புலிகள் பாதுகாப்புத் திட்டம்
புலிகளை பாதுகாக்க இந்திய ஒன்றிய அரசால் 1973 ல்[2] ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமே புலிகள் பாதுகாப்புத் திட்டம் (Project Tiger - புராஜெக்ட் டைகர்) ஆகும். இந்திய வனவிலங்குகள் வாரியம் (IBW ) இத் திட்டத்தை வடிவமைத்தது. அறிவியல், பொருளாதாரவியல், அழகியல், பண்பாட்டுச் சூழலியல், சூழலியல் மதிப்பை தக்க வைத்துக்கொள்ள இந்தியாவிலுள்ள உயிர்வாழும் புலிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்து பேணிப் பாதுகாப்பதற்காகவும், அவைகளின் பாரம்பரிய இயற்கை வாழ்விடங்களை பாதுகாத்து இந்திய மக்களின் கல்வி மற்றும் நல்வாழ்விற்காக அர்பணித்தலுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்கெனத் தனியான சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு புலிகள் வாழ்வதற்கான இயற்கையான சூழ்நிலை பேணப்படுகிறது.
வரலாறு
[தொகு]பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN ) பொதுக்குழு கூட்டம் 1969 ல் டெல்லியில் நடைபெற்றபோது இந்தியாவில் புலிகள் உள்பட பல உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என அறிவுறுத்தப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தில் அருகிவரும் கானகப்பரப்பு குறித்தும், பல கானுயிர்கள் அழியும் தறுவாயில் இருப்பது குறித்தும் கவலைக்குரல் எழுப்பப்பட்டது. அதற்கான நடவடிக்கையாக, இந்திய வனவிலங்குகள் வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 1970 ல் வனவிலங்கு வேட்டையாடல் தடை செய்யப்பட்டது. 1972 ல் வன விலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நாற்பதாயிரமாக மதிப்பிடப்பட்டிருந்தது. 1972ல் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள்தொகைக் கணக்கெடுப்பில் 1872 புலிகளே எஞ்சி இருந்தது தெரியவந்தது. அழிவின் விளிம்பில் இருந்த புலிகளினத்தை பாதுகாக்க 1 ஏப்ரல் 1973 அன்று உத்தராஞ்சல் மாவட்டத்திலுள்ள கார்பெட் தேசிய பூங்காவில் நமது பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரால் ப்ராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டது. புலிகளைப் பேணுவதற்கு சூழிலியல் அணுகுமுறை கொண்ட ஒரு திட்டத்தை வடிவமைக்க செயலாக்கக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் பாதுகாப்புப் படையும் உருவாக்கப்பட்டது.
நாடு தழுவிய பெரு முயற்சியால் மட்டுமே இத்திட்டம் வெற்றி அடையமுடியும் என்றும், ஒரு பெரிய சிக்கலான உணவு சங்கிலியின் மேல் நிலையில் உள்ள புலிகளை மட்டும் தனியாக பாதுகாக்க இயலாது, எனவே புலிகளுக்கான வாழ்வாதரங்களை தூய்மை கெடாமல் மீட்டெடுப்பதே இதன் குறிக்கோள் என தனது உரையில் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறையிலிருக்கும் போதே மகாராஷ்ராவில் உள்ள பண்ணா மற்றும் ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா சரணாலயங்களில் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஒன்றிய அரசு 1972 ஆம் ஆண்டின் தேசிய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA )ஐ சட்ட பூர்வமாக உருவாக்கியது.
திட்டக்கூறுகள்
[தொகு]புகலிடங்கள் "கருப்பகுதி-இடைப்பகுதி" உத்தியின் (Core - buffer strategy) அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன. கருப்பகுதி என ஒதுக்கப்பட்ட பரப்பில் எவ்வித மனித நடவடிக்கையும் தடை செய்யப்பட்டது. இடையகப் பரப்பில் பேணுதல் நோக்கிலான நிலப் பயன்பாடு மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு புகலிடத்திற்கும் பின்வரும் கொள்கைகளின் அடிப்படையிலான நிர்வாகத் திட்டம் வகுக்கப்பட்டது:
- கருப்பகுதியில் மனிதனால் நிகழ்த்தப்படும் சுரண்டல்களையும் இடையூறுகளையும் அறவே களைதல். இடையகப் பகுதியில் மனித நடவடிக்கைகளை முறைப்படுத்தல்.
