புரட்சிப் பெரியார் முழக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தந்தை பெரியார் திராவிடர் கழகம்,பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயர்களில் இயங்கி வரும் இயக்கத்தின் வார ஏடாக வெளியாகி வரும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' அல்லது பெரியார் முழக்கம் (Periyar Muzhakam)

ஆசிரியர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்.

திராவிடர் கழகத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் விலகியிருந்த திருவாரூர் தங்கராசு, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இயங்கி வந்த தமிழ்நாடு திராவிடர் கழகம், ஆனூர் ஜெகதீசன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் இயங்கி வந்த பெரியார் திராவிடர் கழகம், அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக திராவிடர் கழகத்திலிருந்து விலகி வந்திருந்த கொளத்தூர் மணி தலைமையிலான தோழர்கள், தூத்துக்குடி பகுதிகளில் பால் பிரபாகரன் தலைமையில் இயங்கி வந்த பெரியார் பாசறை, புதுச்சேரி மாநிலத்தில் லோகு அய்யப்பன் தலைமையில் இயங்கி வந்த இராவணன் பகுத்தறிவு படிப்பகத் தோழர்கள் என அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” என்ற பெயரில் இயங்க முடிவு செய்தனர்.

அதன் தொடக்க விழா மாநாடு 11.8.2001 ஆம் நாளன்று சென்னை காமராசர் அரங்கத்தில் கருத்தரங்கமும், கவியரங்கமும், பிற்பகல் பேரணியும்,மாலை பெரியார் இறுதிச் சொற்பொழிவு ஆற்றிய தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் பொது மாநாடாகவும் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் காலத்துத் தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு வீறு கொண்டு எழுந்தது பெரியாரின் புதிய படை.

அதற்கு முன்பு ‘பெரியார் முரசு’, ‘பெரியார் முழக்கம்’ என்ற பெயர்களில் மாத இதழ்களாக 1997 முதல் வெளி வந்து கொண்டிருந்தது. அது தொடர்ச்சியாக வெளி வர முடியால் இடையிடையே தடைபட்டு நின்று கொண்டிருந்தது. 2001ஆம் ஆண்டின் இறுதிவரை மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த “புரட்சிப் பெரியார் முழக்கம்” 2002ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு (ஜன.15, தை முதல் நாள்) முதல் வார ஏடாக வெளிவரத் தொடங்கியது.

வார ஏடாக நான்கு பக்கங்களைக் கொண்ட இதழாக ‘டபுள் டெம்மி’ வடிவில் கடந்த 20 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து சமூக, அரசியல், பொருளாதாரக் களங்களில் தனது கருத்துக்களை பெரியாரியல் வெளிச்சத்தில் உறுதியாக முன்வைத்து வருகிறது.

தலையங்கங்களாக மட்டுமின்றி கட்டுரைகளாக, தொடர்களாக, சொற்பொழிவுகளாக பல கருத்துகளைச் சுமந்து வருகிறது. இந்த 20 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் நிலவிய அரசியல் சூழல்கள் அவற்றைத் தமிழ்நாடும், இயக்கமும் எதிர்கொண்ட செயல்முறைகள் ஒத்த கருத்துள்ள பல இயக்கங்களின் பார்வையிலிருந்து மாறுபட்டு கொள்கை சார்ந்தும், நடைமுறைகள் சார்ந்தும் எடுத்த தனித்த நிலைப்பாடுகள் பலவும், கழகத்தின் அன்றாட நிகழ்வுகளையும் படம் பிடித்து காட்டுகிறது.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அச்சாகி அஞ்சலில் அனுப்பப்படும் இதன் ஆண்டு சந்தா 2021 ஆண்டு வரை 200 மட்டுமே. 2022 ஜனவரி முதல் 250

பழைய இதழ்களை படிக்க http://dvkperiyar.com/?page_id=17555

@PeriyarMuzhakam என்ற கீச்சு முகவரியில் படிக்கலாம்

வார இதழ் தவிர, திராவிடர் விடுதலைக் கழகம் "நிமிர்வோம்" என்ற பெயரில் மாத இதழும் வெளிவருகிறது