புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள்
புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள் (St. Bartholomew's Day massacre (French: Massacre de la Saint-Barthélemy) என்பது பிரான்சில் கத்தோலிக்கர்களுக்கும் கால்வினிய சீர்திருத்தசபையினருக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் 1572 ஆம் ஆண்டு புனித பர்த்தலமேயுத் திருநாளில் சில கத்தோலிக்க கலவரக்காரர்களும், சில வன்முறைக் குழுக்களும் இணைந்து இயூகனொட் என்றழைக்கப்பட்ட பிரெஞ்சு கல்வானிய சீர்திருத்தத் திருச்சபையினர் மீது மேற்கொண்ட படுகொலைகளைக் குறிக்கிறது
அக்கால பிரான்சு அரசர் ஒன்பதாம் சார்லஸின் தாய், அரசி காத்தரின் டு மெடிசியின் தூண்டுதலின் பேரில் இப்படுகொலைகள் நிகழ்ந்ததாகப் பரவலாகக் நம்பப்படுகிறது. கத்தோலிக்கரான அரசரின் சகோதரி மார்கரெட்டுக்கும் சீர்திருத்தத்திருச்சபைவாதியான நவார் இளவரசர் மூன்றாம் என்றிக்கும் இடையிலான திருமணம் நடைபெற்று நான்காம் நாள் இப்படுகொலைகள் அரங்கேறியது. இவ்வரச திருமணத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு பல முக்கிய, செல்வந்த இயூகனொட்சு பிரமுகர்கள் அந்நேரத்தில் பாரிசில் ஒன்று கூடியிருந்தனர்.
இயூகனொட்களின் அரசியல் தலைவரும், பிரெஞ்சு கடற்படைத் தளபதியுமான காசுபார் டு கொலினியின் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியின் பின் இரண்டு நாட்கள் கழித்து இப் படுகொலைகள் புனித பர்த்தலமேயுத் திருநாளுக்கு முன்தினம் இரவு (23-24 ஆகஸ்ட் 1572) நடந்தது. அரசர் ஒன்பதாம் சார்லசு கடற்படைத் தளபதி கொலினி உட்பட இயூகனொட்களின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டார். இவ்வுத்தரவு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டு பாரிசு முழுவதும் பலர் கொல்லப்படதோடு சில வாரங்களில் ஏனைய நகரங்கள், ஊர்களிலிருந்த பல இயூகனொட்சுகளும் வன்முறை கும்பல்களால் கொல்லப்பட்டனர். சமீபத்தைய தரவுகளின்படி பிரான்சு முழுதும் பரவிய இப்படுகொலை நிகழ்வினால் பலியானேரின் எண்ணிக்கை 5,000 முதல் 10,000 வரை வேறுபடுகிறது.
பின்புலம்
[தொகு]மூன்று சம்பவங்கள் புனித பர்ததலமேயுத் திருநாள் படுகொலைகளுக்கு பிரதான காரணிகளாக இருந்தன:
- சான் ஜெர்மொன் ஒன் லே சமாதான உடன்படிக்கை.
- 18 ஆகஸ்ட் 1572 அன்று நடந்த மூன்றாம் என்றி, மார்கரெட் திருமணம்.
- கடற்படைத் தளபதி கொலினி மீது 22 ஆகஸ்ட் 1572 அன்று மேற்கொண்ட கொலைமுயற்சி .
