உள்ளடக்கத்துக்குச் செல்

பூலான் தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூலான் தேவி
பிறப்பு(1963-08-10)ஆகத்து 10, 1963
கோர்கா கா பர்வா, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்புசூலை 25, 2001(2001-07-25) (அகவை 37)
புது தில்லி, இந்தியா
பணிகொள்ளைக்காரி, அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
உம்மத் சிங்

பூலான் தேவி (Phoolan Devi, ஆகத்து 10, 1963 - சூலை 25, 2001), கொள்ளையரசி அல்லது பண்டிட் குயின் [1] என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரி பின்னாளில் அரசியல்வாதியுமாக அறியப்படுகிறார்.

பிறப்பும் இளமையும்

[தொகு]

பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் பள்ளத்தாக்கின் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு ஆகத்து 10 அன்று பிறந்தார்.[2][3][4] மல்லா எனப்படும் மிகவும் ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் தேவி தின் மல்லா; தாயார் பெயர் மூலா. பூலான்தேவி நான்காவதாகப் பிறந்த பெண் குழந்தை.[5] ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயது மூத்தவன். ஏற்கெனவே 2 பெண்களைத் திருமணம் செய்தவன்.

திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தார். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பல முறை பலாத்காரம் செய்து, மிகவும் கொடுமைப்படுத்தினார். முடிவில் பூலான்தேவி பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தார். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது.

சம்பல் கொள்ளைக்காரி

[தொகு]

இவர் உத்தரப்பிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட மல்லா இனப்பிரிவைச்சார்ந்தவர். அவ்வூரில் உயர்சாதிப் பிரிவினர்க்கும் தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவினர்க்கும் இடையேயான சாதி வேற்றுமை காராணமாகவும், அவர்களின் இழி செயல்களினாலும் கொள்ளைக்காரியாக மாறினார்.

பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள். வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள்.

அவளுடைய பெற்றோரை காவலர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை. கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் காவல் பிடியில் பூலான்தேவி சிக்கினாள். சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டியகாவல் துறையினர் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர்.[1] இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் இருந்த வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், காவல் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.

பாலியல் கொடுமை

[தொகு]

பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டுக்குப் பின் திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள்.

சம்பல் கொள்ளைக் கூட்டத் தலைவி

[தொகு]

அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக் கூட்டத்துக்குத் தலைவனாகி பூலான்தேவியைத் திருமணம் செய்தான். இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இவரை ஒரு கிராமமே வரிசையில் நின்று பாலியல் கொடுமைப்படுத்தியது. துப்பாக்கி சுடுவதில் கொள்ளைக் கூட்டத்தாரிடம் பயிற்சி பெற்ற இவர் கொள்ளைக்காரியாக மிகுந்த ஆரவாரத்துடன இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைக்கூட்டத் தலைவியாக வலம் வந்தவர். இதனால் சம்பல் கொள்ளைக்காரி என்று அழைக்கப்பட்டார். விக்ரம்மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினார்.

இந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13_ந்தேதி கொள்ளை குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் தாக்கூர் கொள்ளை கும்பலைச் சேர்ந்த லாலா தாக்கூரும், ஸ்ரீராம் தாக்கூரும் இணைந்து விக்ரம் மல்லாலை கொலை செய்தனர். பூலான்தேவியை கடத்தி, பெமாய் கிராமத்தில் சிறை வைத்தனர். சிறையில் மூன்று வாரங்கள் இவரை தாக்கூர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.[6] பிறகு பூலான்தேவி கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள். தன்னை சித்தரவதைக்கு உள்ளாக்கிய தாக்கூர் சமூகத்தினர் 22 பேரை பேமாய் கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி சுட்டுக் கொலை செய்தார்.[7] இந்த கொலை சம்பவம் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. இது உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி. பி. சிங் 1982_ல் பதவியை ராஜினாமா செய்தார். பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பூலான்தேவி, 1982 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றார். இதுவே இவர் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும்.

கைதும் விடுதலையும்

[தொகு]

பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல் மந்திரி அர்ஜுன் சிங் முன்னிலையில் சரண் அடைந்தார். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள். 11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள். இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது.[8] மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18-2-1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும் பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

மக்களவை உறுப்பினர்

[தொகு]

கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.) எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றி கிட்டவில்லை. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார். 1994 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5_ந்தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்தார்.

சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை தொடங்கினார். பின்னர் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[9]

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. இதற்காக நாடாளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். என்றாலும் பிறகு 1999 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே மிர்சாபூர் தொகுதியில் 2 ஆவது முறையாக நின்று வெற்றி பெற்றார்.[10][11][12]

பூலான்தேவி 2,90,849 ஓட்டுகளும், அவரை எதிர்த்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு 84,476 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது, பூலான்தேவி சுமார் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். பால் ராம்பாலி மற்றும் மரியே தெரஸ்கூன் என்ற இரண்டு பிரெஞ்சு எழுத்தாளர்கள் உதவியுடன் ஐ, பூலான்தேவி (I, Phoolan Devi) என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதி 1996 ஆம் ஆண்டு வெளியிட்டார்.[1][13]

"பாண்டிட் குயின்" சினிமா படம் வெளிவந்தபிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார்.

படுகொலை

[தொகு]

2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார். அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர்.[14] உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.[15] பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை செய்ததாக ராணா கூறினார்.[16]. இது தொடர்பான வழக்கில் ராணா குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 2014 ஆகத்து 14 இல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.[17]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "குழந்தை திருமணம், 22 பேரால் பாலியல் வன்புணர்வு, அரசியல் பிரவேசம், பூலான் தேவியின் வாழ்க்கை வரலாறு!". Samayam Tamil - Tamil News. 31 சூலை 2020. https://tamil.samayam.com/viral-corner/omg/biography-and-life-facts-of-phoolan-devi-aka-pandit-queen/articleshow/77280494.cms?story=1. 
  2. Szurlej, Tatiana (31 December 2018). "From heroic Durga to the next victim of an oppressive patriarchal Indian culture: Too many variants of Phoolan Devi's biography". Cracow Indological Studies 20 (2): 257–280. doi:10.12797/CIS.20.2018.02.12. 
  3. Sen, Mala (1995) [1991]. India's Bandit Queen: The true story of Phoolan Devi. London: Pandora. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-04-440888-8.
  4. "Phoolan Devi birth anniversary: An exceptional journey of the Bandit Queen". CNBC TV18 (in ஆங்கிலம்). 10 August 2022. Archived from the original on 28 November 2022. பார்க்கப்பட்ட நாள் 28 November 2022.
  5. https://www.vikatan.com/government-and-politics/the-tragic-life-story-of-phoolan-devi-and-her-entry-into-the-politics
  6. https://tamil.hindustantimes.com/nation-and-world/phoolan-devi-death-day-the-day-phoolan-devi-who-raged-like-a-storm-from-a-village-girl-to-a-bandit-queen-was-shot-dead-131690223582870.html
  7. https://www.hindutamil.in/news/india/1285111-phoolan-devi-death-anniversary-bahujan-samaj-party-cadres-tribute-in-up-1.html
  8. https://www.bbc.com/tamil/india-55061863
  9. "Phoolan Devi shot dead". The Hindu. 26 July 2001 இம் மூலத்தில் இருந்து 31 January 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020131194802/http://thehindu.com/thehindu/2001/07/26/stories/01260001.htm. 
  10. "Phoolan Devi". The Daily Telegraph. 26 July 2001 இம் மூலத்தில் இருந்து 17 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221217185955/https://www.telegraph.co.uk/news/obituaries/1335253/Phoolan-Devi.html. 
  11. Moxham, Roy (2010). "Chapter 6". Outlaw: India's Bandit Queen and me (Ebook ed.). London: Rider. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84604-182-2.
  12. "Phoolan Devi Shot D". Outlook India. 25 July 2001 இம் மூலத்தில் இருந்து 15 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180115230055/https://www.outlookindia.com/website/story/a-hrefhttpwwwoutlookindiacompti_coverageaspgid45-phoolan-devi-shot-d/212701. 
  13. https://www.hindutamil.in/news/supplements/penn-indru/85994-.html
  14. "The queen is dead". The Guardian. 26 சூலை 2001. http://www.guardian.co.uk/g2/story/0,3604,527406,00.html. பார்த்த நாள்: 9 ஆகத்து 2012. 
  15. "Profile of Sher Singh Rana". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 சூலை 2001. http://timesofindia.indiatimes.com/Profile-of-Sher-Singh-Rana/articleshow/1154821372.cms. பார்த்த நாள்: 9 ஆகத்து 2012. 
  16. "Man arrested for murder of 'Bandit Queen'". த டெலிகிராப்]]. 27 சூலை 2001. http://www.telegraph.co.uk/news/1335484/Man-arrested-for-murder-of-Bandit-Queen.html. பார்த்த நாள்: 9 ஆகத்து 2012. 
  17. "Profile of life sentences". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 ஆகத்து 2014. http://timesofindia.indiatimes.com/india/Life-sentence-to-Sher-Singh-Rana-for-killing-Phoolan-Devi/articleshow/40249822.cms. பார்த்த நாள்: 14 ஆகத்து 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலான்_தேவி&oldid=4071806" இலிருந்து மீள்விக்கப்பட்டது