புராண சாகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புராண சாகரம் [1] என்னும் நூல் பற்றிய குறிப்பு யாப்பருங்கல விருத்தி என்னும் உரைநூலில் [2] உள்ளது. பல அடிகளைக் கொண்டு உமையும் பஃறொடை வெண்பா என்னும் யாப்பிலக்கணத்துக்கு இலக்கணம் கூறுகையில் பஃறொடை வெண்பாப் பாடல்களை இராமாயணம், புராணசாகரம் ஆகிய நூல்களில் காணலாம் என இந்த உரைநூல் குறிப்பிடுகிறது. [3] இதனால் இந்த நூல் பஃறொடை வெண்பாவால் ஆன நூல் எனத் தெரிகிறது. புராணம் என்பது பழங்கதை.

கதாசாகரம் என்னும் நூல் ஒன்று வடமொழியில் உண்டு. இந்தப் புராண சாகரம் இந்த வடமோழி நூலின் மொழிபெயர்ப்பு ஆகலாம். இது இராமாயணம் போன்ற பழங்கதை. கதாசாகரம் சோமதேவ பட்டர் என்பவரால் இயற்றப்பட்ட நூல். இவர் 11 ஆம் நூற்றாண்டில் [4] வாழ்ந்தவர். எனவே புராண சாகரம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனக் கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் பாடநூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இது பொருந்தாது என்பதை மு. அருணாசலம் சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்துகிறார்.

யாப்பருங்கல விருத்தி என்னும் உரைநூல் தோன்றிய 11 ஆம் நூற்றாண்டு. இந்த உரையில் சுட்டப்படும் நூல் அதற்கும் முந்தியது. கம்பராமாயணம் 9 ஆம் நூற்றாண்டு நூல். இது தன் காலத்துக்கு முன்னர் இருந்த பஃறொடை வெண்பாவாலான இராமாயணத்தையும் எண்ணியிருக்க வாய்ப்பு உண்டு. இந்தப் பஃறொடை வெண்பாவோடு சேர்த்துக் குறிப்பிடப்பட்டும் புராண சாகரம் என்னும் நூலும் 9 ஆம் நூற்றாண்டு எனக் கொள்வது பொருத்தமானது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 313. 
  2. பதிப்பாசிரியர் வித்துவான் மே. வி. வேணுகோபால் பிள்ளை (பதிப்பு 1900). அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்). சென்னை: சென்னை அரசாங்கத்திற்காக தென்மொழி சென்னை எழுதுபொருள் அச்சகத் தொழில் கட்டுப்பாட்டு அதிகாரியான் பதிப்பிக்கப்பட்டது பதிப்புநூல் வரிசை 66. 
  3. யாப்பருங்கலம் நூற்பா 62 உரை
  4. கி.பி. 1063-1080
"https://ta.wikipedia.org/w/index.php?title=புராண_சாகரம்&oldid=3081276" இலிருந்து மீள்விக்கப்பட்டது