புறா பந்தயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புறாக்களின் கூட்டம்.

புறா பந்தயம் (Pigeon racing) என்பது சிறப்பாக பயிற்சி பெற்ற வீட்டுப் புறாக்களை ஓர் இடத்திலிருந்து பறக்கவிடும் விளையாட்டாகும். கவனமாக அளவிடப்பட்ட தூரத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் புறாவானது. குறிப்பிட்ட தொலைவைக் கடக்க எடுக்கும் நேரம் அளவிடப்படுகிறது. மேலும் போட்டியில் கலந்துகொண்ட பிற புறாக்களின் பயண விகிதம் கணக்கிடப்பட்டு எந்தப் பறவை அதிக வேகத்தில் திரும்பியது என்பதை தீர்மானிக்க பந்தயத்தில் பறந்த மற்ற புறாக்களுடன் ஒப்பிடப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

புறா பந்தயத்துக்காக பிரத்தியேகமாக வளர்க்கப்படும் ரேசிங் ஓமர் என்ற குறிப்பிட்ட புறா இனம் பயன்படுத்தப்படுகிறது. சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிற பந்தய புறாக்களானவை, சுமார் 100 கிலோமீட்டர்கள் (62 mi) முதல் 1,000 கிலோமீட்டர்கள் (620 mi) வரையிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றன. போட்டிகள் கீலோமீட்டர் கணக்கில் நடத்தப்பட்டபோதிலும், போட்டியில் புறாக்கள் சில நொடி வித்தியாசத்தில் வெல்லவோ, தோற்கவோ கூடும். எனவே போட்டிக்காக பல நேர மற்றும் அளவீட்டு சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய நேர முறையானது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கடிகாரங்கள் பதிக்கப்பட்ட இரப்பர் வளையங்களைக் கொண்டதாக இருந்தது. அதேசமயம் ஒரு புதிய வளர்ச்சியாக வானலை அடையாளத்தின் வழியாக பறவையின் வருகை நேரத்தை பதிவு செய்ய பயன்படுத்துகிறது.

திட்டவட்டமான ஆதாரம் இல்லை என்றாலும், புறா பந்தய விளையாட்டு குறைந்தபட்சம் கிபி 220 வரை பழமையானதாக இருக்கக்கூடும் என்று கருதுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. மேலும், யூத நூலான மிஷ்னாவில் புறா பந்தயம் குறித்த பதிவுகள் உள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் நடுவில் பெல்ஜியத்தில் இந்த விளையாட்டு பெரும் புகழ் பெற்றது. பெல்ஜியம் புறா ஆர்வலர்களால் வேகமாக பறத்தல், நீண்ட தொலைவுக்கு பறக்கும் தன்மை கொண்டவையாக புறாக்களை விசேடமாக உருவாக்கத் தொடங்கினர். பெல்ஜியத்தின் பிளம்மியர் ஆர்வலர்கள் உருவாக்கிய விளையாட்டு மற்றும் வோயேஜூரின் நவீன பதிப்பு விளையாட்டு உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவியது. ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த விளையாட்டு, அண்மைய ஆண்டுகளில் உலகின் சில பகுதிகளில் பங்கேற்பாளர்கள் குறைந்துவரும் நிலையை அடைந்துள்ளது. இதற்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பு, ஆர்வலர்களின் வயது அதிகரித்தல், பொது சமூகத்தில் ஆர்வம் குறைதல் போன்றவை காரணமாக இருக்கலாம். சிலர் விளையாட்டிலிருந்து விலகுவதற்கு தூசுகளினால் உருவாகும் நோயான ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ் நோயும் ஒரு காரணமாகும். [1]

பந்தய புறாக்கள் பெரும்பாலும் சிறப்பாக வடிவமைக்கபட்ட சரக்குந்துகளில் கொண்டு செல்லப்படுகின்றன.

வரலாறு[தொகு]

புறாக்கள் பழமையான வளர்ப்பு பறவைகளாகும்.[சான்று தேவை] நவீன நாள் பந்தய புறாக்களின் முன்னோடிகளாக செய்திகளை எடுத்துச் செல்ல திரும்பிவரும் அவற்றின் திறனுக்காக வளர்க்கப்பட்டன. " புறா அஞ்சல் " முறை உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ளது. இது முக்கியமாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், சில இன்றும் சேவையில் உள்ளன. நவீன புறா பந்தயம் பெல்ஜியத்தில் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் உருவானது. பந்தய புறாக்கள் முதலில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டன. அவை முதன்மையாக சுமர்லெ, பிரஞ்சு குமிலட், ஆங்கிலேய கேரியர், டிரகூன், ஆர்ஸ்மென் (தற்போது அற்றுவிட்டது) போன்ற பல இனப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. உயரமான பறக்கும் குமுலெட்டிலிருந்து, வந்த ஓமர் புறாக்கள் அதன் சகிப்புத்தன்மைக்காகவும், சோர்வின்றி பல மணிநேரங்களுக்கு பறக்கும் திறனுக்காகவும் அறியப்படன. செய்தி அனுப்பும் இடத்திலிருந்து, அது அதிக தூரத்திலிருந்தாலும் தன் இருப்பிடத்திற்கு செல்லும் வழியைக் கண்டுபிடித்து செல்லக்கூடியது. [2]

