புலி வண்டு
புலி வண்டு புதைப்படிவ காலம்: | |
---|---|
தன்சானியாவில் லோபிரா இனப் புலி வண்டு | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Cicindelidae |
Tribes[1] | |
வேறு பெயர்கள் | |
|
புலி வண்டு அல்லது சிசிண்டலிடே (Cicindelidae) என்பது வண்டு துணைக் குடும்பம் ஆகும். விரைவாக ஓடுதல், ஆக்ரோசமாக வேட்டையாடுதல் போன்றவற்றிற்காக இது குறிப்பாக அறியப்படுகிறது. புலி வண்டுகளில் ரிவாசிண்டெலா ஹட்சோனி என்ற இனம் வேகமான இனமாகும். அது 9 km/h (5.6 mph; 2.5 m/s) வேகத்தில் ஓடக்கூடியது. அல்லது வினாடிக்கு சுமார் 125 உடல் நீளத்தைக் கடக்கக்கூடியது. 2005 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த துணைக் குடும்பத்தில் சுமார் 2,600 இனங்களும், கிளையினங்களும் அறியப்பட்டுள்ளன. இவை ஓரியண்டல் (இந்தோ-மலாயன்) பிராந்தியத்தில் செழுமையான பன்முகத்தன்மையோடு, அதைத் தொடர்ந்து நியோட்ரோபிக்ஸ் (தென் மற்றும் நடு அமெரிக்கா) பிரிந்தியத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன. [2] சிசிண்டலிடே என்ற பெயரில் வரலாற்று ரீதியாக தரை வண்டுகளின் (Carabidae) துணைக் குடும்பமாக கருதப்பட்டாலும், 2020 ஆம் ஆண்டு முதல் பல ஆய்வுகள், சிசிண்டலிடா என்ற குடும்பமாக இது கருதப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. [3]
விளக்கம்
[தொகு]புலி வண்டுகள் பெரும்பாலும் பெரிய புடைத்த கண்கள், நீண்ட, மெல்லிய கால்கள், தலையில் இரண்டு உணர் நீட்சிகள், இரண்டு பெரிய வளைந்த கூர்மையான முனையைக் கொண்ட கீழ்த்தாடைப் பற்களைக் கொண்டிருக்கும். மேலும் ஓடுவதற்கு ஏற்ற நீண்ட, மெல்லிய ஆறு கால்களைக் கொண்டிருக்கும். இவற்றின் முன் இறக்கைகள் மாறுபாடு அடைந்து உறுதியான கவசம்போன்று உடலின் மேற்பகுதியில் காணப்படும். இந்தக் கவசம் எளிட்ரா என்று அழைக்கபடுகிறது. புலிவண்டுகள் இந்த எளிட்ராவை முதலில் தூக்கி அதனடியில் உள்ள இறக்கைகளை அசைத்துப் பறக்கும். இந்தக் கவசமானது பல நிறங்களைக் கொண்டதாக, பலபுள்ளிகள், அழகிய வடிவப்போடு இருக்கும். வளர்ந்த வண்டுகள், குடம்பிகள் என அனைத்தும் வேட்டையாடும் தன்மைக் கொண்டவை. சிசிண்டெலா பேரினமானது உலகம் முழுக்க பொருத்தமான வாழ்விடங்களில் பரவியுள்ளது. டெட்ராச்சா, ஓமஸ், ஆம்ப்ளிசீலா மற்றும் மான்டிகோரா ஆகியவை நன்கு அறியப்பட்ட பிற இனங்களாகும். சிசிண்டெலா பேரினத்தைச் சேர்ந்த வண்டுகள் பொதுவாக பகலாடிகள். வெயில் காயும் நேரங்களில் சுறுசுறுபாக இரைதேடும். டெட்ராச்சா, ஓமஸ், ஆம்ப்ளிசீலா மற்றும் மான்டிகோரா போன்ற பேரினங்கள் அனைத்தும் இரவாடிகள் . சிசிண்டெலா மற்றும் டெட்ராச்சா இரண்டும் பெரும்பாலும் பிரகாசமான நிறத்தில் காணப்படும், அதே சமயம் மற்ற பேரினங்கள் பொதுவாக ஒரே மாதிரியான கருப்பு நிறத்தில் இருக்கும். மான்டிகோரா பேரினத்தைச் சேர்ந்த புலி வண்டுகள் குடும்பத்தில் உள்ளவற்றில் அளவில் பெரியவை. இவை முதன்மையாக தென்னாப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளில் வாழ்கின்றன. [4]
புலி வண்டுகள் தரையில் முட்டையிடக்கூடியன. இவறின் குடம்பிகள் ஒரு மீட்டர் ஆழம் வரையிலான உருளை வடிவ துளைகளில் வாழ்கின்றன. அவை துளையில் தலை மேலே இருக்குமாறு மறைந்திருக்கும். சிலவகைப் புலி வண்டுகளின் குடம்பிகள் செடிகளின் தண்டுப் பகுதியில் துளையிட்டு உள்ளே வாழக்கூடியன. வளர்ந்த வண்டுகள் அதிவிரைவாக ஓடி இரை தேடக்கூடியன. சிறிய பூச்சிகள், புழுக்கள், சிலந்தி போன்றவற்றை வேட்டையாடி உண்ணும். வெப்பமண்டலத்தில் உள்ள சில புலி வண்டுகள் மரக்கட்டைகள் மீது காணப்படும், ஆனால் பெரும்பாலானவை தரையின் மேற்பரப்பில் நடமாடும். இவை கடல் மற்றும் ஏரிக் கரையோரங்களில், மணல் திட்டுகளில், வற்றிய ஏரிப் படுகைகளைச் சுற்றி, களிமண் கரைகள் அல்லது வனப் பாதைகளில் வாழ்கின்றன. இவை குறிப்பாக மணல் பரப்புகளை விரும்புகின்றன. [5]
