பென்னி பிளாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலகின் முதலாவது உத்தியோகபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை 'பென்னி பிளாக்'

பென்னி பிளாக் (Penny Black) உலகின் முதலாவது உத்தியோகபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலையாகும். இது பெரிய பிரித்தானியாவால் 1840 மே 1 அன்று மே 6ம் திகதியிலிருந்து உபயோகிப்பதற்காக வெளியிடப்பட்டது.

தபால் சேவைக்காக முன்கட்டணம் செலுத்தப்பட்டதைக் காட்ட, ஒட்டக்கூடிய தபால்தலையைப் பயன்படுத்தும் எண்ணம், ரோலண்ட் ஹில் என்பவரது, பிரித்தானிய தபால் முறைமையின் மறுசீரமைப்புக்கான 1837 ஆம் வருடத்திய முன்வைப்பின் ஒரு பகுதியாகும். 1839ல், பிரித்தானியத் திறைசேரி, புதிய தபால்தலை வடிவமைப்புக்காகப் போட்டியொன்றை அறிவித்ததாயினும், சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை. அதனால், முன்னர் ஒரு பதக்கத்துக்காக வில்லியம் வயன் என்பவரால் உருவாக்கப்பட்ட விக்டோரியா மகாராணியின் உருவப்படமொன்றைப் பயன்படுத்தத் திறைசேரி முடிவுசெய்தது. மேல்பகுதியில் "POSTAGE" என்ற சொல்லும், அடியில் "ONE PENNY" என்ற பெறுமானமும் அச்சிடப்பட்டிருந்தது. இவற்றுடன் அடிப்பக்கத்து இரண்டு மூலைகளிலும், பெரிய தாளில், குறிப்பிட்ட தபால்தலையின் இடத்தைக் குறிக்கும், "A A", "A B", போன்ற எழுத்துக்கள் இருந்தன. அதன் பெயர் குறிப்பதுபோல், தபால்தலை முழுவதும் கறுப்பு நிறத்திலேயே அச்சிடப்பட்டிருந்தது. தபால்தலைகள் பேர்க்கின்ஸ் பேக்கன் (Perkins Bacon) நிறுவனத்தால் அச்சிடப்பட்டது.

மே 6 உத்தியோகபூர்வமான முதல் நாளாக இருப்பினும், மே 2ல் தபால்குறியிடப்பட்ட மூன்று உறைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இது தபாலதிபர்கள் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தபால்தலைகளை விற்றதன் காரணமாக இருக்கலாம்.

பென்னி பிளாக், ஒரு வருடத்துக்கும் சற்றுக் கூடியகாலமே உபயோகத்தில் இருந்தது. கறுப்பு நிறத்தின் மேல் சிவப்பு நிற மையினால் அடித்தல் செய்தால்கூடத் தெளிவாகத் தெரிவதில்லை என்ற அனுபவத்தின் காரணமாக, பென்னி ரெட் என்னும் சிவப்பு நிறத் தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டு, கறுப்பு மையினால் அடித்தல் செய்யப்பட்டது.

பென்னி பிளாக் தாராளமாகக் கிடைக்கக்கூடியதெனினும், அதனுடைய முக்கியத்துவம் காரணமாக அதற்கு சேகரிப்பாளரிடையே அதிக மதிப்பு உள்ளதால், மலிவாகக் கிடைப்பதில்லை. 2000ல் நல்ல நிலையிலுள்ள ஒரு பயன்படுத்திய தபால்தலை US$200க்கும், பயன்படுத்தாதது US$3,000 க்கும் விலைபோனது. மாறாக பயன்படுத்திய பென்னி ரெட் $ 3 மட்டுமே பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னி_பிளாக்&oldid=2272895" இருந்து மீள்விக்கப்பட்டது