பெண்ணைநதிப் புராணம்
பெண்ணைநதிப் புராணம் என்பது மிகவும் பிற்பட்ட காலத்து நூல். 19ஆம் நூற்றாண்டு நூல். சுவாமிமலை கனகசபை ஐயர் என்பவர் பாடிய நூல். உரையுடன் 1889-ல் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. 18 படலம், 677 பாடல் கொண்டது. செவிவழிச் செய்திகள் பல இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
பார்வதியின் தந்தை இமராசன். அசுரரை அழிக்க முனிவர்கள் தவம் செய்தனர். அதில் இமராசன் ‘தெய்வீகராசன்’ என்னும் பெயருடன் தோன்றினான். இவனிடமிருந்த பச்சைக் குதிரையைக் கைப்பற்றக் கருதி மூவேந்தரும் இவனுடன் போரிட்டுத் தோற்றனர். அவரவர் பெண்ணைத் தெய்வீகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.
கூறும் தகவல்கள்
[தொகு]- பாண்டியன் தன் மகள் காஞ்சனமாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை ‘நரசிங்க முனையரையர்’ என்னும் நாயனார்.
- சோழன் தன் மகள் பொன்மாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை மெய்ப்பொருள் நாயனார்.
- சேரன் தன் மகள் பதுமாவதியைக் கொடுத்தான். இவன் மகன் சித்திரசேனன் வழியாக மலையமான் பரம்பரை தோன்றியது.
பாடல்
[தொகு]இந்த நூலில் உள்ள பாடல் ஒன்றை மு. அருணாசலம் குறிப்பிட்டடுள்ளார். பெண்ணை ஆறு திருமுனைப்பாடி நாட்டில் பாய்கிறது. அவ்வை கேட்டுக்கொண்டபடி அந்த ஆறு அங்கவை சங்கவை திருமணத்துக்காகப் பாலாகவும் நெய்யாகவும் பெருகி ஓடிற்று என்னும் கதை இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வை பாடலுக்கு நறு நெய் பால் பெருகி அருந்தமிழ் அறிவினால் சிறந்து
பவ்வ நீர் ஆடைத் தரணி மால் மார்பில் பயிலும் உத்தரியமும் போன்று
மொய் வரால் கெண்டை வாளை சேல் மலங்கு முதலிய சனம் எதிர்கொள்ளத்
தெய்வ மா நதி நீர் பரக்கும் நாடு அந்தத் திருமுனைப்பாடி நன்னாடு.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, 2005