ஏற்றுக்கொள்ள இயலாத சமாதான உடன்படிக்கையும் , திருமணமும்
[தொகு]1570 ஆகஸ்ட் 5 இல் சான் ஜெர்மொன் ஒன் லே சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டது. இவ்வுடன்படிக்கை பிரான்சில் மூன்றாண்டு காலம் நீடித்த கத்தோலிக்கர்களுக்கும் சீர்திருத்த சபையினருக்குமிடயே நடந்து கொண்டிருந்த மூன்றாம் சமயப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. என்றாலும் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் இவ்வுடன்படிக்கையை எதிர்த்து சமாதானத்தை வலுவிழக்கச் செய்தனர். தீவிர கத்தோலிக்கத்தை பின்பற்றும் கியுஸ் பிரபுக் குடும்பம் அரச ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வுடன்படிக்கையை எதிர்த்து வாக்களித்தது. 1571ல் இயூகனொட்களின் தலைவர்களில் ஒருவரான காஸ்பார் டு கொலினியை அரச ஆலோசனைக் குழுவில் மீண்டும் அமர்த்தியமை பல பிரான்சிய கத்தோலிக்கரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அரசர் ஒன்பதாம் சார்லசும் அரச தாயார் கத்தரின் டு மெடிசியும் நாட்டின் பொருளாதார நலனையும் புரட்டஸ்தாந்தினரின் செல்வாக்கையும் கருத்திற் கொண்டு சமாதான உடன்படிக்கையையும் கொலினியின் அரச பதவியையும் ஆரித்தார்கள்.
அதிகரித்து வரும் முறுகல் நிலையைத் தடுக்கவும் இரு தரப்பினரிடையே சமாதானத்தை வலுப்படுத்தவும் அரசியார் காத்தரின் தனது மகளான மார்கரெட்டை நவார் இராச்சிய இயூகனொட் தலைவியும் அரசியுமான ஜேன் டல்ப்ரேவின் மகன் இளவரசன் என்றிக்கு மணம் முடித்து வைக்கத் தீர்மானித்தார். திருமணம் 18 ஆகஸ்ட் 1572 அன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது. சீர்திருத்தசபை பிரிவைச் சேர்ந்த ஒருவரை கத்தோலிக்க அரச குடும்பத்தில் ஒருவர் திருமணம் செய்வதை கத்தோலிக்கர்களோ போப்பாண்டவரோ விரும்பவில்லை. போப்பாண்டவரும் எசுப்பானியாவின் அரசர் இரண்டாம் பிலிப்பும் காத்தரினின் இம்முடிவை வன்மையாகக் கண்டித்தார்கள்.
பாரிசில் பதற்றநிலை
[தொகு]நிகழவிருக்கும் தங்கள் இளவரசனின் திருமணத்தில் கலந்து கொள்ள செல்வந்த சீர்திருத்தத் திருச்சபையினர் பெருமளவில் பாரீசில் கூடினர். பாரீஸ் ஒரு வன்முறை மிகுந்த இயூகனொட் எதிர்ப்பு நகரம். பெருமளவிலான இயூகனொட்கள் பாரீசில் கூடியமை அங்கு வாழ்ந்த அடிப்படைவாத கத்தோலிக்கர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. கத்தோலிக்க மத போதகர்களின் சீர்திருத்த சபை எதிர்ப்பு பிரச்சாரமும் தூண்டுதலும் நிலைமையை மேலும் மோசமாக்கியது.[2] நாடளுமன்றத்தினர் மற்றும் அரச ஆலோசனைக் குழுவினரின் அரச திருமண தவிர்ப்பு அரசியல் பதற்றத்தையும் உருவாக்கியது.[3]
அத்தோடு விவசாய உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல் வரியும் உயர்த்தப்பட்டது மேலும் நெருக்கடியைக் கொடுத்தது.[4] அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் அரச திருமணத்தின் ஆடம்பரம் சாதாரண மக்களின் மனத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
