரசு ஆவர்.

கிமு 5 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் சோபிஸ்டு என்ற பெயரானது (கிரேக்க மொழியில் சோஃபிஸ்டு, என்றால் நிபுணர், ஆசிரியர், ஞாணி) கட்டணம் பெற்றுக்கொண்டு அறிவியல் மற்றும் அறிவின் பல்வேறு துறைகளை கறிபித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பெயராக இருந்தது.

இந்தக் காலம், ஏதென்சானது "கிரேக்கப் பள்ளி" ஆக இருந்தது. பெரிக்கிளீசு மற்றும் அவரது ஆசைநாயகி அசுபாசியா அவர்கள் அன்றைய ஏதென்சின் சிறந்த சிந்தனையாளர்களுடன் மட்டுமல்லாமல் மற்ற கிரேக்க அரசுகள் மற்றும் வெளிநாட்டு அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர். அவர்களில் மெய்யியலாளர்கள் அனாக்சகோரசு, பிரேயசை புனரமைத்தவரான கட்டடக் கலைஞர் மிலேட்டசு, வரலாற்றாசிரியர்களான எரோடோட்டசு (484-425), துசிடிடீஸ் (460-400), செனபோன் (430-354) ஆகியோர் அடங்குவர்.

பேச்சாற்றலின் தலைநகரமாகவும் ஏதென்சு இருந்தது. கிமு 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, பேச்சுத்திறன் ஒரு கலை வடிவமாக உயர்த்தப்பட்டது. லோகோகிராபர்கள் ( λογογράφος ) எனும் எழுத்தாளர்கள் பாடங்களை எழுதி, மொழியின் தெளிவு மற்றும் தூய்மையால் வகைப்படுத்தப்பட்ட புதிய இலக்கிய வடிவங்களை உருவாக்கியவர். இது ஒரு இலாபகரமான தொழிலாக மாறியது. லோகோகிராபரான லிசியாஸ் (கிமு 460-380) தனது தொழிலால் பெரும் செல்வத்தை ஈட்டினார் என்று அறியப்படுகிறது.  பின்னர், கிமு 4 ஆம் நூற்றாண்டில், சொற்பொழிவாளர்கள் ஐசோக்ரடீஸ் மற்றும் டெமோஸ்தனிஸ் ஆகியோரும் பிரபலமடைந்தனர்.

பெரிக்கிள்ஸ் காலத்தின் முடிவு[தொகு]

கி.மு 461 முதல் கி.மு 429 இல் பெரிக்கிளீசு இறக்கும் வரை அவர் ஏதென்சு அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இது ஒரு சிறப்பான சகாப்தமாகவும், குடிமக்கள் முன்பை விட உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைந்தனர். உள் நாட்டில் அனைத்தும் நன்றாக இருந்தது, இருப்பினும் டெலியன் கூட்டணிக்குள் அதிருப்தி அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஏதென்சின் வெளியுறவுக் கொள்கைகள் சிறந்த முடிவுகளைப் பெற்றுத் தரவில்லை; டெலியன் கூட்டணி உறுப்பினர்கள் பெருமளவில் அதிருப்தி அடைந்தனர். ஏதென்சு நகர அரசாக இருந்தது, என்றாலும் அது கிரேக்கத்தின் மற்ற பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி கீழ்ப்படுத்தி வைத்திருந்தது. அந்த ஒடுக்கப்பட்ட குடிமக்கள் தங்கள் விடுதலையை விரும்பினர்.

முன்னதாக, கிமு 550 இல், எசுபார்த்தாவால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு இயக்கப்பட்ட பெலொப்பொனேசியா நகரங்களுக்கு இடையே இதேபோன்ற கூட்டணி நிறுவப்பட்டது. கிரேக்க நகர-அரசுகளுக்குடேயே உள்ள பொதுவான அதிருப்தியைப் பயன்படுத்தி, இந்த பெலோபொன்னேசியன் கூட்டணி ஏதென்சை எதிர்கொள்ளத் தொடங்கியது. மோசமாக நிர்வகிக்கப்பட்ட, போர்க் கொள்கைகள், (கி.மு. 431 கி.மு.) அதைத் தொடர்ந்த பெலோபொன்னேசியப் போருக்குப் பிறகு, வலிமையை இழந்தது. கிமு 338 இல் ஏதென்ஸ் நகரம் இறுதியாக , மாசிடோனியாவின் இரண்டாம் பிலிப் கிரேக்கத்தின் மற்ற பகுதிகளை கைப்பற்றியபோது தன் விடுதலையை இழந்தது.

இதையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Fawcett, Peter (2016). ""When I Squeeze You with Eisphorai": Taxes and Tax Policy in Classical Athens". Hesperia: The Journal of the American School of Classical Studies at Athens 85 (1): 153–199. doi:10.2972/hesperia.85.1.0153. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-098X. https://www.jstor.org/stable/10.2972/hesperia.85.1.0153. 
  2. Josiah Ober, "Wealthy Hellas". Princeton/Stanford Working Papers in Classics. 2010.
  3. “Economy and Economics of Ancient Greece,” Routledge, 2007
  4. Ian Morris, "The growth of Greek cities in the first millennium BC". Princeton/Stamford Working Papers in Classics. 2005.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Pomeroy 1994
  6. Osborne 1997
  7. Fantham et al. 1994
  8. 8.0 8.1 Gould 1980
  9. Xenophon, Oeconomicus, 7.35–7.37
  10. Patterson 2007
  11. Rhodes 1992
  12. Schaps 1998
  13. 13.0 13.1 Dover 1973
  14. Aristotle, Politics, 1300a.
  15. Cohen 1989
  16. Allan, Davin (27 March 2013). "The Ideal Image: The Depiction of Women in Fifth Century Drama". Literatured. Archived from the original on 25 March 2014. பார்க்கப்பட்ட நாள் 29 March 2014.