புள்ளிப் பொருத்துக் கண்ணாடியிடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புள்ளிப் பொருத்துக் கண்ணாடியிடல் என்பது கட்டிடங்களில் கண்ணாடிகளைக் குறித்த புள்ளிகளில் மட்டும் தாங்குமாறு அமைத்தல் ஆகும். இது கண்ணாடிகளை உலோகம், மரம், நெகிழி போன்றவற்றிலான சட்டங்களைப் பயன்படுத்தி அவற்றின் ஓரங்களைப் பற்றித் தாங்கும் வழமையான முறையில் இருந்து வேறுபட்டது. இம்முறையில் கண்ணாடித் தகட்டினூடாகத் துளையிட்டு அத்துளைகளில் பொருத்தப்படும் இதற்கென வடிவமைக்கப்பட்ட பொருத்திகளைப் பயன்படுத்தித் தாங்கும் அமைப்புக்களுடன் இணைப்பர்.

வகைகள்[தொகு]

புள்ளிப் பொருத்துக் கண்ணாடியிடலைப் பொருத்தும் முறைகளின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. . துருத்தும் பொருத்தித்தலை முறை
  2. . உள்ளமிழ்ந்த பொருத்தித்தலை முறை

இவற்றில் துருத்தும் பொருத்தித்தலை முறை என்பது கண்ணாடியில் இடப்படும் துளையூடாக கண்ணாடித் தகட்டை இரண்டு பக்கங்களிலுமிருந்து பிடித்துக்கொள்ளும்படி அமைக்கும் முறை ஆகும். இதில் பொருத்திகளின் தலைகள் வெளிப்புறக் கண்ணாடியின் மேற்பரப்பில் இருந்து வெளியே துருத்திக்கொண்டிருக்கும். இரண்டாவது முறையில் கண்ணாடியில் தடிப்பினுள் தலை அடங்கக்கூடியவாறு கூம்பு வடிவத் துளையிட்டுப் பொருத்துவது ஆகும். இரண்டாவது முறையில் வெளிப்புறத்தில் மட்டமான கண்ணாடிப் பரப்பைப் பெறக்கூடியதாக இருப்பதால் அங்காங்கே பொருத்திகளின் தலைப்பகுதி வெளியே துருத்திக்கொண்டிருக்கும் முதலாவது முறையைவிட இம்முறையையே பல வடிவமைப்பாளர்கள் விரும்புகின்றனர்.


எனினும் முதலாவது முறையில் பொருத்தியில் கண்ணாடியின் தாங்கு பரப்பு அதிகம் இதனால் அமைப்பு அடிப்படையில் இது உறுதியானது. இரண்டாவது முறையில் துளை பொருத்தியின் தலையையும் உள்ளடக்கக்கூடியவகையில் பெரிதாக இருப்பதாலும் தாங்கு பரப்புக் குறைவாக இருப்பதாலும் அமைப்பியல் அடிப்படையில் இப்பொருத்து வலுக் குறைந்தது. இந்தக் குறைபாட்டைத் தீர்ப்பதற்காக திருத்தியமைக்கப்பட்ட பொருத்து முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வெப்பக்காப்புத் தேவைகளுக்காக கட்டிடங்களில் இரட்டைக் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இவ்வாறான இடங்களில் இரட்டைக் கண்ணாடியின் உட்புறக் கண்ணாடித் தகட்டில் மட்டுமே துளையிட்டுப் பொருத்துக்களை இணைக்க முடியும். இதனால் வெளிப்புறக் கண்ணாடிப் பரப்பில் பொருத்துப் புள்ளிகள் தெரியாதவாறு அமைக்கலாம்.

தாங்கும் அமைப்புக்கள்[தொகு]

புள்ளிப் பொருத்துக் கண்ணாடியிடலில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள் பாதுகாப்பு வகையிலான ஒட்டுக் கண்ணாடிகளாக இருப்பது வழக்கம். தற்செயலாக உடைந்தால் உயரத்திலிருந்து விழும்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தடுப்பதற்காகவே இவ்வாறான கண்ணாடிகள் பயன்படுகின்றன. வழமையான சட்டங்களால் தாங்கப்படும் கண்ணாடியிடல் போலன்றி, புள்ளிப் பொருத்துக் கண்ணாடியிடலில் கண்ணாடியும் அமைப்பு விசைகளைத் தாங்கவேண்டியதாக உள்ளது. விசைகளுக்கு ஈடுகொடுப்பதில் கண்ணாடிகளுக்கு உள்ள இயல்பான குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு இவ்வகையான அமைப்புக்கள் வடிவமைக்கப்படுகின்றன. கண்ணாடித் தகடு முழுவதிலும் ஏற்படக்கூடிய தகைப்புக்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான கணினி மூலமான கணிப்பு முறைகள் தற்போது உள்ளதால் இவ்வகையான வடிவமைப்புக்களைத் துல்லியமாகச் செய்யக்கூடியதாக உள்ளது.


புள்ளிப் பொருத்துக் கண்ணாடியிடல் முறையைப் பயன்படுத்தி அதிக உயரமும் அகலமும் கொண்ட கண்ணாடிச் சுவர்களும், கூடிய அகல்வுகளைக் கொண்ட கண்ணாடிக் கூரைகளும் அமைக்கப்படுவதால் அவற்றைத் தாங்குவதற்காகத் தனியான அமைப்புக்களும் முக்கியமானவை. இவ்வாறான அமைப்புக்கள், எஃகுத் தண்டுகள், எஃகுக் கம்பி வடங்கள், ஒட்டுக் கண்ணாடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக இவ்வமைப்புக்கள் பருமானாக இல்லாமல் மெல்லிய கூறுகளைக் கொண்டு அமைக்கப்பட்டவையாக இருப்பதால் கட்டிடங்களுக்கு புதுமத் தோற்றத்தையும் கொடுக்கின்றன.