திருத்தந்தையிடம் கூட அனுமதி பெறாமல் அரசியார் காத்தரின் திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்தது. அரச ஆலோசனைக் குழுவிலிருந்த மதகுருக்களை அதிருப்தியாக்கியது. குறிப்பாக கர்தினால் டு பர்பன் கடுமையாக எதிர்த்தார். இவர் மணமகனுக்குச் சிற்றப்பாவாக இருந்தாலும் சீர்திருத்த பிரிவைச் சாராமல் கத்தோலிக்கப் பிரிவை ஏற்றிருந்தார். இவரை சமாதானப்படுத்தித் திருமணத்தை நடத்த அரசியாருக்குப் பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அது மட்டுமல்லாமல் பிரான்சின் இரு பெரும் முக்கிய குடும்பங்களான கியூஸ் மற்றும் மொண்ட்மொரந்சி குடும்பங்களிடையேயான சச்சரவுகளும் அரச ஆலோசனை குழுவைப் பிளவுறச் செய்தன. பாரிசின் குழப்ப நிலைகளைக் கண்டு ஆகஸ்ட் 20 இல் பாரிஸ் நகர ஆளுனரான மொண்ட்மொரன்சி குடும்பத்தைச் சேர்ந்த பிரங்சுவா தனது பதவியிலிருந்து விலகி சண்ட்டிலி மாகாணத்தில் குடியேறினார்.[5]
இயூகனொட்டின் புதிய சிந்தனை
[தொகு]படுகொலை நிகழ்வுக்கு சில ஆண்டுகள் முன்பு இயூகனொட்களின் அரசியல் சிந்தனைகள் முதன்முறையாக பிரான்சிய முடியாட்சி கொள்கைகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த முடியாட்சிக்கு எதிரான கருத்துகளை நோக்கி நகர்ந்தது. ஜான் கால்வின் 1561ல் வெளியிட்ட திருத்தூதர் தானியேல் வாசகங்கள் நூலில் இதனைப்பற்றி தெரிவித்திருந்தார். அதில், கடவுளை மதிக்காத எந்தவொரு அரசனும் தனது பதவியிலிருந்து வழுவுகிறான் எனும் வாதத்தை எடுத்துக் கொண்ட ஏனைய இயூகனொட் எழுத்தாளர்கள் அதை விரிவுபடுத்தி முடியாட்சிக்கு மாற்றாக குடியாட்சி வர வேண்டுமென ஊக்குவித்தார்கள். பதிலுக்குக் கத்தோலிக்கப் பிரிவு எழுத்தாளர்கள் மற்றும் மத போதகர்கள் குடியாட்சி எனும் எண்ணத்தைக் கடுமையாகச் சாடினார்கள்.[6]
குடியாட்சி தொடர்பான விவாதங்கள் ஆரம்பத்தில் வலுவற்றதாக இருந்தாலும் பார்த்தலமேயுத் திருநாள் படுகொலைகளின் பின் அக்கருத்து இயூகனொட்களிடையே மட்டுமல்லாது ஏனைய மக்களிடையேயும் பரவியது. அரசருக்கு ஆதரவாயிருந்த இயூகனொட் எழுத்தாளர்களும் இப் படுகொலை நிகழ்வின் பின் நாத்திக எண்ணமுடைய அரசன் அழிக்கப்பட வேண்டுமென எழுதினார்கள்.[7] படுகொலைகளின் பின் பிரான்சிய சீர்திருத்தத் திருச்சபை அரசருடன் வெளிப்படையான போரில் ஈடுபட்டு முந்தைய மூன்று சமயப் போர்களிலும் இல்லாத புதிய வடிவமெடுத்தது.[8]
டச்சு கலவரத்தில் இயூகனொட்கள்
[தொகு]குழப்ப நிலையை மேலும் அதிகரிக்கும் விதமாக மற்றுமொரு சம்பவம் நடந்தது. எசுப்பானியா ஆக்கிரமித்த நெதர்லாந்தை நோக்கி பிரான்சிய இயூகனொட் இராணுவப் படை ஒன்று எல்லை தாண்டி சென்று கத்தோலிக்கர்களிடமிருந்த சில நகரங்களைக் கைப்பற்றிய செய்தி பாரிசை நோக்கி வந்தடைந்தது. நெதர்லாந்தில் எசுப்பானிய கத்தோலிக்க அரசருக்கெதிராக சீர்திருத்த திருச்சபைவாத டச்சுக்காரர்கள் முன்னெடுத்த போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் பிரான்சிய இயூகனொட்களின் இச்செயற்பாடு பிரான்சை எசுப்பானியாவுடன் மோதும் அபாய நிலைக்கு அழைத்துச் சென்றது. தளபதி கொலினியே அரசரைத் தூண்டி,[9] ஏலவே நிகழ்ந்ததுபோல் [10] இம்முறையும் சீர்திருத்த திருச்சபையினருக்கு ஆதரவாக செயற்பட வைத்தார் என கத்தோலிக்கர்கள் மனதில் எண்ணம் எழுந்தது
தளபதி டு கொலினியின் மீதான கொலைமுயற்சி
