பூச்சூலகம்



பூச்சூலகம் (Ovary (botany)) பூக்கும் தாவரங்களில், சூற்பை (Ovary) என்பது மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பான, பூச்சூலகத்தின் (Gynoecium) ஒரு முக்கியமான அடிப்பகுதியாகும். குறிப்பாக, இது பூச்சூல்களைத் (Ovules) தன்னுள்ளே பாதுகாப்பாக வைத்திருக்கும். பூச்சூலக இலையின் (Carpel) ஒரு பகுதியாகும். இது அல்லிதழ், புல்லிதழ்களின் அடிப்பகுதிக்கு மேலோ, கீழோ அல்லது அவற்றுடன் இணையும் இடத்திலோ அமைந்திருக்கும்.[1] பூச்சூற்பைக்கு மேலே சூல்தண்டும் (Style), அதன் நுனியில் சூல்முடியும் (Stigma) காணப்படுகின்றன. சூல்முடியில் வந்தடையும், மகரந்தத் தூள் முளைத்து, சூல்தண்டின் வழியாகக் கீழ்நோக்கி வளர்ந்து, சூற்பையை அடைந்து, ஒவ்வொரு சூலையும் கருவுறச் செய்கிறது. காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். சில மலர்களில் சூற்பைகள் மிகவும் ஒடுக்கப்பட்டு, அளவில் சிறியதாகவும், மாறுபட்டும் காணப்படுகின்றன.
சூற்பையின் வகைகள்
[தொகு]சூற்பையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் (Locules) கொண்டுள்ளது. சூற்பையின் உள்ளே உள்ள இந்த அறைகளில்தான் சூல்கள் அல்லது முதிர்ச்சியடையாத விதைகள் காணப்படுகின்றன.[2] கனியாக மாறும் போது, இந்த அறைகள் சதைப்பற்றுள்ள பகுதியால் நிரப்பப்பட்டிருக்கலாம் அல்லது வெற்றிடமாக இருக்கலாம். சூற்பையில் உள்ள அறைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, மலர்கள் மற்றும் கனிகள் ஓர் அறை (unilocular), ஈரறை (bilocular), மூவறை (trilocular) அல்லது பல அறைகளைக் (multilocular) கொண்டவை என வகைப்படுத்தப்படுகின்றன.
இணையாச் சூலக இலைகளைக் கொண்ட (Apocarpous) மலர்களில், ஒவ்வொரு சூலக இலையும் தனித்தனியான சூற்பையைக் கொண்டுள்ளன. ஆனால், இணைந்த சூலக இலைகளைக் கொண்ட (Syncarpous) மலர்களில், பல சூலக இலைகள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான சூற்பையை உருவாக்குகின்றன. இது போன்ற நிலைகளில் சூலக இலைகளுக்கு இடையே தடுப்புச் சுவர்கள் (Septa) காணப்படலாம். தடுப்புச் சுவர்கள் உள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்து, சூலகத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கையானது சூலக இலைகளின் எண்ணிக்கைக்குச் சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Simpson, M. G. (2011). Plant Systematics (2nd ed.). Academic Press. p. 375. ISBN 978-0-12-374380-0.
- ↑ Beentje, Henk (2010). The Kew Plant Glossary. Richmond, Surrey: Royal Botanic Gardens, Kew. p. 82. ISBN 978-1-84246-422-9.