- சூழிலியல் அமைப்புக்கு மனிதனாலும் பிற குறுக்கீடுகளாலும் நேர்ந்த சேதத்தைச் செப்பனிடும் வகையில் மட்டும் வாழிட மேலாண்மையை மட்டுப்படுத்தி சூழிலியல் அமைப்பு தன் இயல்பு நிலைக்கு மீள உதவுதல்
- காலப்போக்கில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளல்
முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சரணாலயங்கள்:
- மானஸ் (அஸ்ஸாம்)
- பாலமவ் (பிஹார்)
- சிமிலிபால் (ஒரிசா)
- கார்பெட் (உத்தராஞ்சல்)
- கன் ஹா (மத்தியப் பிரதேசம்)
- மேல்காட் (மஹாராஷ்ட்ரா)
- பந்திப்பூர் (கர்நாடகா)
- ரந்தம்போர் (ராஜஸ்தான்)
- சுந்தரவனம் (மேற்கு வங்காளம்)
இந்த 9 புகலிடங்களும் சேர்ந்து 13017 ச.கி.மீ பரப்பிலானவை.தற்போது 27 புகலிடங்கள் இத்திட்டத்தின்கீழ் வருகின்றன.
முதற் கட்ட செயல்பாடுகள்
[தொகு]முதல் 6 ஆண்டுகளுக்கான 59 மில்லியன் டாலர் மதிப்பீட்டிலான திட்ட வரைவுக்கு ஒன்றிய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. IUCN தொழில்நுட்ப திட்ட வரைவுகளையும் ஆராய்ச்சிகளையும் இந்திய அரசுடன் இணைந்து செய்ய முன்வந்தது. உலக வனவிலங்கு நிதியமும் (WWF ) 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள கருவிகளை வழங்கியது.
1979 - 80 வரை ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம் 1980 - 81 முதல் ஒன்றிய அரசு உதவி பெறும் திட்டமாக மாற்றப்பட்டு ஒன்றிய அரசும் மாநில அரசும் சமமாகச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அமைக்கப்பட்டது.
புலிகளின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருவதன் காரணம்
[தொகு]புலிகள் அழிவதற்கான காரணங்களாக, 1. அதிகப் பணத்துக்காக வேட்டைக்காரர்களால் கொல்லப்படுதல் 2 . பெருகிவரும் மக்கள் தொகையால் மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்படுவதால் உண்ண தாவரங்கள் இன்றி மான் போன்ற புலிகளுக்கான இரைகள் அழிந்து புலிகள் வாழ்விடம், உணவு , நீர் ஏதுமின்றி மாண்டுபோதல், 3 எல்லை மனிதர்களுடனான போராட்டத்தில் மனிதனால் கொல்லப்படுதல், 4 வாழ்விடம் துண்டாடப்படுதல் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்விடத்தினால் ஒரு குழுவுக்குள்ளேயே ஏற்படும் இனப்பெருக்கத்தின் குறைவான விகிதம் மற்றும் மரபின குறைபாடுகள் ஆகியவற்றை இத்திட்டம் ஆராய்ந்தது அதற்கான செயல் முறைகளை வகுத்தது .