[தொகு]ஆகஸ்ட் 18ல் திருமணம் நடந்து முடிந்த பின்னும் கொலினி மற்றும் சில முக்கிய இயூகனொட் உறுப்பினர்கள் ஜெர்மோன் சமாதான உடன்படிக்கை சம்பந்தமாக அரசருடன் கலந்துரையாடும் பொருட்டு பாரீஸ் நகரத்தில் தங்கியிருந்தனர். ஆகஸ்ட் 22ல் லூவர் மாளிகையிலிருந்து புறப்பட்டு தனது வீடு செல்லும் வழியில் வீதியிலுள்ள ஒரு வீட்டின் மேல் மாடி சாளரத்தில் காத்திருந்த துப்பாக்கிதாரியால் கொலினி சுடப்பட்டார். அதன்பின் ஏற்பட்ட களேபரங்களில் மோரேவர் பிரபு சார்லே லூவியர் என சந்தேகிக்கப்படும் நபர் தப்பினார். இத்துப்பாக்கிச்சூட்டில் கொலினி காயமடைந்தார். இச்சதி முயற்சிக்கு காரணம் யார் எனத் துல்லியமாகத் தெரியாவிடினும் மூன்று பேர் சந்தேகிக்கப்படுகிறார்கள்:
- கியூஸ் குடும்பம்: கர்தினால் லோரய்ன் (துப்பாக்கிச்சூடு சமயம் அவர் ரோமில் இருந்தார்) மற்றும் அவரின் மருமகன்கள் பிரதானமான சந்தேக நபர்களாக உள்ளனர். கத்தோலிக்கத் தலைவர்களான லோரய்னின் மருமகன்கள் பத்து வருடத்தின் முன் நடந்த தங்கள் தந்தையின் கொலைக்கு கொலினி உத்தர்விட்டார் என நம்பி இச்சதியை செய்திருக்கலாம். அத்தோடு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கியுஸ் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டிலிருந்து ஆகும்.
- அல்பாவின் பிரபு: இவர் எசுப்பானிய அரசர் இரண்டாம் பிலிப்பின் உத்தரவின் பேரில் நெதர்லாந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். நெதர்லாந்தில் எசுப்பனிய அரசருக்கெதிரான டச்சு கலவரத்திற்கு கொலினி செய்த உதவிகளை ,மனதில் கொண்டு நெதர்லாந்தில் எசுப்பனிய ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக கொலினி மாறக் கூடுமென நினைத்து இத்திட்டத்தைத் தீட்டியிருக்கலாம்.
- காத்தரின் டு மெடிசி: அரசர் சார்லே மீதான கொலினியின் ஆதிக்கம் அரச தாயாரை கலக்கமுற்ச் செய்தது. கொலினியின் அறிவுரைகளால் எசுப்பனியா மீது பிரான்சு போர் தொடுக்கலாம் என அஞ்சி அரச தாயார் இதை செய்திருக்கலாம்.[11]
படுகொலைகள்
[தொகு]பாரிஸ்
[தொகு]கொலினி மீதான துப்பாக்கிச்சூட்டின் பின்னான நெருக்கடி நிலை படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது. தங்கள் மதிப்புக்குரிய தலைவர் ஒருவரைக் கொல்ல முயற்சி நடந்ததை எதிர்த்து இயூகனொட்கள் போராட்டத்தில் இறங்கினர். கொலினி மீது அரச தாயார் அவநம்பிக்கை கொண்டிருந்தாலும் அரசரிடத்தில் கொலினி நன்மதிப்பைப் பெற்றிருந்தார். பெருகி வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த அரசர் சார்லே படுகாயமுற்று படுக்கையிலிருந்த கொலினியை சந்தித்து கொலைமுயற்சிக்கான நீதி நிலை நாட்டப்படுமென தெரிவித்தார். என்றாலும் போராட்டங்கள் குறையவில்லை. அரசரின் தாயார் இரவுணவு அருந்தும் போது அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்து கடுமையான எதிர்ப்பு கோஷங்கள் எழும்பியது.[12] 4000 இயூகனொட்களை அழைத்துக்கொண்டு கொலினியின் மைத்துனர் [9] பாரிசுக்கு வெளியே முகாமிட்டிருந்தார். தாக்குதல் திட்டம் எதுவுமில்லையெனினும் கொலினியின் மைத்துனரின் இந்நடவடிக்கை பாரிசிலுள்ள கத்தோலிக்கர்களை அச்சுறுத்தியது.
