உள்ளடக்கத்துக்குச் செல்

புறப்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும் தொல்காப்பியம் பொருள் என்னும் பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும். புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள் என்னும் நூலின் தலைப்புகளும் புறப்பொருள் அகப்பொருள் என்னும் பாகுபாடுகளையே குறிப்பிடுகின்றன.

பழந்தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறப்பொருள் என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும் இலக்கியங்களைப் புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவது தமிழ் இலக்கிய மரபு.

புறத்திணைப் பிரிவுகள்

[தொகு]

புறப்பொருளில் உள்ள துறைப் பிரிவுகளைத் தொல்காப்பியர் ஏழு எனக் காட்டுகிறார். புறப்பொருள் வெண்பாமாலை 12 எனப் பகுத்துக் காட்டுகிறது.

தொல்காப்பிய நெறி

[தொகு]

பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகப்பொருளில் உள்ள திணைகள், புறப்பொருளில் உள்ள திணைகள் பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.

  1. வெட்சித் திணை
  2. வஞ்சித் திணை
  3. உழிஞைத் திணை
  4. தும்பைத் திணை
  5. வாகைத் திணை
  6. காஞ்சித் திணை
  7. பாடாண் திணை

ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந்நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக்கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர்செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான பொருள்களை விளக்குவது காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன.

புறப்பொருள் வெண்பாமாலை நெறி

[தொகு]

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.

புறம் 12 எனில் அகமும் 12 என மாட்டேறு பெறுதல் வேண்டும். அங்ஙனம் பெறாமையின் இப்பாகுபாடு மரபு-வழு ஆகும் என்று இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.[1]

திவாகர நிகண்டு புறப்பொருளின் திணைகள் கூறும் செய்திகளை எளிமைப்படுத்திக் காட்டுகிறது.

1 வெண்பாச் சூத்திரம்

வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் – உட்கார்
எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகும் உழிஞை.

2 ஆசிரியப்பாச் சூத்திரம்

அதிரப் பொருவது தும்பை ஆகும்
போர்க்களத்து மிக்கார் செருவென்றது வாகையாம்
அத்திணைத் தொழிலும் அத்திணைப் பூவும்
அப்பெயர் பெறுதல் அந்நிலத்து உரியவே

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. தொல்காப்பியம், புறத்திணை விளக்கம் - முன்னுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறப்பொருள்&oldid=3317101" இலிருந்து மீள்விக்கப்பட்டது