புனித மரம்

புனித மரம் (Sacred tree) என்பது புனிதமானதாகக் கருதப்படும், அல்லது ஆன்மீக மரியாதை அல்லது பயபக்திக்கு உகந்த மரமாகும் . இத்தகைய மரங்கள் உலக வரலாற்றில் பண்டைய இந்து, கிரேக்கம், செல்டிக், ஜெர்மானிய தொன்மங்கள் உட்பட பல்வேறு பண்பாடுகளில் காணப்படுகின்றன. மேலும் அவை பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறித்துவின் திருச்சபையின் நம்பிக்கைகளுக்கு மையமாக உள்ளன. ஜப்பான் ( ஷின்போகு ), கொரியா ( டங்சன் நமு ), இந்தியா (போதி மரம்), பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் சமகால பண்பாட்டிலும் இவை தொடர்ந்து ஆழமான பொருளைக் கொண்டுள்ளன. மர வழிபாடு என்பது சமயங்களின் முக்கியப் பகுதியாகும். இதில் மரங்கள், காடுகள், ஆறுகள், மலைகள் போன்றவற்றுக்கு உயிர் சக்தி ('அனிம்') உள்ளது என்ற நம்பிக்கையான ஆன்மவாதத்தின் அம்சங்கள் அவற்றின் நம்பிக்கையின் முக்கிய கூறுகளில் அடங்கும்.).

சமகால நகர்ப்புற பண்பாட்டில் புனித மரங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு கயாஷிமா நிலையத்தின் நடுவில் வளர்துள்ள 700 ஆண்டுகள் பழமையான கற்பூர மரம் ஆகும். தொடருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியிருந்தபோது உள்ளூர்வாசிகள் மரத்தை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், எனவே நிலையம் அதைச் சுற்றிக் கட்டப்பட்டது. [1] புனிதமான ஆலமரம் இந்தியாவின் தேசிய மரமாகும், மேலும் புத்தர் புத்தகயையில் தியானம் செய்ததாகக் கூறப்படும் போதி மரமும் புனிதமாக மதிக்கப்படுகிறது.
புனித மரங்கள் சில சமயங்களில் புனித தோப்புகளில் காணப்படும். அவற்றில் மற்ற வகை மரங்களும் இருக்கும். [2]

சமயங்களில் புனித மரங்களும் தாவரங்களும்
[தொகு]இந்திய சமயங்கள்
[தொகு]

இந்து, பௌத்தம், சைனம் போன்ற இந்திய சமயங்களில், மரங்கள், ஆறுகள், விலங்கினங்கள், மலைகள் போன்ற இயற்கைப் பொருட்கள் புனிதமான மற்றும் வழிபாட்டுப் பொருட்களாக உள்ளன. இந்தியாவில் ஏராளமான புனித தோப்புகள் உள்ளன. இந்து நம்பிக்கையில், கற்பக மரம் என்பது ஆசைகளை நிறைவேற்றும் மரமாகும். இராமாயணத்தோடு தொடர்புடைய பஞ்சவடி மரங்கள் மட்டுமல்லாமல் கூடுதலாக, பிற புனித மரங்களாக அக்சயவத் (புனித அத்தி மரம்), வாழை இலை, கடம்பு, பவழமல்லி, சந்தன மரம் போன்ற மர இனங்களும் புனித மரங்களில் அடங்கும். போதி மரம் (ஆலமரம்) சிறப்பாகப் போற்றப்படுகிறது, மேலும் இந்தியாவில் ஏராளமான பெரிய ஆலமரங்கள் உள்ளன. இந்து நூலான மச்ச புராணத்தில், சமசுகிருத மொழி ஸ்லோகம் (பாடல்) உள்ளது அது இந்து சமயத்தில் சூழலியல் பயபக்தியின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. அது "ஒரு குளம் பத்து கிணறுகளுக்கு சமம், ஒரு நீர்த்தேக்கம் பத்து குளங்களுக்கு சமம், அதே நேரத்தில் ஒரு மகன் பத்து நீர்த்தேக்கங்களுக்கு சமம், ஒரு மரம் பத்து மகன்களுக்கு சமம்." தாவரங்கள் மற்றும் மரங்களின் பல பாகங்கள் வேத சடங்குகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வேத இலக்கியங்களில் ஷ்ரௌத சடங்குகளின் பின்னணியில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான மரங்களில் சில: ஆலமரம், அரசமரம், புரசு, குருகிலை, உதும்பரம், சப்பாத்திக் கள்ளி, வில்வம், வன்னி, இலவு, செங்கருங்காலி, கடுக்காய், குமிழ், சொத்தைக்களா ஆகியவை ஆகும். [3]
திரிவேணி தோப்புகள்
[தொகு]திரிவேணி என்பது இந்தியாவில் தோன்றிய சமயங்களுக்கு (இந்து, பௌத்தம், சைனம்) ஆல் (ஆல், அரசு, (வேம்பு ஆகிய மூன்று மரத் தோப்புகளும் புனிதமானவை ஆகும்.
