உள்ளடக்கத்துக்குச் செல்

பூட்டிய அறை மர்மப்புனைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூட்டிய அறை மர்மப்புனைவு (Locked room mystery) என்பது ஒருவித இலக்கியப் பாணி. துப்பறிவுப் புனைவு மற்றும் மர்மப் புனைவுப் பாணிகளின் உட்பாணி இது. ஒரு மூடிய சூழ்நிலையில் (எ. கா. பூட்டப்பட்ட அறை) குற்றம் நிகழ்வதையும் அதைச் செய்தவரைத் துப்பறிவாளர்(கள்) கண்டுபிடிப்பதையும் கதைக்கருவாகக் கொண்டு எழுதப்படும் புனைவுகள் இப்பாணியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்வகைப் புனைவுகளில், குற்றவாளி வெளியாள் கிடையாது, அறிமுகப்படுத்தப்பட்ட கதை மாந்தருள் ஒருவராகத் தான் இருக்க முடியும். அவர்களுள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அக்குற்றத்தைச் செய்வதற்கான உந்துதல்கள் இருக்கும். துப்பறிவாளர் எப்படி ஒவ்வொருவராக ஆராய்ந்து இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பது இவ்வகைப் புனைவுகளின் மையக் கருவாக அமையும்.

1954ல் வெளியான அந்த நாள் என்ற திரைப்படம் இவ்வகைப் புனைவுக்கு தமிழில் ஒரு எடுத்துக்காட்டு. இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.