சில புள்ளி விவரங்கள்
[தொகு]மொத்தம் 93 ,697 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பில் 37 சரணாலயங்களும் அமைந்துள்ளன அதில் 32,050 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பானது பாதுகாக்கப்பட்ட வனபகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மொத்த நிலபரப்பில் தற்போது 1411 (குறைந்தபட்சம் 1165 அதிகபட்சம் 1657 ) புலிகளே வாழ்கின்றன. ஒன்பதாவது திட்டத்தில் ருபாய் .73 .18 கோடியும் , பத்தாவது திட்டத்தில் ருபாய்.161 .92 கோடியும் , தற்போதய பதினோராவது திட்டத்தில் ருபாய் .650 கோடியும் இதுவரை ஒன்றிய அரசால்அளிக்கப்பட்டுள்ளது.[1]
புகலிடங்களின் பட்டியல்
[தொகு]வரிசை எண் | தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு | புகலிடத்தின் பெயர் | மாநிலம் | மொத்தப் பரப்பு (சதுர கிலோமீட்டரில்) |
1 | 1973 - 74 | பந்திப்பூர் | கர்நாடகா | 866 |
1999 - 2000 | நாகர்ஹோல் (விரிவாக்கம்) | 642 | ||
2 | 1973 - 74 | கார்பெட் | உத்தராஞ்சல் | 1316 |
3 | 1973 - 74 | கன் ஹா | மத்தியப் பிரதேசம் | 1945 |
4 | 1973 - 74 | மானஸ் | அஸ்ஸாம் | 2840 |
5 | 1973 - 74 | மேல்காட் | மகாராஷ்ட்ரா | 1677 |
6 | 1973 - 74 | பாலமவ் | ஜார்க்கண்ட் | 1026 |
7 | 1973 - 74 | ரந்தம்போர் | ராஜஸ்தான் | 1334 |
8 | 1973 - 74 | சிமிலிப்பால் | ஒரிசா | 2750 |
9 | 1973 - 74 | சுந்தரவனம் | மேற்கு வங்காளம் | 2585 |
10 | 1978 - 79 | பெரியார் | கேரளா | 777 |
11 | 1978 - 79 | சரிஸ்கா | ராஜஸ்தான் | 866 |
12 | 1982 - 83 | பக்ஸா | மேற்கு வங்காளம் | 759 |
13 | 1982 - 83 | இந்திராவதி | சத்தீஸ்கர் | 2799 |
14 | 1982 - 83 | நாகார்ஜுனசாகர் | ஆந்திரப் பிரதேசம் | 3568 |
15 | 1982 - 83 | நாம்டபா | அருணாச்சலப் பிரதேசம் | 1985 |
16 | 1987 - 88 | டுட்வா | உத்தரப் பிரதேசம் | 811 |
1999 - 2000 | கதேர்னியாகாட் (விரிவாக்கம்) | 551 | ||
17 | 1988 - 89 | களக்காடு- முண்டந்துறை | தமிழ்நாடு | 800 |
18 | 1989 - 90 | வால்மீகி | பிஹார் | 840 |
19 | 1992 - 93 | பெஞ்ச் | மத்தியப் பிரதேசம் | 758 |
20 | 1993 - 94 | தடோபா - அந்தாரி | மகாராஷ்ட்ரா | 620 |
21 | 1993 - 94 | பந்தவ்கர் | மத்தியப் பிரதேசம் | 1162 |
22 | 1994 - 95 | பண்ணா | மத்தியப் பிரதேசம் | 542 |
23 | 1994 - 95 | டம்பா | மிசோரம் | 500 |
24 | 1998 - 99 | பத்ரா | கர்நாடகா | 492 |
25 | 1998 - 99 | பெஞ்ச் | மகாராஷ்ட்ரா | 257 |
26 | 1999 - 2000 | பகுய் - நமேரி | அருணாச்சலப் பிரதேசம் - அஸ்ஸாம் | 1206 |
27 | 1999 - 2000 | போரி, சத்புரா, பச்மரி | மத்தியப் பிரதேசம் | 1486 |
27 | 2008 | இந்திரா காந்தி வன விலங்கு உய்வகம் மற்றும் தேசிய பூங்கா | தமிழ்நாடு | 958 |
27 | 2007 | முதுமலை தேசிய பூங்கா | தமிழ்நாடு | 321 |
27 | 2010 | சத்தியமங்கலம் வனவிலங்கு காப்பகம் | தமிழ்நாடு | 1,411 |
மொத்தம் | 40450 |
தற்போதய நடவடிக்கைகள்
[தொகு]சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுந்தி நிதி சுழற்சி மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றல், புலிகள் பாதுகாப்பு படையினை வலுபடுத்துதல் வட்டார புலி ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற காவல், இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தி வேட்டை காரர்களிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும் புலிகளை பாதுகாத்தல். புலிகள் சரனாலயங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மதிப்பிடல் . ( தற்போதைய மதிப்பீட்டின் படி மொத்தம் 37 ல் 12 - நல்ல நிலைமையிலும், 9 -திருப்திகரமாகவும் , 16 - மோசமான நிலைமையில் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது ) [2] பிப்ரவரி 2008 ல் ஒன்றிய அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இத்திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழி காட்டுதலை வெளியிட்டது.[3]
புலிகள் குறித்த உலகளாவிய உயர் நிலை மாநாட்டினை வரும் அக்டோபர்-நவம்பர் 2010 ல் நடத்த திட்டமிட்டுள்ளது .
