பெந்தெங்கு மரபு அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெந்தெங்கு மரபு அருங்காட்சியகம் (Benteng Heritage Museum) இந்தோனேசியாவின் பாந்தென், தங்கேராங்கில் உள்ள பழைய சந்தை மாவட்டமான பசார் லாமாவில் உள்ள ஒரு பாரம்பரிய தள மற்றும் அருங்காட்சியகம் ஆகும். சிசாடனே நதி அருகே அமைந்துள்ள, இந்தோனேசியாவில் உள்ள சீன இன மக்களின் வரலாற்று மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்ற முதல் அருங்காட்சியகம் என்ற பெரமையினை இந்த அருங்காட்சியகம் பெறுகிறது.[1][2]

பெந்தெங்கு மரபு அருங்காட்சியகம் ஒரு மரபுசார் பெரனக்கன் சீனக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. 1684 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம் தங்கேராங்கினைச் சேர்ந்த மிகப் பழமையான வரலாற்று கட்டமைப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் இது நகரின் பழமையான கோயிலான போயன் தெக்கு பயோவிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்து உள்ளது.[3]

பாரம்பரிய பாதுகாப்பு[தொகு]

இது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்படுவதற்கு முன்பாக இந்தக் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. உள்ளூரைச் சேர்ந்த பெந்தெங்கு சீனர்களால் அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.[4][5] இந்த கட்டிடம் குறிப்பிடத்தக்க வரலாற்று மற்றும் கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளது என்று நம்பிய ஒரு உள்ளூர் தொழிலதிபரான உதய அலீம் என்பவர் 2009 ஆம் ஆண்டில் இந்த பாரம்பரிய சொத்தை வாங்கினார். அலீம் தங்கேராங்கின் வரலாற்று சிறப்புமிக்க பசார் லாமா பகுதியில் அவர் வளர்ந்தவர் ஆவார். ஆனால் ஆசிய பொருளாதார நெருக்கடியின் போது அவர் தனது குடும்பத்தினருடன் மேற்கு ஆத்திரேலியாவின் பெர்த்திற்கு குடிபெயர்ந்தார்.[6]

அந்தக் கட்டிடத்தை கவனமாக மீட்டெடுக்க அவர் பெருமுயற்சி மேற்கொண்டு அதனை மேற்பார்வையிட்டார், அதை அதன் பழைய நிலைக்குத் திருப்பி அமைத்தார்.[4] இவ்வாறாக அமைப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. கூடுதலாக பெரனகன் சீன அலங்கார கூறுகளைச் சேர்த்தார். ஒரு பகிர்வுத் திரையை அமைத்தார். அதன்மூலமாக புதிய அருங்காட்சியகத்தின் சீன-இந்தோனேசிய தன்மையை மேம்படுத்தினார். புதிதாக சேர்க்கப்பட்ட அமைப்புகள் அனைத்துமே பிற கட்டட அமைப்புகளை ஒப்புநோக்கிப் பார்த்து பின்னர் அமைக்கப்பட்டதாகும். அதே காலகட்டத்தைச் சேர்ந்தனவற்றை மையமாக வைத்து அவை மேற்கொள்ளப்பட்டன. ஏனென்றால் அருங்காட்சியகத்தின் அசல் தோற்றம் குறித்து எந்தத் தரவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

சிறப்பு[தொகு]

தங்கேராங்கில் உள்ள பென்டெங் பாரம்பரிய அருங்காட்சியகம் சீன பாணியிலான கட்டிடக்கலைகளைக் கொண்டுள்ளது, கட்டிடத்தின் மிகவும் சுவாரஸ்யமான அசல் கூறுகளில் ஒன்றாக முதல் தளத்தைச் சுற்றி அமைந்துள்ள ஆகாயத்தை நோக்கிய நிலையில் அமைக்கப்பட்டதாகும். சகார்த்தாவின் புறநகர்ப் பகுதியான டாங்கேராங்கின் வரலாற்றைப் பற்றி அறியும்போது ஒரு வியப்பு காத்திருக்கிறது எனலாம். எங்கும் பரவியிருக்கும் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளுக்கு பெயர் பெற்ற நிலையில் இப்பகுதி அமைந்துள்ளது. இது நாட்டில் தனித்துவமானது என்பது அதன் வரலாற்றைக் கொண்டு அறியமுடியும். இந்த தீவுக்கூட்டத்தில் சீன இனக்குழுக்களின் முதல் குடியேற்றங்கள் டாங்கேராங்கில் அமைந்ததாக நம்பப்படுகிறது.[7]

பார்வை நேரம்[தொகு]

பெந்தெங்கு மரபு அருங்காட்சியகம் ஜேஎல்என்.சிலமே 20, போயன் டெக் பயோ கோயில் பின்புறம், தங்கெராங்கு 15111, இந்தோனேசியா என்ற முகவரியில் அமைந்துள்ளது. இதனை பார்வையாளர்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.[8]

குறிப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 6°10′43″S 106°37′47″E / 6.1786869°S 106.6296684°E / -6.1786869; 106.6296684