உள்ளடக்கத்துக்குச் செல்

பூமிஜா கோயில் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பூமிஜா கட்டிடக்கலையில் கட்டப்பட்ட நீலகண்டேஸ்வரர் கோயில், 11ஆம் நூற்றாண்டு, உதய்பூர், மத்தியப் பிரதேசம்

பூமிஜா கோயில் கட்டிடக்கலை (Bhumija), இந்துக் கோயில் கட்டிடக்கலைகளில் ஒரு வகையாகும். இதில் கருவறைக்கு மேலே உள்ள சிகரத்தைக் கட்டுவதற்கு, சுழலும் சதுரம்-வட்டத் திட்டத்தைப் பயன்படுத்தப்படும் விதம் இதன் தனிச்சிறப்பாகும். மத்திய இந்தியாவின் மால்வா பிரதேசத்தை ஆண்ட (மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் தென்கிழக்கு ராஜஸ்தான்) பரமாரா வம்சத்தவர்களின் ஆட்சியின் போது, சுமார் 12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பூமிஜா கட்டிடக்கலை இந்து மற்றும் சமணக் கோயில்களில் காணப்படுகிறது. பெரும்பாலான ஆரம்பகால மற்றும் நேர்த்தியான எடுத்துக்காட்டுகள் மால்வா பிராந்தியத்திலும் அதைச் சுற்றியும் காணப்படுகிறது. இருப்பினும் இந்த வடிவமைப்பு குஜராத், ராஜஸ்தான், தக்காணம் மற்றும் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில முக்கிய இந்து கோயில் வளாகங்களிலும் காணப்படுகிறது.[1]

விளக்கம்

[தொகு]
சதுரம் மற்றும் வட்டத் திட்டம் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது

பூமிஜா பாணியின் தனிச்சிறப்பு, பிரிக்கப்படாத ஒரு சதுரத் திட்டமாகும். இது அதன் மையத்தைச் சுற்றி சுழற்றப்படுகிறது. மேலும் இந்த சுழற்சி, மேற்கட்டுமானம் செங்குத்தாக உயரும்போது, குறிப்பிட்ட இடைவெளிகளில் நிறுத்தப்படுகிறது. சுழற்சியின் வேகத்தையும், சுழற்சி நிறுத்தப்படும் இடைவெளியையும் சரிசெய்வதன் மூலம், பல ஆக்கப்பூர்வமான மாறுபாடுகளைச் செயல்படுத்த முடிகிறது. ஒவ்வொரு அடுக்கிற்கும் பூமி என்று பெயர். இந்து வாஸ்து சாஸ்திரம் நூல்களில் உள்ள பொதுவான விதி என்னவென்றால், மண்டபங்களும், சாலைகளும் கருவறைக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த விதி மேற்கட்டுமானத்திற்கு அழகியல் கவர்ச்சியைக் கொடுத்து, அதைக் காண்பதற்கு எளிதாக்குகிறது. சாலைகளின் முகங்களும் வெட்டப்பட்டு வட்டத்திற்கு இணையாக அமைக்கப்படுகின்றன. சதுரம் மற்றும் வட்டக் கொள்கையை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதே பூமிஜா கட்டிடக்கலையின் தனித்துவமான அம்சமாகும். சில ஆரம்பகால கோயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறுத்துவதையும் அதற்கு மேலுள்ள அலங்காரங்களையும் தவிர்த்தன. இதனால், தூரத்திலிருந்து பார்க்கும்போது நேர்த்தியாக மென்மையாகத் தோன்றும் ஒரு மேற்கட்டுமானம் உருவானது. ஆனால் அருகில் இருந்து பார்க்கும்போது நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிற்பங்களால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது.[2]

பூமிஜா இரண்டு வழிகளில் ஒன்றில் செயல்படுத்தப்படலாம், ஒன்று சிகரம்த்திற்கு அல்லது முழு விமானத்திற்கு அல்லது கருவறைக்கும் பயன்படுத்தப்படலாம். பிந்தைய அணுகுமுறை பூமிஜாவை நாகரா கோயில் கட்டிடக்கலையின் ஒரு துணை வகையாக ஆக்குகிறது, மேலும் இது ஜகதி (மேடை) அல்லது பீடத்துடன் (தரைத்தளம்) ஒருங்கிணைக்கப்படும்போது, கோயில் பூமியிலிருந்து வெளிவருவது போல் தோற்றமளிக்கிறது.[3]

