புஷ்பலதா தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஷ்பலதா தாஸ் (Pushpalata Das) (1915-2003) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், சமூக சேவகரும், காந்தியவாதியும் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். [1] இவர் 1951 முதல் 1961 வரை மாநிலங்களவையில் உறுப்பினராகவும், அசாம் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். [2] கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை மற்றும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் அசாம் அத்தியாயங்களின் தலைவராக பணியாற்றினார். [3] சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூசண் கௌரவத்தை இவருக்கு வழங்கியது. [4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கனகலதா உதயனில் ஒரு சிற்பம் 1942 காவலர்கள் துப்பாக்கிச் சூட்டைக் காட்டுகிறது

புஷ்பலதா 1915 மார்ச் 27 அன்று அசாமின் வடக்கு இலக்கிம்பூரில் இராமேசுவர் சைக்கியா மற்றும் சுவர்ணலதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். தாஸ் பான்பசார் பெண்கள் உயர்நிலை பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தார். [1] பள்ளி நாட்களிலிருந்தே தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்கிய இவர் முக்தி சங்கா என்ற பெயரில் ஒரு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். 1931 ஆம் ஆண்டில், இவரும் இவரது தோழர்களும் பிரித்தானிய அரசு புரட்சியாளரான பகத்சிங்கை தூக்கிலிட்டதற்கு எதிராக ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்து பள்ளியிலிருந்து வெளியேறினர். இவர் ஒரு தனியார் மாணவராக தனது படிப்பைத் தொடர்ந்தார் .1934 இல் மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் தனது இடைநிலை படிப்பை முடித்தார். பின்னர், இவர் ஆந்திர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1938 இல் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். பின்னர், குவகாத்தியின் ஏர்ல் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பிற்காக தன்னைப் பதிவுசெய்தார். அங்கு தனது மாணவர் அரசியலைத் தொடர்ந்தார்; இவர் 1940 இல் கல்லூரி சங்கத்தின் செயலாளராக இருந்தார். இந்த சமயத்தில்தான், காந்திஜி தனிநபர் சத்தியாக்கிரகத்திற்கு அழைப்பு விடுத்தார். இது ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்படும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முன்னோடியாகவும் இருந்தது. [5] தாஸ் இந்த இயக்கத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்றார். இது அவரது சட்ட படிப்புகளை குறைத்தது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தேசிய திட்டக் குழுவின் மகளிர் துணைக் குழுவின் உறுப்பினராக இவர் கொண்டிருந்த தொடர்பு காரணமாக, அந்த ஆண்டு மும்பைக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் அங்கேயே இருந்தார். இவரது செயல்பாடுகள் மிருதுலா சாராபாய் மற்றும் விஜய லட்சுமி பண்டிட் மற்றும் அசாம் சட்டமன்றத்தின் அப்போதைய உறுப்பினரான ஓமியோ குமார் தாஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்கியது, [6] இவர் 1942 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அசாம் திரும்பிய இவர் சாந்தி பாகினி மற்றும் மிருத்யு பாகினி என்ற இரண்டு அமைப்புகளை உருவாக்கினார். [7] செப்டம்பர் 1942 இல், தாஸ் மற்றும் மிருத்யு பாகினி தோழர்கள் இந்திய தேசியக் கொடியை கொண்டு உள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு போராட்டத்தை நடத்தினர். இந்த ஊர்வலத்தில்தான், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இது இவரது சகாவான கனகலதா பரூவாவின் மரணத்திற்கு வழிவகுத்தது. அதற்குள், இவர் ஏற்கனவே அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் உறுப்பினராகவும், அசாம் காங்கிரசுடியின் மகளிர் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் மாறிவிட்டார். மேலும் கிழக்கு பாக்கித்தானிலிருந்து அசாமை வெளியேற்றுவதற்காக பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. [1]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Pushpalata Das (1976). Rajarama Sukla rashtriyaatma varcasva evam krtitva, san 1898-1962. Durga Prakasana. பக். 359. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பலதா_தாஸ்&oldid=3564497" இருந்து மீள்விக்கப்பட்டது