புதிய சகாப்தத்தின் பல புதிய தொழில்நுட்பங்கள் இந்த விளையாட்டு வளர உதவியது. தொடருந்துபாதையின் வருகையால் புறாக்களை விரைவாகவும் குறைந்த செலவிலும் தொலைதூர இடங்களுக்கு கொண்டு செல்ல ஏதுவானது. மேலும் அதிநவீன கடிகாரங்கள் உருவாக்கமானது விளையாட்டுக்கு துல்லியமான நேர அளவீட்டைக் கொண்டு வந்தது.

இதுவரை விற்கப்பட்ட விலையுயர்ந்த புறா "நியூ கிம்" ஆகும், இது 2020 நவம்பரில் சீனாவில் இருந்து ஒரு பணக்கார ஏலதாரரால் 1.9 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. [3]

தமிழ்நாட்டில்[தொகு]

தமிழ்நாட்டின், சென்னையில் பந்தயப் புறாக்கள் விற்பனையை பிரதானமாக கொண்ட மஸ்கான் சாவடி சந்தை என்ற வாரச் சந்தை இயங்கி வருகிறது. சென்னையில் 12 புறா பந்தய சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சாதா புறா போட்டி, ஓமர் பந்தயம் என இரு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.[4]

சாதா புறா போட்டிகள் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் குறிப்பாக கத்தரி வெயில் காலங்களில் நடத்தப்படுகிறது. இதில் புறாக்கள் ஐந்து நாட்களுக்கு தலா ஐந்து மணிநேரம் விடாமல் பறக்க வைக்கப்படும். இதில் எந்தப் புறா சிறப்பாக பறக்கிறதோ அதற்கு கோப்பை வழங்கப்படும்.[4]

ஓமர் புறா பந்தயங்களில் மிக முக்கியதானது குவாலியரில் இருந்து சென்னை வரையிலான பந்தயம் ஆகும். இது 1500 ஏர் மைல் தொலைவு கொண்டது. இதில் அனுபவமுள்ள புறாக்களே கலந்துகொள்ளும். முதலில் 210 ஏர் மையிலில் உள்ள ஆந்திர மாநிலம் காவாளியில் இருந்து புறாக்கள் பறக்கவிடப்படும். அங்கிருந்து மூன்று மணிநேரத்தில் புறாக்கள் வந்துவிடும். அடுத்து அடுத்து வினுகொண்டா, அடுத்து மெரியால்குடா, அடுத்து படிப்படியாக வாரங்கல், சொப்பூர், வார்தா, போபால், குவாலியர் என்று போட்டி விரியும். இந்த ஒவ்வொரு போட்டிகளுக்குப் பின்னர் புறாக்களுக்கு ஓரிரு வாரங்கள் ஓய்வு அளிக்கப்படும். இந்த போட்டிகளில் கலந்து கொண்டு தாக்குப் பிடிக்கும் புறாக்களுக்கு குவாலியர் - சென்னை பந்தயத்தில் கலந்து கொள்ளும். இந்த நெடும் பயணத்தில் முதல் நாள் 500 ஏர் மைல் பறக்கும். அடுத்த நாள் 200 ஏர்மையில்தான் பறக்க இயலும். இவ்வாறு படப்படியாக அதன் ஆற்றல் குறைந்துகொண்டே வரும். இந்தத் தொலைவை அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் கடந்து புறாக்கள் வந்துவிடும். இதில் முதலிடம் பெறும் புறாவுக்கு பரிசும் கோப்பையும் வழங்கப்படும்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. León, DE; Retana, VN; Hernández-Pando, R; Arellano, J; Ortiz, LG; Valle, FC; Martínez-Cordero, E (2007). "Pigeon hypersensitivity pneumonitis: immunohistochemical demonstration of the causative antigen in the lung". Prim Care Respir J 16 (4): 252–6. doi:10.3132/pcrj.2007.00046. பப்மெட்:17660891. 
  2. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  3. "New Kim: Racing pigeon from Belgium sold for record €1.6m". BBC News. 15 November 2020. https://www.bbc.com/news/world-europe-54953594#:~:text=A%20racing%20pigeon%20from%20Belgium,Sunday%20for%20the%20record%20amount.. 
  4. 4.0 4.1 4.2 கர்ணா... ஓமர்.. சாதா... சொக்கர்... மஸ்கான் சாவடி! சென்னையின் புராதன புறா சந்தை (2015). தினகரன் தீபாவளி மலர் 2015. சென்னை: தினகரன். பக். 170-178. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறா_பந்தயம்&oldid=3399630" இலிருந்து மீள்விக்கப்பட்டது