பஞ்சவடி தோப்புகள்
[தொகு]
பஞ்சவடி என்பது இந்து, பௌத்தம் சைனம் போன்ற இந்தியாவில் உருவான சமயங்களில் புனிதமான ஐந்து மரங்களின் தோப்புகளாகும். பஞ்சவடியில் ஐந்து வகையான புனித மரங்கள் உள்ளன, இருப்பினும் ஐந்துக்கும் மேற்பட்ட வகையான மரங்களும் புனிதமாகக் கருதப்படுகின்றன. அவை பஞ்சவடியின் ஒரு பகுதியாக உள்ளன. பஞ்சவடியில் காணப்படும் புனித மரங்களாக ஆல், அரசு,வில்வம், நெல்லி, ( அசோகு, உடும்பரா, வேம்பு, வன்னி ஆகியவை ஆகும்.
அரியானா வனத்துறை, ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சவாடி தோப்புகள் உருவாக்குவதற்கான மாநில அளவிலான திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அவை கோயில்கள், குளங்கள், பொது இடங்களில் உருவாக்கப்படும். 2021 முதல், இந்த தோப்புகளை உருவாக்குவதற்கு கிராமங்களில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டன. அவை கிராம மக்களால் பராமரிக்கபடும். ஒவ்வொரு தோப்பிலும், கிழக்கில் அரசமரம், வடக்கில் ஆலமரம், மையத்தில் வில்வம், மேற்கில் நெல்லி தெற்கில் அசோகு ஆகிய மரங்கள் நடப்படும்.
புனித தாவரங்கள்
[தொகு]புனிதமான பழங்கள் மற்றும் தாவரங்களில் வில்வம், தருப்பைப்புல், துளசி ( துளசி மாடம் மற்றும் துளசி விவாகம் ஆகியவற்றைப் பார்க்கவும்), தாமரை, இருள்நாறி, தென்னை, தாம்பூலம், வாழை இலை போன்றவை புனிதமானவை. இந்தியாவில் துளசியானது சமய மற்றும் பாரம்பரிய மருத்துவ நோக்கங்களுக்காகவும், அதன் ஆவி எண்ணெய்க்காகவும் பயிரிடப்படுகிறது. இது ஒரு மூலிகைத் தேநீராக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்து சமயத்தின் வைணவ சமயத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பக்தர்கள் புனித துளசி செடி அல்லது இலைகளை உள்ளடக்கிய வழிபாட்டைச் செய்கிறனர். புனித மலர்களில் தாமரை, இருள்நாறி, சாமந்தி ஆகியவை அடங்கும்.
சீக்கியம்
[தொகு]சீக்கிய சமயத்தில் புனிதமாகக் கருதப்படும் பல மரங்கள் உள்ளன. பல புனித மரங்கள் அற்புதமான வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடையவை. [4] துக் பஞ்சனி பெர் ("துக்கங்களை நீக்கும் மரம்" என்று பொருள்) என்பது அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு இலந்தை மரமாகும். பீபி ரஜனியின் கணவரான தொழுநோயாளி, இந்த மரத்திற்கு அருகிலுள்ள சிறிய நீர்நிலையில் குளித்த பிறகு குணமடைந்ததாகவும், அந்த மரத்திற்கு குரு ராம் தாஸ் துக் பஞ்சனி என்று பெயரிட்டதாகவும் சீக்கியர்கள் நம்புகின்றனர். மோசமான, அறியப்படாத, குணப்படுத்த முடியாத நோய்கள், மலட்டுத்தன்மை போன்றவை குணமாக கடவுளிடம் வேண்டுவது போன்றவற்றிற்கு இந்த மரம் பொதுவாக பிரார்த்தனை தளமாகப் பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் அருகே ஒரு காலத்தில் சிறிய நீர்நிலை இருந்ததாக நம்பப்படுகிறது. [5] குரு நானக்குடன் தொடர்புடைய மற்றொரு ஜூஜூபா மரம் சுல்தான்பூர் லோதியில் உள்ள குருத்வாரா பெர் சாகிப்பில் உள்ளது. குருநானக் மரத்தின் அருகே மூல மந்திரத்தை சொன்னதாக சீக்கியர்கள் நம்புகிறார்கள்.
