புறநானூறு பிற்சேர்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புறநானூறு 400 பாடல்கள் கொண்ட தொகுப்புநூல். இதில் 267, 268 எண்ணுள்ள பாடல்கள் இல்லை. பின் வரும் பாடல் ஔவையார் பாடியது என்னும் குறிப்புடன் உள்ளது. இது ஔவையார் பாடியது என்னும் குறிப்புடன் 269ஆம் பாடலாகக் கொள்ளத்தக்க தகுதி கொண்டது. எனவே இந்தப் பாடலை அதன் பிற்சேர்க்கைப் பட்டியலில் வைக்கலாம். <poem> எம்மிகழ் வோரவர் தம்மிகழ் வோரே எம்மிக ழாதவர் தம்மிக ழாரே தம்புகழ் இகழ்வோர் எம் புகழ் இகழ்வோர் பாரி ஓரி நள்ளி எழினி ஆஅய் பேகன் பெருந்தோள் மலையன் என்று எழுவருள் ஒருவனும் அல்லை, அதனால் நின்னை நோவது எவனோ அட்டார்க்கு உதவாக் கட்டி போல நீயும் உளையே நின் அன்னோர்கே யானும் உளனே தீம்பா லோர்க்கே குருகினும் வெளியோய் தேஎத்துப் பருகு பாலன்ன என் சொல்லருந் தேனே. [1]

இந்தப் பாடலை புறநானூறு 268ஆம் பாடலாகச் சேர்க்கலாம் என மு. அருணாசலம் குறிப்பிடுகிறார். [2]

இந்தப் பாடலில் புலவர் ஒருவனைப் பழிக்கிறார். கரும்புப்பாலைக் காய்ச்சி கட்டியாச் செய்தவனுக்கு அவன் செய்த வெல்லக்கட்டி உதவாதது போலப் புலவரின் பாட்டும் அவருக்கு உதவாது போயிற்றாம். போற்றப்பட்டவன் பரிசில் தராததால் பாட்டு வீணாயிற்றாம். [3]

இந்தப் பாடல் ஔவையாரின் “அவலாகு ஒன்றா, மிசையாகு ஒன்றா” என்னும் பாடலில் கூறப்பட்டுள்ள கருத்து போல அமைந்துள்ளது. இதனால் இப்பாடலை ஔவையாரின் பாடலாக எண்ணிப் புறநானூறு 268 ஆம் பாடலாகச் சேர்க்கப்படலாமோ என எண்ணவேண்டியுள்ளது. [4]

கடையெழு வள்ளல்களைத் தொகுத்துக் கூறும் இந்தப் பாடல் பெருஞ்சித்திரனார் தொகுப்புப் போலவோ, சிறுபாணாற்றுப்படை தொகுப்புப் போலவோ இல்லாமல் வெறுமனே பெயர் தொகுப்பாக உள்ளதை எண்ணிப்பார்க்க வேண்டி உள்ளது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம், செய்யுளியல், அங்கதம் என்னும் வசை பாட்டுக்கு எடுத்துக்காட்டாகப் பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரைகளில் தரப்பட்டுள்ள பாட்டு.
  2. தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005, பக்கம் 350.
  3. இந்தப் பாடலில் கட்டி என்னும் அரசன் கூறப்பட்டுள்ளான் என்பது மு. அருணாசலம் கருத்து. இது பொருந்தாது.
  4. சேர்க்கப்பட வேண்டியது என்பது மு. அருணாசலம் கருத்து.