பூச்சிகள் அருங்காட்சியகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூச்சிகள் அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின், கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.

இந்த அருங்காட்சியகமானது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சி இயல் துறையால் ஆறாயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, பாக்கித்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.[1] இங்கு கண்ணாடிக் கூண்டில் பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு அருகே அதன் மேல்புறம் உள்ள எல்.இ.டி. திரையில், அந்தப் பூச்சிகளின் வகை, அவற்றின் நன்மை - தீமைகள், அவற்றை எந்தெந்த நாட்டில் பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டப்பட்டுள்ளன. மேலும் பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலக அளவில் வெளிவந்திருக்கும் நூல்கள், தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பெரிய கரையான் புற்றுகள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிவாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது. [2] இந்த அருங்காட்சியகமானது 2018 மார்ச் 26 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமியால் திறந்துவைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்தியாவிலேயே முதல்முறையாக கோவையில் அமையவுள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் - காட்சிப்படுத்தப்படவுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள்". செய்தி. ஜெயா டீவி. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2017.
  2. கா.சு.வேலாயுதன் (13 சூலை 2017). "பூச்சிகள் இன்றி சுழலாது உலகு!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2017.
  3. "நாட்டின் மிகப் பெரிய முதல் பூச்சி அருங்காட்சியகம்!". செய்தி. padasalai.net. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)