கிடைத்த பயன்கள்
[தொகு]- கடந்த நாற்பதாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கள நிர்வாகமும், மண் வள மேம்பாடும் இனபெருக்க ஆதார எண்ணிக்கையில் புலிகளை தக்க வைத்துள்ளது. இவைகளின் முலம் புலிகளினம் இந்தியாவில் அழியாமல் நாம் பாதுகாக்க முடியும் என்பது உறுதி.
- 1972 ல் 9 சரணாலயங்கள் மட்டுமே இருந்தன தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது , மேலும் புதிய 8 சரணாலயங்கள் உருவாக்கும் திட்டமும் உள்ளது
- இடைக்காடுகள் - சரணாலயங்களை இணைக்கும் தடங்கள் மீட்கப் பட்டு , தனித் தனி தீவுகளை போல் இருந்த சரணாலயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பல கிராம மக்கள் தகுந்த நிவாரனங்கள் வழங்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர். கிராம பஞ்சாயத்தாரின் உதவியுடன் சுமுகமாக வனப்பகுதிகளின் இடையே உள்ள மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர் . இடத்திற்கு ஏற்றார்போல 1 லட்சத்திலிருந்து10 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் துணை நிகழ்வுகளாக - சரனாலயங்களின் அருகில் வாழு மக்களுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் உயர்ந்துள்ளன . சுற்றுலா , வனங்களுக்குள் கணக்கெடுப்பு, எடுபிடி வேலைகளால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.
- இத்திட்டம் இயற்கை சுற்று சுழல் தரத்தை அளவிடமுடியாத அளவுக்கு உயர்த்தியுள்ளது - வளர்க்கப்பட்ட மரங்களால் கரியமில வாயு உறிஞ்சப்பட்டு மாசற்ற காற்றும், நல்ல மழை வளமும், நிலத்தடி நீர் மட்ட உயர்வும், ஆறுகளின் நீரோட்டமும், மண் வளமும் உயர்ந்துள்ளது . புலிகள் மட்டுமல்லாமல் பிற மாமிச உண்ணிகளும் , தாவர உண்ணிகளும் , தாவரங்களும் நல்ல எண்ணிக்கையில் வளர்ந்துள்ளன.
- புராஜெக்ட் டைகர் திட்டம் உள்ள காடுகளில் தாவரவியல், விலங்கியல் துறைகளை சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன .
- புவியியல் தகவல் முறை (GIS ) வழியாக சரனாலங்களை சுற்றி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது,
- இதே GIS தளம் வழியாக மின் ஆளுமை திட்டத்தில் 5 சரணாலயங்கள் அதன் இயக்குனகரதுடன் இணைக்கப் பட்டுள்ளன.
- IUCN மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கான ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இச்சரனாலயங்களை ஆய்வு செய்கின்றனர்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள்
[தொகு]- ஆண் புலி முதிர்ச்சி அடைந்ததும் தனெக்கென ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்ளும் . 2 - 3 வயதானதும் தாயை விட்டு பிரிந்த ஆண் குட்டிகளை ஏற்கெனவே எல்லை வைத்துள்ள பெரிய ஆண் புலி விரட்டிவிடுகிறது அல்லது கொன்றுவிடுகிறது . வாழ்விடம் தேடி அக்குட்டிகள் காட்டின் எல்லையில் வரும் போது பொது மக்களாலும், வேட்டை காரர்களாலும் கொல்லப்படுகிறது. இதை தவிர்க்க துண்டாடப்பட்ட காடுகளை ஒருங்கிணைக்க வேண்டும் . புலியின் வழிதடம் ( Tiger corridor ) வளரும் புலிகளுக்கு தற்போது மிக முக்கியம்.
- சரணாலயங்களுக்கு அருகில் மேலும் காடுகளின் நிலபரப்பை அதிகமாக்குதல், மேற் கொண்டு புதிய தொழிற்சாலைகளோ , வாழ்விடங்களோ மாயாமல் அமைதியான சுழலை ஏற்படுத்துதல். மனிதன் - புலி நேரெதிர் எதிர் பாரா சந்திப்பை தவிர்த்தல்.
- தகுந்த புதிய தொழில் நுட்ப முறையில் புலிகளை எண்ணிக்கையை கணக்கிடுதல். சரியான புள்ளி விவரங்களால் அனாவசிய நிதி, மனித உழைப்பு, மனித நேரம் வீணாகாமல் தடுத்தல். தகுந்த வளத்தை தகுந்த இடத்தில் தகுந்த நேரத்தில் பயன்படுத்தி அதிக பயனடைதல்.
