உள்ளடக்கத்துக்குச் செல்

பூவைநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவைநிலை என்னும் துறைப் பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு உள்ளன. [1] இது பாடாண் திணையைச் சேர்ந்த துறை.

புறநானூற்றுப் பாடல்கள்

[தொகு]

ஞாயிறு

ஞாயிறு பகலில் மட்டும் வழங்குகிறதாம். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் பகலிலும் இரவிலும் வழங்குகிறானாம். ஞாயிறு மலையில் மறைந்துகொள்கிறதாம். இவன் தன்னை மறைத்துக்கொள்வதில்லையாம். ஞாயிறு மாலையில் செத்துக் காலையில் பிறக்கிறதாம். இவன் எப்போதும் எல்லாருக்கும் காட்சி தந்துகொண்டேயிருக்கிறானாம். இதனால் ஞாயிறு இவனுக்கு ஒப்பு இல்லையாம். கபிலர் பாடுகிறார். [2]

சிவன், பலராமன், திருமால், முருகன்

சீற்றத்தில் சிவபெருமானையும், வலிமையில் வாலியோனையும், புகழில் திருமாலையும், எண்ணியதை முடிப்பதில் முருகப்பெருமானையும் போன்றவன் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று சிவபெருமான், பலராமன், திருமால், முருகப்பெருமான் ஆகிய நான்கு பெருந் தெய்வங்களோடு ஒப்பிட்டுப் பாடும் இந்தப் பாடல் பூவைநிலை. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடுகிறார். [3]

ஞாயிறு, திங்கள்

பகைவர்க்கு ஞாயிறு போன்றவன், புலவர்க்குத் திங்கள் போன்றவன் என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் பாடும் பாடல் பூவைநிலை. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடுகிறார். [4]

மழைமேகம்

ஆய் அண்டிரன் நாவுக்குச் சமைத்த முள்ளம்பன்றிக் கறியும், மேனிக்குச் சந்தனமும், பரிசாக யானைத் தந்தமும் தருவான். அவனைப்போலத் தரமுடியாத மழைமேகம் அவனுக்கு ஒப்பாகாது என்னும் பாடல் பூவைநிலை. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறார். [5]
புறநானூற்றில் காணப்படும் பூவைநிலைப் பாடல்கள் இவ்வாறெல்லாம் பொருத்திக் காட்டுகையில், தொல்காப்பியம் பூவைநிறம் கொண்ட மாயவன் திருமாலோடு பொருத்திக் காட்டுவது பூவைநிலை என்கிறது. [6] இதற்கு உரை எழுதும் உரையாசிரியர் இளம்பூரணர் சேர மன்னன் கோதையைத் திருமாலோடு ஒப்பிடும் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார். இந்திரனுக்கு ஆயிரம் கண், கோதைக்கோ இரண்டே கண். எனவே கோதை இந்திரன் இல்லை. சிவன் என்றால், கோதைக்குப் பிறை இல்லை. முருகன் போல் ஆறுமுகம் இல்லாததால் இவனை முருகன் எனச் சொல்லமுடியவில்லை. எனவே, கோதையைத் திருமால் என்று கொள்வதே பொருதம் – என்கிறது இந்த எடுத்துக்காட்டுப் பாடல். [7]
புறப்பொருள் வெண்பாமாலை பூவை என்பது காயாம்பூ. காயாம்பூ மேனியன் திருமால். அரசனைத் திருமாலோடு ஒப்பிட்டும் பாடுவது பூவைநிலை எனக் கூறுகிறது. [8]

அடிக்குறிப்புகள்

[தொகு]
 1. புறநானூறு 8, 56, 59, 374
 2. புறநானூறு 8
 3. புறநானூறு 56
 4. புறநானூறு 59
 5. புறநானூறு 374
 6. மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
  தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 5)
 7. இந்திரன் என்னின் இரண்டேகண், ஏறு உயர்ந்த
  அந்தரத்தான் என்னின் பிறை இல்லை – அந்தரத்தின்
  கோழியான் என்னின் முகம் ஒன்றே, கோதாயை
  ஆழியான் என்று உணரல் பாற்று. (முத்தொள்ளாயிரம்)
 8. கறவை காவலன் நிறனொடு பொரீஇப்
  புறவு அலர் பூவைப்பூப் புகழ்ந்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 192)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவைநிலை&oldid=3528077" இலிருந்து மீள்விக்கப்பட்டது