தமிழரிடையே புனித மரங்கள்
[தொகு]தமிழ்நாட்டின் பழமையான கோயில்களில் தலமரம் என்ற புனித மரம் உண்டு. பெரும்பாலான சிற்றூர்களில் ஊரின் மிக முக்கியமான இடத்தில் அரச மரம், வேப்ப மரம் ஆகிய மரங்கள் அருகருகே இருக்கும். அதைச் சுற்றி மேடை அமைத்து இருப்பர். அந்த மேடையில் நாகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாட்டுக்கு உரிய ஒன்றாக இருக்கும். வேப்ப மரத்தை பெண்ணாகவும், அரசமரத்தை ஆணாகவும் கருதி இரு மரங்களுக்கும் திருமணம் செய்துவைக்கும் வழக்கம் உள்ளது.[6]
தமிழகத்தில் நெடுங்காலத்திற்கு முன்னிருந்தே மர வழிபாடு இருந்துள்ளது. சங்க காலத்தில் ஊர் மன்றத்தில் உள்ள வேங்கை மரம்[7], கடம்பமரம் போன்றவற்றில் கடவுள் இருந்ததாக கருதி வணங்கியுள்ளனர்.[8] சங்ககால மக்கள் ஆலமரம், கடம்பமரம், புன்னைமரம், கள்ளிமரம்[9], வேங்கை மரம், வேப்பமரம் போன்ற பல மரங்களையும் வணங்கினர். சிவபெருமான் ஆலமரத்தில் தங்கி தவம் புரிவதாக மக்கள் கருதினர்[10]. எனவே சிவனை ஆலமர் கடவுள், தென்முகக் கடவுள், ஆல்கொழு கடவுள் என்று போற்றப்பட்டார். முக்கண்களை உடைய சிவபெருமான் ஆலமுற்றம் என்னும் இடத்தில் எழுந்தருளியுள்ளார் என்று என்று அகநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.[11]
கடம்பமரம் முருகனுக்கு உரிய மரமாகும். இதனால் முருகனுக்கு கடம்பன் என்ற பெயரும் உண்டு. கடம்ப மரத்தை வழிபட்டால் முருகனை வழிபடுவதாக கருதப்பட்டது.[12] முருகன் கடம்ப மலை அணிந்தவன் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது.[13] கடம்ப மரமும், ஆல மரமும் ஏறுதழுவதற்கான மரங்களாக சங்க கால மக்கள் கருதினர். ஏறுதழுவுவதில் தமக்கு வெற்றி வேண்டி இளைஞர்கள் கடம்ப மரத்தை வழிபட்டனர்.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Japanese Train Station Protectively Built Around a 700-Year-Old Tree". 27 January 2017. Archived from the original on 5 June 2023. Retrieved 14 July 2021.
- ↑ Cusack 2011.
- ↑ Sundareswaran NK. "Trees and Plants in the Vedic Literature". academia.edu. Retrieved 23 November 2024.
- ↑ Prill, Susan E. (27 March 2014). "19. Ecotheology". In Singh, Pashaura; Fenech, Louis E. (eds.). The Oxford Handbook of Sikh Studies. Oxford University Press. pp. 223–234. ISBN 9780191004117.
- ↑ Senda, M. (1992). "Japan's Traditional View of Nature and Interpretation of Landscape". GeoJournal 26 (2): 129–134. doi:10.1007/BF00241206. பன்னாட்டுத் தர தொடர் எண்:0343-2521. https://www.jstor.org/stable/41145343.
- ↑ கரூர் கோயிலில் அரச மரம், வேப்ப மரத்துக்கு திருமணம் செய்ய தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு, இந்து தமிழ் திசை, 15 மார்ச் 2024
- ↑ குறுந்தொகை பாடல் 241, அடிகள்:3-5
- ↑ குறுந்தொகை, பாடல் 87
- ↑ புறநாநூறு பாடல் 260, அடிகள் 4-7
- ↑ புறநானூறு பாடல் 198, அடி 9
- ↑ அகநாநூறு பாடல் 181, அடிகள் 16-17
- ↑ பரிபாடல், பாடல் 17, அடிகள் 1-8
- ↑ திருமுருகாற்றுப்படை, பாடல் 1, அடிகள் 1-11
- ↑ கலித்தொகை பாடல், 101, அடிகள்: 13-14