புலி வண்டுகள் குறிப்பிட்ட வாழிடங்களில் மட்டுமே காணப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை, வகை போன்ற காரணிகளைக் கொண்டு அந்த வாழிடம் நல்ல நிலையில் உள்ளதா, சீரழிந்து உள்ளளதா என கண்டறிய உதவுகிறது. இதனால் இவை பல்லுயிர் பற்றிய சுற்றுச்சூழல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மெத்தோச்சா (தின்னிடே குடும்பம்) பல வகையான சிறகுகளற்ற ஒட்டுண்ணி குளவிகள் சிசிண்டெலா டோர்சலிஸ் போன்ற பல்வேறு புலிவண்டுகளின் குடம்பிகள் மீது முட்டையிடுகின்றன. [6]
தகவமைப்புகள்
[தொகு]புலி வண்டுகள் அசாதாரணமான முறையில் இரை தேடுகின்றன. இவை அதிவிரைவாக ஓடி இரை தேடுகின்றன. தொலைவில் இரையைக் கண்டால் அத்திசை நோக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிடும். பின்னர் நின்று ஒரு நோட்டம்விடும். ஏனெனில், இந்த வண்டுகள் காட்சியமைப்புகள் துல்லியமாக பார்க்க முடியாத அளவு தலை நெறிக்க ஒடுகின்றன. [7] ஓடும் போது தடைகளைத் தவிர்ப்பதற்காக, தங்கள் சுற்றுச்சூழலை உணர தங்கள் உணர் கொம்புகளை நேராக வைத்துக் கொள்கின்றன. [8] இதுபோல விரைவாக ஓடி பின்னர் சற்று நிதானித்து இரையைக் கண்டு தன் கூர்மையான கீழ்த்தாடையால் கவ்விப் பிடிக்கும். இந்தக் கீழ்த்தாடையில் உள்ள சிறிய துளையில் சுரக்கும் ஒரு நொதி, பிடித்த இரையை விரைவில் செரிக்க வைக்கும்.
-
மொசாம்பிக்கின் ஒரி அர்ங்காட்சியகத்தில் மாண்டிகோரா பேரினத்தின் மாதிரி.
-
அரிதான சால்ட் க்ரீக் புலி வண்டு, சிசிண்டெலா நெவாடிகா லின்கோல்னியானா
-
இந்தியாவைச் சேர்ந்த சிசிண்டெலா கோரி புலி வண்டின், பெரிய கண்களையும், கீழ்த்தாடைகளையும் காணலாம்
-
பெரும்பாலான புலி வண்டுகள் ஏரிக் கரையிலும் மணலிலும் வாழ்ந்து தரையில் ஓடுகின்றன.
-
சிசிண்டெலா சினென்சிஸ்
-
குனுங் பெலுமுட் பொழுதுபோக்கு வனத்தில் உள்ள ஒரு இனம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Duran, Daniel P.; Gough, Harlan M. (2020). "Validation of tiger beetles as distinct family (Coleoptera: Cicindelidae), review and reclassification of tribal relationships" (in en). Systematic Entomology: syen.12440. doi:10.1111/syen.12440. பன்னாட்டுத் தர தொடர் எண்:0307-6970.
- ↑ Pearson, D.L. & F. Cassola, 2005
- ↑ Vasilikopoulos, Alexandros; Balke, Michael; Kukowka, Sandra; Pflug, James M.; Martin, Sebastian; Meusemann, Karen; Hendrich, Lars; Mayer, Christoph et al. (October 2021). "Phylogenomic analyses clarify the pattern of evolution of Adephaga (Coleoptera) and highlight phylogenetic artefacts due to model misspecification and excessive data trimming" (in en). Systematic Entomology 46 (4): 991–1018. doi:10.1111/syen.12508. பன்னாட்டுத் தர தொடர் எண்:0307-6970.
- ↑ Pearson, David L. (2001). Tiger beetles : the evolution, ecology, and diversity of the cicindelids. Ithaca: Comstock Publishing Associates. p. 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0801438829.
- ↑ Werner, K. 2000
- ↑ Burdick, D.J. and Wasbauer, M.S. (1959). "Biology of Methocha californica Westwood (Hymenoptera: Tiphiidae)." Wasmann Jour. Biol. 17:75-88. Department of Environmental Conservation
- ↑ Friedlander, Blaine (1998-01-16). "Cornell News, Jan. 16, 1998 When tiger beetles chase prey at high speeds they go blind temporarily, Cornell entomologists learn". News.cornell.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.Friedlander, Blaine (1998-01-16). "Cornell News, Jan. 16, 1998 When tiger beetles chase prey at high speeds they go blind temporarily, Cornell entomologists learn". News.cornell.edu. Retrieved 2020-10-26.
- ↑ "Blinded by speed, tiger beetles use antennae to 'see' while running". பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.