பூஞ்சைக் கட்டுப்படுத்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூஞ்சைக் கட்டுப்படுத்திகள் என்பது பூஞ்சைகளை அழிக்காமல் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது ஆகும். இச்சொல்லானது பெயர்ச்சொல் மற்றும் உரிச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. விவசாயம், உணவுத்துறை, மேற்பூச்சு மற்றும் மருத்துவத் துறையில் பூஞ்சைக் கட்டுப்படுத்திகள் பெரும்பங்கு வகிக்கிறது.

பூஞ்சைக்கொல்லி மருந்துகள்[தொகு]

ப்ளக்னோசோல் (Fluconazole) என்ற பூஞ்சைக் கொல்லி மருந்தானது வாய்வழியாக அல்லது ஊசியின் உதவியால் நரம்புகளின் வழியாக உடலினுள் செலுத்தப்படுகிறது. பல விதமான பூஞ்சைத் தொற்றுகளுக்கு மருந்தாகப் பயன்படும் ப்ளக்னோசோல் குறிப்பாக வாய், தொண்டை, குருதிப் பாதை மற்றும் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் காண்டிடா (candida) தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

புற்று நோய் சிகிச்சையினால் குருதி வெள்ளையணு குறைபாடு உடையவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை கொண்டவர்கள், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் போன்ற குறைவான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்களுக்கு நோய்தொற்று ஏற்படாமல் தடுக்க ப்ளக்னோசோல் உதவுகிறது. இது பூஞ்சையின் செல்சவ்வு உருவாக்கத்தில் குறுக்கிட்டு அதன் வளர்ச்சியை தடுக்கிறது.

இட்ராகனசோல் (Itraconazole) (R51211)[தொகு]

பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் டிரையசோல் (Triazole) பூஞ்சைக் கட்டுப்படுத்திகள் வகையைச் சார்ந்த இட்ராகனசோல் (Itraconazole) (R51211) 1984 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இம்மருந்தானது வாய்வழியாக அல்லது ஊசியின் உதவியால் நரம்புகளின் வழியாக உடலினுள் செலுத்தப்படுகிறது. அசுபர்சில்லசு பூஞ்சைக்கு எதிராக இட்ராகனசோல் சிறப்பாக செயல்படுவதால், ப்ளக்னோசோலை விட சிறந்த மருந்தாக விளங்குகிறது.

இருப்பினும் வோரிகானசோல் அல்லது போசாகானசோல் (Voriconazole or Posaconazole) இட்ராகனசோலை விட சிறந்த மருந்தாக செயல்படுகிறது. பூஞ்சைக் கட்டுப்படுத்தியான இட்ராகனசோலின் செயல்வழி முறையானது மற்ற அசோல் (Azole) கட்டுப்படுத்திகளின் செயல்முறையை ஒத்துள்ளது.

உணவு பதப்படுத்தலில் பூஞ்சைக் கட்டுப்படுத்திகள்[தொகு]

உணவு மற்றும் பானங்களை பாதுகாப்பதில் பூஞ்சைக் கட்டுப்படுத்திகள் பயன்படுகிறது. சோடியம் பென்சோயேட் (Sodium benzoate) மற்றும் பொட்டாசியம் சார்பேட் (Potassium sorbate) ஆகிய இரு சேர்மங்களும் எடுத்துக் காட்டுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]