புவிராஜ பண்டாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புவிராஜ பண்டாரம் 1580 களின் தொடக்கத்திலிருந்து 1591 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னனாவான். பெரிய பிள்ளை என்னும் அரசனுக்குப் பின் அரசு கட்டிலேறிய இவன், அக் காலத்தில் யாழ்ப்பாண அரசில் செல்வாக்குச் செலுத்திய போத்துக்கீசரினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கண்டி இளவரசிக்கு அடைக்கலம்[தொகு]

கண்டி அரச மரபினரின் வரலாற்றோடு தொடர்புள்ள சில நிகழ்வுகள் மூலமே புவிராஜ பண்டாரம் முதன் முதலாக அறியப்படுகிறான். 1582 ஆம் ஆண்டையொட்டிய காலப்பகுதியில் சீதாவாக்கை அரசன், கண்டி மீது படையெடுக்கவே, கண்டி அரசன் குடும்பத்தோடு திருகோணமலைக்கு ஓடுகிறான். அங்கே அரசனும் அரசியும் இறக்க, அவர்களுடைய சிறுவயது மகளும், மருமகனான இளவரசன் யமசிங்கனும் யாழ்ப்பாணத்துக்கு வந்து புவிராஜ பண்டாரத்திடம் அடைக்கலம் புகுகின்றனர். இந்தச் சிறுமியே பிற்காலத்தில் கண்டியரசனான விமலதர்மசூரியனை மணந்து கண்டி அரசியான டோனா கத்தறீனா என்பவளாகும்.

மன்னாரில் போத்துக்கீசரோடு போர்[தொகு]

போத்துக்கீசர் கைப்பற்றி வைத்திருந்த யாழ்ப்பாணத்துக்குச் சொந்தமான மன்னார்த் தீவில் இருந்து அவர்களைத் துரத்தி அவ்விடத்தை விடுவிப்பதில் புவிராஜ பண்டாரம் தீவிரமாக இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டுவாக்கில் பெரும் படையுடனும், ஆயுத தளவாடங்களுடனும் மன்னாரைத் தாக்கினான். இருந்தும், அக்காலத்து நவீன ஆயுதங்களைக் கையாள்வதில் யாழ்ப்பாணத்துப் படைகளுக்குப் போதிய பயிற்சி இல்லாததாலோ என்னவோ இம் முயற்சியில் புவிராஜ பண்டாரத்துக்கு வெற்றி கிட்டவில்லை. 1591 ஆம் ஆண்டில் மீண்டும் தென்னிந்தியக் கப்பல் தலைவனான கொட்டி மூசா மரிக்கார் என்பவனோடு சேர்ந்து கொண்டு மன்னாரைத் தாக்க முயற்சித்தும் மீண்டும் அவனுக்குத் தோல்வியே கிடைத்தது.

போத்துக்கீசரின் யாழ்ப்பாணப் படையெடுப்பு[தொகு]

புவிராஜ பண்டாரத்தைத் தண்டிக்க எண்ணிய போத்துக்கீசர் 1591 ஆம் ஆண்டில் அந்தரே பூர்த்தாடு என்பவன் தலைமையில் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தனர். நிகழ்ந்த போரில் நல்லூருட் புகுந்த போத்துக்கீசர் படை அரசனைப் பிடித்தனர். அரசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட அவன் தலை கொய்யப்பட்டு இறந்தான்.


உசாத்துணைகள்[தொகு]

  • ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவிராஜ_பண்டாரம்&oldid=2096712" இருந்து மீள்விக்கப்பட்டது