ஆகஸ்ட் 23ம் திகதி அரச தாயார் காத்தரின் அரசர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஆலோசகர்களுடன் டுயிலரி மாளிகையில் நெருக்கடி நிலைமைகளை ஆராயும் பொருட்டு ஒரு சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் எவையென்று சரியாகத் தெரியாவிடினும் பாரிசில் அன்று வரைத் தங்கியிருந்த சில இயூகனொட் தலைவர்களை அப்புறப்படுத்துவதென முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது..[13]
அரசரின் இம்முடிவையடுத்து நகர அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நகரத்தை அடைக்குமாறு உத்தரவிடப்பட்டு நகரவாசிகளுக்கு புரட்டஸ்தாந்தினரிடமிருந்து தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கப்பட்டது. அரச மெய்பாதுகாவலர் படையிடம் கொல்லப்பட வேண்டிய இயூகனொட் தலைவர்களின் பட்டியலொன்று கொடுக்கப்பட்டது. படுகொலை துவங்கிய நேரம் துல்லியமாகத் தெரியாவிடினும் சான் ஜேர்மன் லொக்சேருவா தேவாலயத்தில் தினந்தோறும் நள்ளிரவுக்கும் அதிகாலைக்குமிடையே ஒலிக்கும் மணியோசையின் பின் அரசரின் மெய்க்காவலர்கள் லூவர் மாளிகையிலிருந்து இயூகனொட் தலைவர்களை வெளியேற்றி வீதியில் வைத்து அவர்களை கொலை செய்தனர்.
கியூஸ் குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஒரு குழுவை அழைத்துக் கொண்டு காயப்பட்டு படுக்கையிலிருந்த கொலினியை இழுத்து அவரைக் கொன்று உடலை ஜன்னலினூடே வீசியது. தங்கள் தலைவரைக் கொல்ல ஒரு குழு வருவதைக் கண்ட இயூகனொட் பிரபுக்கள் சிலர் சண்டையிடத் துவங்கினர்,[14] ஆனால் கொலினி எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உறுதியாக இருந்ததை கண்ட கொலையாளிகளில் ஒருவர் ''நான் இவ்வளவு ஆபத்திலுள்ள ஒருவர் காட்டிய மன உறுதியை இதற்கு முன் கண்டதில்லை'' எனக் குறிப்பிட்டார்.[15] சான் ஜெர்மோன் உடன்படிக்கையின் பின் உருவான இரு பிரிவினரிடையேயான பிரச்சினைகள் அதிகரித்து கொலினியின் கொலை மூலம் உச்சநிலையை அடைந்தது. கொலினி கொல்லப்பட்டதன் பின் பாரிசிலிருந்த ஏனைய மக்கள் சீர்திருத்தத் திருச்சபையினர் மீது தாக்குதல் நடத்தினர். பெண்கள், குழந்தைகள் உட்பட பல இயூகனொட்கள் கொல்லப்பட்டனர், சங்கிலிகளை உபயோகித்து சாலைகளை மறித்தமையால் அவர்களுக்கு தப்பிக்கவும் வழியில்லாமல் போனது. கொல்லப்பட்ட உடல்களை வண்டிகளில் ஏற்றி செய்ன் ஆற்றில் வீசினர். அரசர் இப்படுகொலைகளைத் தடுக்க முயற்சி எடுத்த போதிலும் மூன்று நாட்கள் இது தொடர்ந்தது.. படுகொலைகளைத் தடுக்க அதிகாரமிருந்தும் அரச ஆலோசனைக் குழுவிலிருந்த உயர் மட்டத்தினர் அதைச் செய்யாமல் விட்டுவிட்டனர் என வரலாற்று எழுத்தாளர் ஹோல்ட் குறிப்பிடுகிறார்.[16]
இரு பிரதான இயூகனொட் இளவரசர்களான நவார் இளவரசர் என்றி மற்றும் அவரின் மைத்துனரான கொந்தே இளவரசரும் கத்தோலிக்கப் பிரிவுக்கு மாறுவதென வாக்குறுதி வாங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். எனினும் பாரிசிலிருந்து தப்பிய பின் இருவரும் கத்தோலிக்கத்தைக் கை விட்டனர்.[17] சில தரவுகள் அரசியார் காத்தரினின் ஆணையின் பேரிலேயே கியூஸ் குடும்பத்தின் அரச ஆதிக்கத்தை அடக்கும் பொருட்டு அவ்விளவரசர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர் என தெரிவிக்கிறது.
