உள்ளடக்கத்துக்குச் செல்

புனித வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபெர்டினாண்டோ மரினெல்லி கலை வார்ப்பகத்தில், விகோ கன்சார்டியால் உருவாக்கப்பட்ட ஒரு புனித வாயில், அது உருவாக்கிக் கொண்டிருந்தபோது.
விக்கோ கன்சார்டி என்பவரால் வடிவமைக்கப்பட்டு, புளோரன்சின் ஃபெர்டினாண்டோ மரினெல்லி கலை வார்ப்பகத்தால் வார்க்கப்பட்ட புனித வாயில், வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள நுழைவாயிலாகும். இது தற்போது 2025 ஆம் ஆண்டு ஜூபிலி கொண்டாட்டத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
புனித வாயிலின் பின்புறம். உள்ளே பல பதக்கங்கள் மற்றும் திருச்சபையின் நியமன ஆவணங்கள் உள்ளன, அப்போது கதவு கடைசியாக திறக்கப்பட்டது. கருணையின் அசாதாரண விழாவின் முடிவில் இருந்து மூடப்பட்டிருந்த இந்தக் கதவு, 2025 விழாவிற்காக டிசம்பர் 24, 2024 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

புனித வாயில் (Holy door) என்பது பாரம்பரியமாக உரோமில் உள்ள போப்பரசரின் முக்கிய பேராலயங்களில் அமைந்துள்ள ஒரு நுழைவாயில் ஆகும். இந்தக் கதவுகள் பொதுவாக செங்கல் மற்றும் சீமைக்காரையால் மூடப்படிருக்கும். இதனால் அவற்றைத் திறக்கமுடியாது. போப்பரசரால் அறிவிக்கப்படும் யூபிலி ஆண்டுகளில் அவை சடங்கு ரீதியாக திறக்கப்படுகின்றன. அந்த வாயில் வழியாக நுழையும் யாத்ரீகர்கள் யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய முழுமையான பாவமன்னிப்புகளை பக்தியுடன் பெறுவதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது.

2015 அக்டோபரில், திருத்தந்தை பிரான்சிசு இந்த மரபை விரிவுபடுத்தும் விதமாக யூப்பிலி ஆண்டின் கருனை விரக்க விழாவின்போது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இலத்தீன் கத்தோலிக்க மறைமாவட்டங்களிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளூர் புனித வாயில்களைத் நிறுவச் செய்தார். இதன் மூலம், கத்தோலிக்கர்கள் உரோம் செல்லாமலேயே, யூபிலி ஆண்டில் வழங்கப்படும் முழுமையான பாவ மன்னிப்புகளைப் பெற முடிந்தது.

வரலாறு

[தொகு]

யூபிலி என்னும் புனித ஆண்டின் பாரம்பரியத்தை 1300 ஆம் ஆண்டில், போப் எட்டாம் போனிஃபேஸ் தொடங்கினார். அன்றிலிருந்து கத்தோலிக்க திருச்சபை 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் இதைக் கொண்டாடி வருகிறது.[1] கத்தோலிக்கர்களுக்கு புனித ஆண்டின் முக்கிய பகுதி உரோமுக்கு புனித யாத்திரை செய்வதாகும். புனித வாயிலைக் கடந்து செல்லும் சடங்கு கடவுளின் திருமுன்னிலையில் பிரவேசிப்பதைக் குறிக்கிறது. அதே நேரத்தில், யாத்திரீகர்களின் பாவங்களுக்குரிய தற்காலிக தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கப்படுகிறது, இது பாவமன்னிப்பு என்று அழைக்கப்படுகிறது.[2]

புனித ஆண்டைப் பற்றிய ஆரம்பகால குறிப்புகளில் ஒன்று 1437 ஆம் ஆண்டைச் சேர்ந்த எசுபானிய வரலாற்றாசிரியரும், பயணியுமான பெட்ரோ டஃபூர் என்ற யாத்ரீகரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. டஃபர் யூபிலி பாவமன்னிப்பு உரிமையை, துன்புறுத்தலில் இருந்து தப்பிவந்தவர்களுக்கு அடைக்கல உரிமையுடன் தொடர்புபடுத்துகிறார். முன்னர் புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் அமைந்திருந்த, புவேர்ட்டா டார்பியாவின் வாயிலைக் கடக்கும் வழக்கம் சிலை வழிபாட்டு காலங்களில் இருந்தே நடைமுறையில் இருந்ததைக் அவர் குறிப்பிட்டார். அதன்படி, பேரரசர் கான்ஸ்டன்டைன் வேண்டுகோளின் பேரில், போப் முதலாம் சில்வெஸ்தர், அங்கு அடைக்கலம் புகும் கிறித்தவப் பாவிகளுக்கும் அதே தண்டனையிலிருந்து விலக்கு உண்டு என்று பிரகடனப்படுத்தும் திருத்தந்தையின் ஆணை ஓலையை வெளியிட்டார்.[3]

அந்தச் சிறப்புரிமை விரைவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது, ஒரு கட்டத்தில் அது வணிகமயமாக்கப்பட்டது. இதன் விளைவாக போப்பரசர்கள் அந்த வாயிலை சுவர் கட்டி மூடுமாறு உத்தரவிட்டனர், ஆனால் யூபிலி ஆண்டுகளில் மட்டுமே அது திறக்கப்பட்டது.[சான்று தேவை] அந்தச் சுவர் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடிக்கப்பட்டு, வாயில் திறக்கப்பட்டது. பின்னர் இது ஐம்பது ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது, இப்போது "போப்பின் விருப்பப்படி திறக்கப்படுகிறது"[3].

