புனித தமியானோ சிலுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித தமியானோ சிலுவை
San Damiano Cross
Kruis san damiano.gif
ஓவியர்தெரியவில்லை.
பிசான்சிய-இத்தாலியக் கலைப் பாணி
ஆண்டுகிபி சுமார் 1100
வகைவாதுமை மரத் தட்டைப் பலகையில் எழுதிய
திருவோவியம்
இடம்புனித கிளரா பெருங்கோவில், அசிசி

புனித தமியானோ சிலுவை அல்லது "சான் தமியானோ சிலுவை" (San Damiano cross) என்பது இத்தாலி நாட்டு அசிசி நகரில் புனித பிரான்சிசு வணக்கம் செலுத்திய இயேசுவின் உருவப்படத்தை உள்ளடக்கிய திருவோவியம் ஆகும்.[1]

புனித பிரான்சிசிடம் பேசிய திருவோவியம்[தொகு]

1206ஆம் ஆண்டு, ஒரு நாள் புனித அசிசியின் பிரான்சிசு (1181/1182 - அக்டோபர் 3, 1226) புனித தமியானோ கோவிலில் நுழைந்து இறைவேண்டல் செய்யச் சென்றார். கோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவைத் திருவோவியத்தின் முன் முழந்தாட்படியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் ஏறிட்டு இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததைக் கண்டார். இயேசுவின் உதடுகள் அசைவதுபோலத் தெரிந்தது. இயேசுவின் குரல் தெளிவாக பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது:

தம்மோடு பேசியது இயேசுவே என்று உணர்ந்ததும் பிரான்சிசு உணர்ச்சி பொங்க, "அப்படியே செய்கிறேன், ஆண்டவரே" என்று பதிலிறுத்தார்.

முதலில் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவது பற்றித்தான் சிலுவையில் தொங்கிய இயேசு தம்மிடம் கேட்டதாக பிரான்சிசு நினைத்தார். ஆனால் நாள் போகப் போக, தம்மிடம் இயேசு செய்யக் கேட்ட பணி விரிவான ஒன்று என்பதை அவர் உணர்ந்தார். இயேசுவின் பெயரால் கூடுகின்ற சமூகமாகிய திருச்சபையைச் சீரமைக்கவே இயேசு தம்மிடம் கேட்டார் என்பதைப் புரிந்துகொண்ட பிரான்சிசு ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தழுவலானார்.

இவ்வாறு, ஆழ்ந்ததொரு இறையனுபவம் பெற்ற பிரான்சிசு வணங்கிய சிலுவைத் திருவோவியத்துக்கு ஒரு வரலாறு உண்டு.

புனித தமியானோ சிலுவை தோன்றிய வரலாறு[தொகு]

இச்சிலுவைத் திருவோவியம் கிபி 12ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டின் "அம்ப்ரியா" (Umbria) என்னும் பகுதியில் எழுதப்பட்டது. ஓவியத்தை எழுதிய கலைஞர் பெயர் தெரியவில்லை. பிசான்சியக் கலைப் பாணியில் அமைந்த இந்த ஓவியம் இத்தாலி நாட்டில் சில தனிக் கலைப் பண்புகளை ஏற்றது.

புனித தமியானோ கோவில் பகுதியில் குடியிருந்த "புனித கிளாரா ஏழைச் சகோதரிகள்" அவ்விடத்தை விட்டு 1257இல் புனித கிளாரா பெருங்கோவிலுக்கு மாறிச் சென்றார்கள். அவர்கள் தம்மோடு புனித தமியானோ சிலுவைத் திருவோவியத்தையும் எடுத்துச் சென்றார்கள். அவர்களே இன்றுவரை அச்சிலுவை ஓவியத்தை மிகுந்த கரிசனையோடு பாதுகாத்தும் வருகின்றார்கள்.

இன்று இச்சிலுவை புனித கிளாரா பெருங்கோவிலில், சிலுவைச் சிற்றாலயப் பீடத்தின் மேல் பகுதியில் தொங்குகின்றது. இப்பெருங்கோவில் எழும் இடத்தில் முன்னாள்களில் புனித ஜோர்ஜ் கோவில் இருந்தது.

இச்சிலுவையின் ஒரு பிரதி இன்று புனித தமியானோ கோவிலில் உள்ளது.