ஆகஸ்ட் 26ல் அரசர் ஒன்பதாம் சார்லே பாரிஸ் நீதிமன்றத்தில் தானே படுகொலைகளுக்கு உத்தரவிட்டதாகவும் அரசுக்கு எதிரான இயூகனொட்களின் சதித்திட்டத்திலிருந்து அரசைப் பாதுகாக்க இவ்வாறு நடந்து கொண்டதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.[18] அதன்பின் ஏனைய சில நகரங்களில் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் ஒரு விழாக் கொண்டாட்டமும் பேரணியும் பாரிசில் நடைபெற்றது.[18]
அடிக் குறிப்புகள்
[தொகு]- ↑ Knecht, Robert J. (2002). The French religious wars: 1562-1598. Oxford: Osprey. pp. 51–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1841763950.
- ↑ லிங்கன் (1989), pp. 93-94
- ↑ J. H. Shennan (1998). The Parlement of Paris. Sutton. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7509-1830-5.
- ↑ Knecht (2001), பி. 359
- ↑ Hugues Daussy (2002). Les huguenots et le roi: le combat politique de Philippe Duplessis-Mornay, 1572-1600. Librairie Droz. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-600-00667-5.
- ↑ Holt (2005), pp. 78-79; Calvin's book was "Praelectiones in librum prophetiarum Danielis", Geneva and Laon, 1561
- ↑ Fernández-Armesto, F. & Wilson, D. (1996), Reformation: Christianity and the World 1500 – 2000, Bantam Press, London, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-593-02749-3 paperback, p. 237
- ↑ ஹோல்ட் (1995 ed), பி. 95
- ↑ 9.0 9.1 Holt (2005), p. 81
- ↑ Knecht, Robert Jean (2001), The Rise and Fall of Renaissance France, 1483-1610, p. 356, Blackwell Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-22729-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-631-22729-8, Google Books
- ↑ Mack P. Holt (19 October 1995). The French Wars of Religion, 1562-1629. Cambridge University Press. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-35873-6.
- ↑ Garrisson, pp. 82-83, and Lincoln, p. 96, and Knecht (2001), p. 361
- ↑ Holt (2005), p. 85.
- ↑ Knecht (2001), ப. 364.
- ↑ De Thou, Jacques- Auguste. Histoire des choses arrivees de son temps. Boston: Ginn and Company.
- ↑ ஹோல்ட் (2005 பதிப்பு), பக் 88-91 (quotation from பி. 91)
- ↑ Dyer, Thomas Henry (1861). The history of modern Europe: from the fall of Constantinople in 1453 to the war in the Crimea in 1857. John Murray. p. 268. பார்க்கப்பட்ட நாள் 28 March 2011.
- ↑ 18.0 18.1 லிங்கன், பி. 98