நூல்களும் காலவரிசையும்

[தொகு]

பூமிஜா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லின் நேரடிப் பொருள் "தரையிலிருந்து, பூமி, நிலம்" அல்லது "அடுக்கு" என்பதாகும்.[4] கட்டிடக்கலைச் சூழலில், பூமிஜா பாணி பற்றி சமராங்கண சூத்திரதாரா என்ற 11 ஆம் நூற்றாண்டின் செவ்வியல் கோயில் மற்றும் மதச்சார்பற்ற கட்டிடக்கலை (வாஸ்து) பற்றிய இந்து நூலின் 65 ஆம் அத்தியாயத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.[5][3]. இது 12 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட கட்டிடக்கலை பற்றிய மற்றொரு இந்து நூலான அபராஜிதப்ரிச்சையில் விவாதிக்கப்பட்ட வட இந்திய நாகரா கோயில் கட்டிடக்கலையின் பதினான்கு பாணிகளில் ஒன்றாகும். இதனால், பூமிஜா கட்டிடக்கலை 11ஆம் நூற்றாண்டிற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு, வெற்றிகரமாகப் பரவலாகப் பின்பற்றப்பட்டு, 11ஆம் நூற்றாண்டின் சமஸ்கிருத கட்டிடக்கலை நூல்களில் இடம்பெற்றது. மேட் என்பவர் 1975 இல் வெளியிட்ட ஒரு கட்டுரையின்படி, பூமிஜா பாணி கட்டிடக்கலை 9 ஆம் நூற்றாண்டில் ஆராயப்பட்டு, 10ஆம் நூற்றாண்டில் நிலைபெற்றிருக்கலாம்.[3]

1980களில் மத்தியப் பிரதேசத்தின் தொலைதூரக் கிழக்குப் பகுதிகளில் பயணம் செய்த பிறகு, பௌத்த மற்றும் இந்துக் கலை வரலாற்றறிஞரான டொனால்ட் ஸ்டாட்னர், கிபி. 7 முதல் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முன்-பூமிஜா கோயில்களின் எடுத்துக்காட்டுகளை வெளியிட்டார். இது பூமிஜா கட்டிடக்கலை எப்போது, எங்கு முதலில் ஆராயப்பட்டது என்பது குறித்த முன்மொழியப்பட்ட காலவரிசையை மாற்றியுள்ளது. ஸ்டாட்னரின் எடுத்துக்காட்டுகளின்படி, தெற்கு கோசலத்தின் (சத்தீஸ்கர்) மேற்குப் பகுதிகள் – மால்வாவிற்கு கிழக்கே தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சிகள் காலத்தில் இக்கடடிடக்கலை இருந்திருக்கலாம். அது இறுதியில் 9 முதல் 10 ஆம் நூற்றாண்டுகளில் மால்வாவில் முழுமையாக்கப்பட்டது.

இந்து மற்றும் சமணக் கோயில் கட்டிடக்கலை அறிஞரான ஆடம் ஹார்டியின் கூற்றுப்படி, 13 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய இந்து மற்றும் சமணக் கோயில்களின் பெரும்பாலான எஞ்சியிருக்கும் எடுத்துக்காட்டுகள் சமராங்கண சூத்திரதாரத்தில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன.[6][7]

மாறுபாடுகள்

[தொகு]

அபராஜிதப் பரிச்சை எனும் வாஸ்து நூல் பூமிஜா பாணியில் உள்ள மாறுபாடுகளை விவரிக்கிறது. இதில் வட்ட (வட்ட வடிவம்), நவாங்கா (செங்குத்து வடிவம்), சதுர்சா (செங்குத்து வடிவம், நான்கு பக்க நீட்சிகள்), அஷ்டசாலா (எட்டு பக்க நீட்சிகள்) மற்றும் பிற துணைப் பாணிகள் அடங்கும்.

