புளோரினீர்ப்பு காலக்கணிப்பு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புளோரினீர்ப்பு காலக்கணிப்பு (Fluorine absorption dating) என்பது ஒரு பொருள் நிலத்தடியில் எவ்வளவு காலம் இருந்தது என்ற கால அளவை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் ஒரு முறை ஆகும்.

நிலத்தடி நீரில் புளோரைடு அயனிகள் உள்ளன என்ற அறிவியல் உண்மையை அடிப்படையாகக் கொண்டு புளோரினீர்ப்பு காலக்கணிப்பு முறையில் காலம் அல்லது வயது நிர்ணயம் செய்யப்படுகிறது. மண்ணில் உள்ள எலும்பு முதலான பொருட்கள் காலப்போக்கில் நிலத்தடி நீரில் உள்ள புளோரினை உறிஞ்சுகின்றன. பின்னாளில் அப்பொருளில் உள்ள புளோரினின் அளவைக் கணக்கிடுவதன் மூலமாக அப்பொருள் மண்ணில் இருந்த காலத்தை மதிப்பிட முடிகிறது.

இக்காலக் கனிப்பு நடைமுறையானது சார்பு முறைமை செயல்பாடாகும். ஏனெனில், இம்முறையில் காலம் மதிப்பிடப்பட்ட பொருள் எந்தப் பகுதியில் கிடைத்ததோ அதேபகுதியில் கிடைக்கும் பிற பொருட்களின் உண்மையான வயதும் இதனடிப்படையிலேயே மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஒருவேளை கிடைத்துள்ள பொருளின் உண்மையான வயதை நிர்ணயம் செய்ய முடியவில்லையெனில் அப்பொருளின் காலமானது ஒப்பீட்டு முறையில், அதைவிட இது இளையது என்பது போல குறிக்கப்படுகிறது. ஒப்பிடப்படுகின்ற பொருட்கள் இரண்டும் ஒரே பகுதியில் இருக்க வேண்டியது கட்டாயமாகும். அப்படி இருந்தால்தான் நிலத்தடி நீரில் மாறுபடும் புளோரினின் அளவைக் கொண்டு பொருள்களின் சரியான காலத்தைக் கணிக்க முடியும்.

அனைத்து பொருட்களின் புளோரின் உறிஞ்சு திறனும் சம விகிதத்தில் இருப்பதில்லை என்ற காரணத்தால் இக்காலக் கணிப்பு தொழில் நுட்பத்திலும் துல்லியத்தன்மை குறைகிறது. ஆனாலும் உறிஞ்சுதல் விகிதக் கணக்கீடுகள் மூலமாக இக்குறைபாட்டை ஈடு செய்து கொள்வதன் மூலம் அதிக வேறுபாடுகள் களையப்பட்டு கிட்டத்தட்ட சரியான கணிப்பை மேற்கொள்ளலாம் என நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • Göksu, H. Y., M. Oberhofer and D. Regulla, editors, Fluorine dating in Scientific Dating Methods, Springer, 1991, pp 251 – 270 ISBN 978-0-7923-1461-5