புள்ளலூர்ப் போர்
புள்ளலூர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
சாளுக்கிய-பல்லவ போர்கள் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
சாளுக்கியர் | பல்லவ இராச்சியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
இரண்டாம் புலிகேசி | முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், சிறுத்தொண்ட நாயனார் | ||||||
பலம் | |||||||
கிடைக்கவில்லை | கிடைக்கவில்லை |
புள்ளலூர்ப் போர் (Battle of Pullalur) 618-19 ஆண்டுகளில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையில் காஞ்சிபுரத்தில் இருந்து பத்துக்கல் (15 கி.மீ.) தொலைவில், அரக்கோணம் சாலையில் திருமால்பூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள[1] புள்ளலூர் அல்லது பொள்ளிலூர் என்னும் இடத்தில் நடந்த போராகும். மகேந்திரவர்மன் ஆட்சியில் இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மேல் படை எடுத்து வந்து அதன் வடபகுதியாகிய ஆந்திர பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும், பல்லவத் தலைநகரமான காஞ்சிபுரத்தின் மேல் புலிகேசி படையெடுத்து வந்தான். மகேந்திரவர்மன் புள்ளலூர் என்னும் இடத்தில் எதிர்த்துப் போர்செய்து அவனையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் முறியடித்தான்[2]. இந்தப் போரில் இளவரசனாகிய நரசிம்மவர்மனும் போர் செய்திருக்கக்கூடும்[3].
இப்போரில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டு தான் இழந்த பல்லவ பேரரசின் வடபகுதியை மகேந்திரவர்மன் மீட்டான். ‘புள்ளலூரில் மகேந்திரன் தன் பகைவர்களை அழித்தான்’ என்று இரண்டாம் நந்திவர்ம பல்லவனது காசக்குடி பட்டயம் கூறுகிறது[4].
காரணங்கள்
[தொகு]பல்லவர்கள் ஆறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் முதன்மையான அதிகார மையமாக விளங்கி வந்தனர். இவர்களின் நட்பு நாடாக இருந்த விஷ்ணுகுண்ட இராச்சியத்தை சாளுக்கியப் பேரரசை விரைவாக விரிவாக்கும் நோக்குடன் இரண்டாம் புலிகேசி கவர்ந்தான். இதனால் சினமுற்ற பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் தொடர்ந்து பல போர்கள் மூண்டன.[5]
நிகழ்வுகள்
[தொகு]617–18இல் இரண்டாம் புலிகேசி வேங்கி மீது படையெடுத்து அதனைக் கைப்பறினான்.[6] வேங்கியின் வெற்றியைத் தொடர்ந்து தென்முகமாக பயணித்து பல்லவர்களை காஞ்சியுடன் மட்டுப்படுத்தினான். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் புலிக்கேசியைகாஞ்சியிலிருந்து ஒன்பதுக் கல் தொலைவிலிருந்த புள்ளலூர் என்னுமிடத்தில் எதிர்கொண்டான்.[5][6] இந்தப் போரில் மகேந்திரவர்மன் தோல்வியுற்றதாக நம்பப்படுகின்றது.[6]
அய்கொளெக் கல்வெட்டில் இந்தப் போரைக் குறித்து இரண்டாம் புலிகேசி இவ்வாறு விவரிப்பதாக உள்ளது:
அவனது ஆறுமடங்கு படைகளுடன், பாரம்பரியப் படைகளும் மற்றவர்களுமாக, நூறு கொடிகளுடனும் குடைகளுடனும் இருட்டில் அப்பழுக்கற்ற மத்துக்களுடன் வீரத்துடனும் ஆற்றலுடனும் எதிரிகளின் படைகளைக் கடைந்தனர்; அவனது மேலெழும் அதிகாரத்தை எதிர்த்த பல்லவ மன்னனின் சிறப்பு, அவனது அழிபட்ட படைகளின் தூசியால், காஞ்சிபுரத்தின் சுவர்களுக்குப் பின்னால் மறைந்தது; [7]
காசக்குடி பட்டயம் கூறுவது:
அப்போது புவியை ஆண்டுவந்த மகேந்திரவர்மன் என்ற மன்னன் தனது முதன்மை எதிரிகளை புள்ளலூரில் அழித்தான்[7]
இந்தப் பட்டயத்தில் மகேந்திரனின் எதிரிகள் யார் என்று குறிப்பிடப்படவில்லை; அதனால் சில வரலாற்றாளர்கள் இதனை பல்லவர்கள் சாளுக்கியர்களை வெற்றி கொண்டதாக கருதுகின்றனர். [7] இருப்பினும், பல்லவர்கள் வெற்றியடைந்திருக்க இயலாது என மற்றவர்கள் கருதிகின்றனர்; சாளுக்கியர்கள் தெற்கே சென்று சேர, சோழ, பாண்டியர்களை வெற்றிக் கொண்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.[6]
பின்னதாக
[தொகு]புள்ளலூர் வெற்றியைத் தொடர்ந்து புலிக்கேசி காஞ்சியைத் தாக்கினான். ஆனால் பல்லவத் தலைநகரின் கோட்டையைத் தகர்க்க இயலவில்லை. பின்னர் தெற்கு நோக்கிச் சென்று தமிழ்நாட்டின் வடக்கு, நடுப் பகுதிகளை சூறையாடி காவிரி ஆறு வரை சென்றான். சேர, சோழ,பாண்டிய மன்னர்களின் அடிபணிதலைத் தொடர்ந்து வாதாபி திரும்பினான்.
வரலாற்றில்
[தொகு]புள்ளலூர், பின்னர் பொள்ளிலூர், என்ற இந்தச் சிற்றூரில் மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நடைபெற்றுள்ளன: 611-12இல் பல்லவர்களும் சாளுக்கியர்களும் மோதிய இதே இடத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஐதர் அலிக்கும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் 1780, 1781 பொள்ளிலூர் போர்கள் நடந்தேறின.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இரா.தினகரன் (23 சூன் 2013). "புள்ளலூர்: காணாமல் போகும் வரலாறு". தினமணி. http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2013/06/23/புள்ளலூர்-காணாமல்-போகும்-வர/article1648831.ece. பார்த்த நாள்: 17 சூலை 2015.
- ↑ "2.2 பல்லவப் பேரரசர்கள்". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2015.
- ↑ "பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2015.
- ↑ "2.1 பின்புலங்கள்". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2015.
- ↑ 5.0 5.1 Dikshit, p 93
- ↑ 6.0 6.1 6.2 6.3 Dikshit, p 94
- ↑ 7.0 7.1 7.2 Heras, p 31
உசாத்துணைகள்
[தொகு]- தீக்சித், டி. பி. (1980). வாதாபி சாளுக்கியர்களின் அரசியல் வரலாறு. அபினவ் பப்ளிகேசன்சு. (ஆங்கில மொழியில்)
- எராசு, எச். (1933). பல்லவர் வரலாற்று ஆய்வுகள். சென்னை: பி. ஜி. பவுல் & கோ. (ஆங்கில மொழியில்)