- வேட்டைகாரர்களை அறவே தடுத்தல். பாதுகாப்பு படையின் வேலைகளை முடுக்கிவிடுதல். சமுக ஆர்வலர்கள், புலிகளின் ஆர்வலர்கள், வட்டார மக்கள், ஓய்வு பெற்ற இராணுவ, காவல் துறை , வனத்துறை அதிகாரிகளை தற்காலிக பணிக்கு அமர்த்தி வேட்டைகாரர்களிடமிருந்து புலிகளை பாதுகாத்தல். என் எனில் புலிகளின் ஒவ்வொரு பாகமும் பல ஆயிர கணக்கில் விலை போவதால் சமுக விரோதிகள் புலிகளை வேட்டையாடுகின்றனர். [3] புராஜெக்ட் டைகர்]
முடிவுரை
[தொகு]புராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் உலக அளவில் மிக முன்னோடியாக திகழ்கிறது. புலிகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. எனினும் சமுக ஆர்வலர்களும், புலி ஆர்வலர்களும் பரிந்துரைப்பதில் சில பரிசீலனைக்கு :
- காடுகளின் எல்லை பரப்பை அதிகரித்து, புலிகளின் எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிக்கும் முறைகள் நீண்ட நாட்கள் பிடிக்கலாம், சூழ்நிலையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, காட்டில் உள்ள பெண் புலிகளுக்கு செயற்கை முறை கருத்தரித்தல் வழி அதிக இன பெருக்கத்தை செய்யலாம். ஏன் எனில் கூண்டுகளில் பல தலைமுறைகளாக வளர்ந்த பெண்புலிகள், தங்கள் குட்டிகளை புறக்கணிக்கின்றன, அவைகளின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.
- தனியார் வனவிலங்கு பூங்காக்கள் - உதாரணத்திற்கு தென் அமெரிக்காவில் அமைந்து கொண்டிருக்கும் கரு (KARU ) இயற்கை புலிகள் சரணாலயத்தில் நமது சில புலிகளை தந்து (,கட்டணம் செலுத்தி அல்லது செலுத்தாமல் ) வளர்த்து கருவுற செய்து அதன் முலம் வரும் இளம் தலை முறை புலிகளை தாயுடன் சேர்த்து மீண்டும் வாங்கிவந்து நமது காடுகளில் வளர்க்கலாம். அவைகள் இயற்கையாக வேட்டையாட பழகி இருக்கும் தனக்கு பின் வரும் தலை முறைகளையும் காடுகளில் வாழ பழக்கும்.
- வெளி நாடுகளில் உள்ளது போல் இங்கும் புலிகளை தத்து எடுத்து, அவற்றிற்கான செலவினங்களை தந்து, அரசு வனவிலங்கு சரணாலயங்களில் வளர்க்க பொதுமக்களின் பங்களிப்பை பெறலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அளிப்போர்க்கு வருமான வரி விலக்கு அளிக்கலாம்.
- அறியா மக்களிடமும் இளம் தலைமுறையினரிடமும் குழந்தைகளிடமும் புலிகளின் முக்கியத்துவத்தை விளக்கி, உணவு சங்கிலி, சுற்று சுழல் சமநிலை குறைந்தால் என்ன ஆகும் என விளக்கப் படங்களை பல்வேறு ஊடகங்களின் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லுவதால் விழிப்புணர்வு அதிகமாகி அவர்களும் தங்களது சிறு உதவியைதருவார்கள்.
நமது இந்திய குழந்தைகள்தான் புலிகளுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் அதிக அளவில் கலந்துகொண்டு நவம்பர் 2000 லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள்.[4]
- இவற்றின் வாழிடம் முறைந்துவரும் சூழலில் புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்கும் மோதலைத்தடுக்கும் வகையில் இவற்றில் வாழ்விடங்களை இடம் மாற்ற அரசு திட்டம் வகுத்துள்ளது. இதன் மூலம் புலிகள் மறுவாழ்வுக்கான நிலையான செயல்முறைகள் என்ற திட்டம் முலம் 2010 ஆம் ஆண்டு 1706 புலிகள் இருந்தவை 2014 ஆம் ஆண்டு 2,226 புலிகள் என்ற எண்ணிக்கையில் பெருகியுள்ளது.[5]