பூக்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூக்டி (Fugdi) என்பது மகாராட்டிரம் மற்றும் கோவா மாநிலங்களின் பூர்வகுடி மக்களால் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் ஆகும். கொங்கன் மண்டல பெண்கள் விநாயகர் சதுர்த்தி மற்றும் புனிதப் பயணம் போன்ற பண்டிகை நாட்களில் இந்நடனத்தை ஆடுகின்றனர். அல்லது கோவா மாநிலத்தின் நாட்டுப்புற நடனமான தாலோ போன்ற நடனத்தின் இறுதியில் இந்த நடனம் ஆடப்படுகிறது [1]. பூக்டி நடன பாணியானது சில பண்டைய கோவா மக்களின் மரபுகளிலிருந்து உருவாக்கப்பட்டதாக சில வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் கருதப்படுகிறது. பெண்கள் வழக்கமாக தங்கள் அன்றாட நடைமுறைகளிலிருந்து எழும் சலிப்பிலிருந்து தப்பிக்க ஓய்வு எடுக்கும் மாதங்களான, முக்கியமாக கிரிகோரியன் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள பத்ரபாதா எனப்படும் இந்து மாதங்களான ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் பூக்டி நடனம் நிகழ்த்தப்படுகிறது. மதம் மற்றும் சமயம் சார்ந்து மட்டுமல்லாமல் பல்வேறு அரசு விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் பரவலாக பூக்டி நடனம் ஆடப்பட்டு வருகிறது [2].

தோற்றம்[தொகு]

பூக்டி மகாராட்டிரம் மற்றும் கோவா மாநிலங்களின் புராதனமான கலாச்சார மரபுகளை பிரதிபலிக்கும் ஒரு கலை வடிவமாக அறியப்படுகிறது. இந்நடனம் பல்வேறு மத மற்றும் சமூக நிகழ்வுகளின் போது ஆடப்படுகிறது. பூக்டி பொதுவாக புரட்டாசி மாதத்தில் நிகழ்த்தப்படும் நடனமாகும். பெண்களின் வழக்கமான சலிப்பான வேலைகளுக்கிடையே ஒரு தற்காலிக ஓய்வு இடைவெளியை இந்த நடனம் அவர்களுக்குத் தருகிறது. தனித்துவமான பூக்டி நடன பாணி கால்நடை மேய்க்கும் இடையர் சமூக பெண்களிடம் காணப்படுகிறது. விரதங்களின் போது பெண் கடவுளான மகாலட்சுமி முன்பு பூக்டியிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு வகை நடனமான காலாசி பூக்டி ஆடப்படுகிறது.

நடன நுட்பம்[தொகு]

பெண்கள் ஒரு வட்டம் அல்லது வரிசையாக நின்று பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி பாடிக்கொண்டே ஆடுகின்றனர். பூக்டி நடனத்தை பொதுவாக பெண்கள் கிராமப்புறங்களில் வட்ட வடிவமாகவும் வனப்பகுதிகளில் வரிசையிலும் நின்று ஆடுகின்றனர்.[3]. இந்த நடனமானது இந்து கடவுள்களின் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது. துவக்கத்தில் மெல்லிய தாளத்துடன் துவங்கி பின்னர் உச்சத்தில் தாளம் வேகத்தை அடைகிறது. தனித்துவமான இசைக்கருவிகள் எதுவும் இந்த நடனத்தில் துணைக்கு வைத்துக் கொள்வது இல்லை. தாளம் உச்சநிலையை அடையும்போது பெண்கள் வாய் வழியே பூ ("FOO") என்ற ஒருவித குலவையொலியை எழுப்பி அதற்கேற்ப இந்த நடனத்தை மிகுந்த பொருத்தப்பாட்டுடனும் ஒத்திசைவாகவும் ஆடுகின்றனர். இதன் காரணமாகவே இந்த நடனம் பூக்டி அல்லது புக்டி என்று பெயர்பெற்றது. நிலையான சில நடன அசைவுகள், கை சைகைகள், கைதட்டல்கள் போன்றவை மட்டுமே இந்நடனத்தின் கூறுகள் ஆகும். சில சிறப்பு வகை பூக்டி நடனங்களில் பல இசைக்கருவிகள் உபயோகிப்பதும் உண்டு. கோவாவின் சில பகுதிகளில் பெண்கள், மடிப்புகளுடன் கூடிய நவாரி வகை புடவைகளை அணிந்துகொண்டு, கைதட்டலுடன் மெல்லிசைப் பாடல்களைப் பாடிக் கொண்டு நடனமாடுகிறார்கள். எந்த இசையும் இல்லாமல் ஆடுவது பூக்டி நாட்டுப்புற கலை வடிவத்தின் தனித்துவம் ஆகும். பெண்கள் முதலில் ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு பின்னர் ஜோடியாகவும் பூக்டி நடனத்தை பொழுதுபோக்கிற்காகவும் ஆடி மகிழ்கின்றனர். விநாயகர் சதுர்த்தி திருவிழாக்களின் போது பூக்டி நடனப்போட்டிகளும் விநாயகர் கதுர்த்தி விழாவின் ஐந்தாம் நாள் அன்று விநாயகர் சிலைகளை நீரில் கரைக்க கொண்டு செல்லும் பொழுதும் இந்த நடனம் ஆடப்படுவது வழக்கமாக உள்ளது. [4].

துணை வடிவங்கள்[தொகு]

கிர்கி, சைக்கிள். ரகத், சிம்மா, கார்வார், பசு பூக்டி, கோம்தா, குமா மற்றும் பக்வா ஆகியவை பூக்டி நடனத்தின் பிரபலமான சில துணை வடிவங்களில் அடங்கும். நீண்ட தொலைவுகளுக்கு தண்ணீர் எடுக்கச் செல்லும் வேளைகளில் களைப்பு தெரியாமல் இருக்க காலாசி பூக்டி நடன வகை தோன்றியது. தண்ணீர் கிணறுகளின் வெளியே வெற்று குடுவைகளை ஊதி பெண்கள் இவ்வகை நடனத்தை ஆடுவர். தேங்காய் சிரட்டைகளை கைகயால் தட்டி ஓசை எழுப்பி கட்டி பூக்டி என்ற பிரபலமான வகை பூக்டி நடனம் ஆடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்டி&oldid=2923157" இருந்து மீள்விக்கப்பட்டது