பெப்பிசுத் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெப்பிசுத் தீவு
பெப்பிசுத் தீவின் விபரங்கள் (வில்லியம் ஹாக், 1699, முதற் பயணத் தொகுப்புகள்)
புவியியல்

பெப்பிசுத் தீவு (Pepys Island) என்பது, ஃபாக்லாந்துத் தீவுகளுக்கு வடக்கில், 47°தெற்குத் திசையில் 230 கடல் மைல்கள் (260 மைல், 430 கிமீ) தொலைவில் இருந்ததாகக் கருதப்பட்ட ஒரு பொய்த்தீவு ஆகும்.[1]

முதல் அறிவிப்பு[தொகு]

1683 டிசம்பரில், பிரித்தானியக் கப்பல் தலைவனான அம்புரோசு கௌலே என்பவர், 40 சுடுகலன்கள் பொருத்தப்பட்ட பச்செலர்ஸ் டிலைட் (Bachelor's Delight) என்னும் கப்பலில் உலகைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தென் அத்திலாந்திக்கில், 47°தெ அகலக்கோட்டில் முன்னர் அறியப்படாததும், மக்கள் குடியேற்றம் இல்லாததுமான ஒரு தீவைக் கண்டு அதற்கு பெப்பிசுத் தீவு எனப் பெயரிட்டார். இப்பெயர் சாமுவேல் பெப்பிசு என்பவரின் பெயரைத் தழுவியது. ஆனால், பயணத்தில் உடன் சென்ற வில்லியம் டாம்பியர் என்பவர், கண்டுபிடிக்கப்பட்ட தீவு செபால்டினாஸ் தீவுகள் என்றே கருதினார். இப்பெயர் ஃபாக்லாந்துத் தீவுகளின் இன்னொரு பெயர். கௌலே, இத்தீவு பற்றிய தனது குறிப்பில் பின்வருமாறு எழுதியிருந்தார்:[2]:34

"நாங்கள் தொடர்ந்து தென்மேற்கில் சென்று 47°தெற்கை அடைந்தபோது, அறியப்படாததும் மக்கட் குடியேற்றம் இல்லாததுமான ஒரு தீவைக் கண்டோம். இதற்கு நான் பெப்பிசு எனப் பெயரிட்டேன். இது நல்ல நீர் பெற்றுக்கொள்வதற்குச் சிறந்த இடம். இதன் துறைமுகம் ஆயிரம் கப்பல்கள் நங்கூரம் இட்டு நிற்கக்கூடிய மிகச் சிறப்பான துறைமுகம். இத்தீவில் பெருமளவான பறவைகளை நாம் கண்டோம். இதன் கரைகளுக்கு அப்பால் மணற்பாங்கான அடிப்பகுதி அமைந்துள்ளதால், இங்கே ஏராளமாக மீன்பிடிக்கலாம் என நம்புகிறோம்."

பிற்கால முயற்சிகள்[தொகு]

18 ஆம் நூற்றாண்டில் இதன் அமைவிடத்தை அறிவதற்குப் பலர் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இவர்களுள், ஆன்சன் பிரபு (1740-1744), கொமடோர் பைரன் (1764), கப்டன் குக், பாங்க்சும் சோலன்டரும் (1769), பெர்னெட்டி (1763-1764), போர்கன்வில்லெ (1766-1769), பெரொசே (1785), வான்கூவேர்ட் (1790-1795) ஆகியோரும் அடங்குவர்.

பேராசிரியர் பேசாட்டி, கௌலேயின் வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டு, பெப்பிசுத் தீவுகளின் விபரங்கள் எல்லாம் ஃபாக்லாந்துத் தீவுகளின் விபரங்களோடு சரியாக ஒத்திருப்பதாகவும், கௌலேயின் வரைபடங்களின் படியும் அது ஃபாக்லாந்துடன் பொருந்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.[2]:42 இதன்படி பெப்பிசுத் தீவுகளும், ஃபாக்லாந்துத் தீவுகளும் ஒன்றே என்னும் முடிவுக்கு அவர் வந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. James Burney, A Chronological History of the Discoveries in the South Sea Or Pacific Ocean; accessed 25 July 2010
  2. 2.0 2.1 Antonio de Viedma, Diarios de navegación – expediciones por las costas y ríos patagónicos (1780–1783), Ediciones Continente reprint, Buenos Aires 2006, ISBN 950-754-204-3, with an introduction by Professor Pedro Pesatti, Universidad Nacional de Conahue, Argentina: and two prefaces of importance – Discurso preliminar al diario de Viedma, p. 19–28, and Apuntes históricos de la Isla Pepys, p. 33–36 with facsimile map, both authored by Pedro de Angelis, on 20 June 1839. De Angelis (b. Naples 1784, d. Buenos Aires 1859) was the historian who created the State Printing Service. He edited the collection of works and documents relative to the ancient and modern history of the provinces of the River Plate in six volumes (1835–1838).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்பிசுத்_தீவு&oldid=2980622" இலிருந்து மீள்விக்கப்பட்டது