பூவிந்தகம்

பூவிந்தகம் (Stamen) என்பது மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்புகளை உள்ளடக்கிய ஒரு முக்கியமான தாவரப் பகுதியாகும். இதனை மகரந்தத்தாள் என்றும் கூறுவர். ஒட்டுமொத்தமாக, ஒரு மலரில் உள்ள மகரந்தத்தாள்கள் அனைத்தும் இணைந்து, 'மகரந்தத்தாள் வட்டம்' (Androecium) என அழைக்கப்படுகின்றன.[1]
புறத்தோற்றம்
[தொகு]

ஒரு மகரந்தத்தாள் பொதுவாக மகரந்தக் கம்பி (filament) எனப்படும் ஒரு காம்பினையும், நுண்வித்துக்களை (microsporangia) உள்ளடக்கிய மகரந்தப்பை (anther) ஒன்றையும் கொண்டிருக்கும். பெரும்பாலான மகரந்தப்பைகள் இரு கதுப்புகளைக் (lobes) கொண்டவை. ஒவ்வொரு கதுப்பும் ஒரு அறை அல்லது நுண்வித்தக அறை (locule) எனப்படும். இவை மகரந்தக் கம்பியுடன் அதன் அடிப்பகுதியிலோ அல்லது மையப் பகுதியிலோ இணைக்கப்பட்டிருக்கும். கதுப்புகளுக்கு இடையே உள்ள மலட்டுத் திசு (அதாவது இனப்பெருக்கத்திற்கு உதவாத திசு) 'இணைப்புத் திசு' (connective) என்று அழைக்கப்படுகிறது; இது கடத்தும் இழைகளைக் கொண்ட மகரந்தக் கம்பியின் நீட்சியாகும். இது மகரந்தப்பையின் முதுகுப் புறத்தில் ஒரு நீட்சியாகக் காணப்படுகிறது.
நுண்வித்தகத்திலுள்ள, நுண்வித்தியிலிருந்து (microspore) ஒரு மகரந்தத் தூள்/பூத்தூள் (pollen grain) உருவாகிறது. மேலும் இது ஆண் கேமிட்டகத் தாவரத்தைக் (male gametophyte) கொண்டுள்ளது. மகரந்தப்பைகளின் அளவானது உல்பியா (Wolfia) இனங்களில் ஒரு மில்லிமீட்டரின் ஒரு சிறிய பின்னத்திலிருந்து, கன்னா இரிடிஃப்ளோரா (Canna iridiflora) மற்றும் ஸ்ட்ரெலிட்சியா நிக்கோலாய் (Strelitzia nicolai) போன்ற தாவரங்களில் சுமார் 13 சென்டிமீட்டர் வரை பெரிய அளவில் மாறுபடுகிறது.
வகைகள்
[தொகு]கன்னா (Canna) இனங்களில் காணப்படுவது போல, மகரந்தத்தாள் வட்டம் அரை மகரந்தத்தாளைக் (அதாவது ஒரே ஒரு அறை) கொண்டிருக்கலாம் அல்லது சாகுவாரோ கள்ளி (Carnegiea gigantea) தாவரத்தில் கணக்கிடப்பட்டுள்ளதைப் போல 3,482 மகரந்தத்தாள்களையும் கொண்டிருக்கலாம்.[2] பல்வேறு தாவர இனங்களில் மகரந்தத்தாள் வட்டம் பலவிதமான அமைப்புகளை உருவாக்குகிறது, அவற்றில் சில மிகவும் சிக்கலானவை.[3] இது பொதுவாக சூலக வட்டத்தை (gynoecium) சூழ்ந்தும், பூவிதழ் வட்டத்தால் (perianth) சூழப்பட்டும் காணப்படுகிறது. ட்ரையூரிடேசி (Triuridaceae) குடும்பத்தைச் சேர்ந்த சில தாவரங்கள், குறிப்பாக லக்கான்டோனியா சிஸ்மேட்டிகா (Lacandonia schismatica) , லக்கான்டோனியா பிரேசிலியானா (Lacandonia brasiliana), ஹைட்ரெல்லேசி (Hydatellaceae) குடும்பத்தைச் சேர்ந்த ட்ரைத்தூரியா (Trithuria) இனங்கள் ஆகியவை இவற்றிற்கு விதிவிலக்காகும்; ஏனெனில் இவற்றில் சூலக வட்டமே மகரந்தத்தாள் வட்டத்தைச் சூழ்ந்து காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Beentje, Henk (2010). The Kew Plant Glossary. Richmond, Surrey: Royal Botanic Gardens, Kew. p. 10. ISBN 978-1-84246-422-9.
- ↑ Bessey, Charles E. (November 6, 1914). Science 40: 680.
- ↑ Sattler, R. (1973). Organogenesis of Flowers. A Photographic Text-Atlas. University of Toronto Press. ISBN 0-8020-1864-5.