சமராங்கண சூத்திரத்தில் பூமிஜா கட்டிடக்கலையின் பதினாறு வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன.[8][6]. ஆடம் ஹார்டி, இவற்றை விளக்கும் மற்றும் அதில் உள்ள கணித விகிதங்களை வழங்கும் சமஸ்கிருத செய்யுள்களை, மட்டியா சல்வினியின் மொழிபெயர்ப்புகளுடன் வெளியிட்டுள்ளார்.

பூமிஜா பாணியின் அறியப்பட்ட ஆரம்பகால எடுத்துக்காட்டு, [[நர்மதை ஆறு}நர்மதை ஆற்றின்]] தெற்கே, சேகான் மற்றும் கார்கோன் இடையே உள்ள உன் கிராமத்தில் உள்ள இடிபாடுகளுடன் எட்டு இந்துக் கோயில்கள் பூமிஜா பாணியில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள உதய்பூரில் (போபாலுக்கு வடக்கே) அமைந்துள்ள 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நீலகண்டேஸ்வரர் கோயில், பூமிஜா பாணியின் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு, மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.[8] நீலகண்டேஸ்வரர் கோயிலின் சிகரம் ஒரு நட்சத்திர வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் உள்ளே நான்கு லதாக்கள் (கால் பகுதிகள்) உள்ளது. அவற்றுக்குள் ஐந்து வரிசைகளில் சிறிய கோபுர வடிவங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு சதுர வடிவம் உள்ளது, இது முழு கோபுரத்தையும் உருவாக்குவதற்காக ஒரு வட்ட வடிவத்தில் தொடர்ச்சியாகச் சுழற்றப்படுகிறது.

பூமிஜா பாணி மாறுபாடுகளுடன் வடக்கு ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெற்குப் பகுதிகளுக்கும் பரவியது. இது கிழக்கில் மகாநதிப் பள்ளத்தாக்கிற்கு அருகிலும் காணப்படுகிறது, உதாரணமாக சத்தீஸ்கரில் உள்ள அரங் மற்றும் ஒடிசாவில் உள்ள 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சில கோயில்களில் இது காணப்படுகிறது.

                                                                                                                                                              ==படக்காட்சிகள்==

மேற்கோள்கள்

[தொகு]
  1. Encyclopedia Britannica (2018), Bhumija, in South Asian Arts
  2. Stella Kramrisch (1974), Hindu Temple: Volume 2, Calcutta University Press (Orig: 1946), pages 389–393
  3. 3.0 3.1 3.2 M. S. Mate (1975), A Note on Bhumija, Bulletin of the Deccan College Post-Graduate and Research Institute, Vol. 35, No. 1/2, pp. 76-78, JSTOR 42930944
  4. Hajarnis, Maulik; Raval, Bhagyajit (2016). "Evolution of Bhumija Shikhara and Distribution of Bhumija Shrines in India". Chitrolekha International Magazine on Art and Design 6 (3): 16–24. doi:10.21659/chitro.v6n3.03. http://pdfs.semanticscholar.org/7b50/9aa0c6d6fec32d80819b865f26a3726dda31.pdf. 
  5. Adam Hardy (2015), Theory and Practice of Temple Architecture in Medieval India, Indira Gandhi National Center for the Arts, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789381406410, pp. 203–252
  6. 6.0 6.1 R. ALI, Bhumija Temples of Malwa and Maharashtra : An Observation, Proceedings of the Indian History Congress, Vol. 48 (1987), pp. 754-759, JSTOR 44141797
  7. Donald M. Stadtner (1981), The Siddhesvara Temple at Palāri and the Art of Kosala during the Seventh and Eighth Centuries, Ars Orientalis, Vol. 12, pp. 49-56, JSTOR 4434249
  8. DANDWATE, P. P., B. S. GAJUL, and P. S. JOSHI (2004), BHUMIJA TEMPLES WITH BRICK SHIKHARA AT LONI BHAPKAR AND PALASDEV. Bulletin of the Deccan College Research Institute 64/65, pp. 147-55, JSTOR 42930643

ஆதார நூல்

[தொகு]