புரா தலேம் சேகரா மது, வடக்கு பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரா தலேம் சேகரா மது

புரா தலேம் சேகரா மது (Pura Dalem Segara Madhu) இந்தோனேசியாவில் வடக்கு பாலியில் புலேலெங்கில், ஜகாராகா கிராமத்தில் அமைந்துள்ள பாலினிய இந்துக் கோயில் ஆகும். இக்கோயில் சிங்கராஜாவுக்கு கிழக்கே 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஜகாராகா கிராமத்தில் வரலாற்று ரீதியாக டச்சு காலனித்துவ அரசாங்கம் 1849 இல் பாலி இராச்சியம் மீது இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து பப்புட்டன் அல்லது பாலினிய வெகுஜன தற்கொலைக்கு சாட்சியாக இருந்த இடமாக அறியப்படும் இடமாகும். புரா தலேம் சேகரா மது வடக்கு பாலினிய கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்றதாகும். அதன் தனித்தன்மையான அழகான சுவர் வேலைப்பாட்டினை இதில் காண முடியும். இதில் மேற்கத்திய செல்வாக்குமிக்க புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. அவற்றில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த விமானங்கள் மற்றும் வாகனங்களைக் காணமுடியும்.

வரலாறு[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புரா தலேம் சேகரா மதுவின் உள் முற்றம்.

புரா தலேம் சேகரா மது 12 ஆம் நூற்றாண்டில் ராஜ ஸ்ரீ அஜி அவர்களால் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. 1849 ஆம் ஆண்டில் பாலி டச்சு தலையீட்டின் போது, முழு அரண்மனையும் கோயில் வளாகமும் டச்சு இராணுவத்தால் அழிக்கப்பட்டன. இக்கோயிலின் புனரமைப்பு 1865 ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்தக் கட்டுமானம் இன்றும் உள்ளது. புரா பிரஜாபதி மற்றும் புரா தலம் ஆகியவற்றின் கலைக்கூறுகள் இணைந்த நிலையில் இக்கோயில் வடிவமைக்கப்பட்டது. இவற்றில் ஒன்று துர்க்கைக்கும் மற்றொன்று சிவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். இரு தெய்வங்களும் ஒரே குடும்பத்தைச் சார்ந்து இருப்பதால் இரு கோயில்களும் இணைந்து அமைய சாத்தியமாக உள்ளது.

வடக்கு பாலினிய பாணி[தொகு]

இக்கோயில் வடக்கு பாலினியக் கோயிலின் பொதுவான கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது. தென் பகுதிகளில் உள்ள அதே காலகட்டத்தைச் சேர்ந்த கோயில்களைவிட இக் கோயில் அதிகமாக அலங்கார அமைப்பு காணப்படுகிறது. புரா தலம் ஜெயராகா பசுமையாக, பூக்கள், நாகங்கள் மற்றும் மனித உருவங்களின் சித்தரிப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. பிற வடக்கு பாலினிய கோயில்களில காணப்படுகின்ற பூரா பேஜி சங்சிட் என்பது போன்ற அமைப்புகளை இங்கு காணமுடியும்.

மேற்கு உலகத்தை சித்தரிக்கும் செதுக்கல்களைக் கொண்ட, பாலி நகரில் அமைந்துள்ள ஒரு சில கோயில்களில் இக் கோயிலும் ஒன்றாகும். கோயிலின் சுற்றளவு சுவரில் உள்ள செதுக்கல்களில் அசாதாரணமான, 20 ஆம் நூற்றாண்டின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கடலில் விழுந்த ஒரு விமானம், கடல் அசுரனால் தாக்கப்பட்ட கப்பல், மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்டோமொபைல் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. மேற்கு உலகத்தை சித்தரிக்கும் பல சிற்பங்களை பிற வடக்கு பாலினியக் கோயில்களான புரா மெதுவே கரங் மற்றும் பூரா பெஜி சாங்சிட் ஆகிய கோயில்களில் காண முடியும். இது வடக்கு பாலிக்கும் மேற்கத்திய உலகத்திற்கும் இடையேயான தொடர்பைக் குறிக்கிறது. டச்சு காலனித்துவ அரசாங்கம் வடக்கு வழியாக பாலிக்குள் நுழைந்தது. இந்த நுழைவு டச்சு காலனித்துவ அரசாங்கத்திற்கும் பாலினிய இராச்சியத்திற்கும் இடையில் பல மோதல்களை உண்டாக்கியது.

கோயில் வளாகம்[தொகு]

புரா தலேம் சேகரா மது இந்து கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். தலேம் கோயில் இறப்பு தொடர்பான சடங்குகளைக் கொண்டு அமைந்துள்ளது. அதில் பயங்கரமான உருவங்களைக் கொண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பதாரி துர்க்கையும் ரங்க்டா அரக்கனும் உள்ளனர். [1]

இக்கோயில் மூன்று பகுதிகளாகப் பிரிந்துள்ளது. அவை வெளிக்கருவறை, நடுக் கருவறை, மற்றும் உள் கருவறை என்பனவாகும். [2] [3]

குறிப்புகள்[தொகு]