1450 ஆம் ஆண்டில், விட்டர்போவைச் சேர்ந்த புளோரன்சு வணிகரான ஜியோவானி ருசெல்லாய், போப் ஐந்தாம் மார்ட்டினின் பதவிக்காலத்தில் முதல் யூபிலி வாயில் 1423 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்[4].

போப் ஆறாம் அலெக்சாந்தர், 1500 ஆம் ஆண்டில் யூபிலி சடங்கை புனித பேதுரு பேராலயம், புனித மரியா பேராலயம், சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் ஆகியவற்றில் மற்ற கதவுகளைத் திறப்பதன் மூலம் விரிவுபடுத்தினார். இந்த யூபிலி ஆண்டு கிறிஸ்துமசு அன்று தொடங்கி 1501 ஆம் ஆண்டின் திருக்காட்சிப் பெருவிழா அன்று முடிவடைந்தது.

போப் ஏழாம் ஜான் ஆட்சிக் காலத்தில், இயேசு கிறித்துவின் ஆயுட்காலமாகக் கருதப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கையைப் குறிக்கும் வகையில், ஒவ்வொரு 33 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புனித வாயில்கள் திறக்கப்பட்டன. இது பின்னர் எபிரேயர்களின் யூபிலி கொண்டாட்ட வழக்கத்தை நினைவுகூரும் வகையில் 50 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. அதன் பிறகு, இது ஒரு நூற்றாண்டு காலத்திற்கோ அல்லது ஆளும் போப்பாண்டவரின் விருப்பத்திற்கேற்ப எந்த நேரத்திலோ மாற்றப்பட்டது.

கிரிகோரி XIII இன் யூபிலி நினைவு பதக்கம், 1575

1500 மற்றும் 1974 க்கு இடையில், புனிதவாயில் கதவுக்கு பதிலாக ஒரு திடமான சுவரால் அடைக்கபட்டிருந்தது. போப்பரசர்கள் இந்தச் சுவர்களைச் சடங்கு ரீதியாக இடிக்கும் பணியைத் தொடங்குவர். அதைத் தொடர்ந்து கொத்தனார்களும் இப்பணியை முடித்து, சுவரை முழுமையாக இடித்துத் தள்ளுவர். ஒவ்வொரு யூபிலி ஆண்டின் தொடக்கத்திலும் முடிவிலும் புனிதக் வாயிலைத் திறந்து மூடிய போப்பாண்டவர்களால் வெளியிடப்பட்ட யூபிலி பதக்கங்களில், இந்தச் சடங்கே ஏறக்குறைய எப்போதும் முக்கியப் பொருளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. நான்கு பேராலயங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக புனித வாயில்கள் உள்ளன[3].

1950 ஆம் ஆண்டு கிறித்துமஸ் நாளன்று புனித ஆண்டை நிறைவான சமயத்தில், போப் பன்னிரண்டாம் பயஸ் 1748 ஆம் ஆண்டு போப் பதினான்காம் பெனடிக்ட் அவர்களால் நிறுவப்பட்டு பழுதடையத் தொடங்கி இருந்த மரக் கதவுகளை மாற்ற முடிவு செய்தார். எனவே அதற்குப் பதிலாக, விக்கோ கன்சார்டி என்பவரால் வடிவமைக்கப்பட்டு, பெர்டினாண்டோ மரினெல்லி கலை வார்ப்பகத்தால் வார்க்கப்பட்ட கதவுகளைப் பொருத்தினார். அதுவே இன்று காணப்படும் 16-பலகைகள் கொண்ட வெண்கலக் கதவுகளாகும்.

குறியீட்டுவாதம்

[தொகு]
ரோமில் உள்ள புனித மரியா பேராலய தேவாலயத்தில் உள்ள புனித வாயில்.

யோவான் 10:9-இல், இயேசு, "நானே வாயில். என் வழியாக நுழைபவர் மீட்புப் பெறுவர்" என்று கூறியதாக குறிப்பிடபட்டுள்ளது[5]. லூக்கா 11:9-ல், "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்டும்." என்று காணப்படுகிறது. வெளிப்படுத்தல் 3:20 இவ்வாறு கூறுகிறது, "இதோ, நான் கதவருகே நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், (அப்போது) நான் அவன் வீட்டிற்குள் நுழைந்து, அவனோடு உணவருந்துவேன், அவனும் என்னோடு உணவருந்துவான்." "இந்த சடங்கின் குறியீடானது, அடைக்கலம் தேடும் பழைய கருத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்று ஹெர்பர்ட் தர்ஸ்டன் கூறுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_வாயில்&oldid=4571330" இலிருந்து மீள்விக்கப்பட்டது