புனித பிரான்சிசு தொடங்கிய பிரான்சிஸ்கன் சபைத் துறவியர், புனித தமியானோ சிலுவைக்குத் தனிப்பட்ட வணக்கம் செலுத்துகின்றனர். திருச்சபையின் வாழ்வில் மறுமலர்ச்சி கொண்ர்வதற்காக அவர்கள் இயேசுவிடமிருந்து பெற்ற கட்டளையை இச்சிலுவை வழியாகப் பெற்றதாலும், இச்சிலுவைக்கும் புனித பிரான்சிசுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த உறவை முன்னிட்டும் அவர்கள் இச்சிலுவையைச் சிறப்பாகப் போற்றுகின்றார்கள்.[2]

தமியானோ சிலுவைத் திருவோவியத்தின் பொருள் விளக்கம்[தொகு]

புனித தமியானோ சிலுவைக்குப் பல சிறப்புப் பண்புகள் உண்டு. கீழைத் திருச்சபையில் எழுதப்பட்ட பிற திருவோவியங்களைப் போல, இச்சிலுவை ஓவியமும் மக்களுக்குக் கிறித்தவ போதனையை அறிவிக்கவும், அவர்களது நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், இறைவேண்டலுக்குத் தூண்டுதலாக அமையவும் எழுதப்பட்டது.[3]

சிலுவையின் மையச் சித்திரம்: இயேசு[தொகு]

 • இச்சிலுவைத் திருவோவியத்தின் மையம் இயேசு கிறிஸ்து. அவர் அடித்து நொறுக்கப்பட்ட நிலையிலும் உறுதியான உள்ளத்தோடு காணப்படுகின்றார். சிலுவையில் தொங்குவது போல் அல்லாமல் நிமிர்ந்து நிற்பது போல் தோற்றமளிக்கின்றார்.
 • இயேசுவின் உடலின் நிறம் பின்னணி நிறங்களான கருஞ்சிவப்பு, கருப்பு ஆகியவற்றிலிருந்து பளிச்சென்று வேறுபட்டு நிற்கின்றது.
 • இயேசுவின் உடலை ஆணிகள் துளைத்துள்ளன; அவரது தலையில் முண்முடி சூடப்பட்டுள்ளது; ஆனால் அவ்வுடலில் இறைவனின் சக்தியும் ஒளியும் மிளிர்கின்றன.
 • அரசராக மாட்சிமையில் தோன்றும் இயேசு இங்கு இல்லை; துன்பத்தின் பிடியில் சிக்கி, சோர்ந்து தளர்ந்து உயிர்விடுகின்ற இயேசுவும் இங்கு இல்லை. மாறாக, மனிதர் அனைவருக்கும் இறைவாழ்வை நல்கி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இயேசு இங்கே காட்சி தருகின்றார்.
 • இயேசுவின் உருவம் இவ்வோவியத்தில் வருகின்ற மற்ற உருவங்களைவிட அளவில் பெரிதாக உள்ளது. மக்களின் வணக்கத்துக்கு உரியவராக இயேசு இங்கே தோன்றுகின்றார். அவருடைய தலைக்கு மேலே "நசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்னும் சொற்றொடர் இலத்தீனில் ஏறக்குறையை முழுமையாக எழுதப்பட்டுள்ளது (காண்க: யோவான் 19:19. கிரேக்கம் கலந்த இலத்தீன் பாணியில் அச்சொற்றொடர் உள்ளது (IHS Nazarenus Rex Iudeorum).

இயேசுவின் சாவுக்குச் சாட்சி பகர்ந்தோர்[தொகு]

 • இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்த நிகழ்ச்சியைக் கண்ட சாட்சிகள் ஐவர் இயேசுவின் வலப்புறமும் இடப்புறமும் நிற்கின்றனர். வலப்புறம் அன்னை மரியா, யோவான் ஆகியோரும் இடப்புறம் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, நூற்றுவர் தலைவர் ஆகியோர் நிற்கின்றனர்.
 • அன்னை மரியாவும், மகதலா மரியாவும் கன்னத்தில் கையை வைத்திருக்கிறார்கள். இது அவர்கள் நெஞ்சத்தின் ஆழத்தில் உள்ள வேதனையையும் துயரத்தையும் வெளிக்காட்டுகிறது. இக்கலைப் பாணியில் வழக்கமாகக் காணப்படுகின்ற ஒரு குறியீடு இது. அதே நேரத்தில் கடவுள் இயேசுவின் சாவு வழியாக மனித குலத்தை மீட்ட அதிசயச் செயலை வியந்து போற்றும் தோற்றமும் அவர்கள் முகத்தில் தெரிகிறது.

சிலுவை அருகே இயேசுவின் தாய் மரியா[தொகு]

 • இயேசுவின் சாவுக்குச் சாட்சிகளாக உள்ள அன்னை மரியா, யோவான், மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா ஆகிய நால்வரும் புனிதர்கள் என்பதைக் காட்ட அவர்கள் தலையைச் சூழ்ந்து ஒளிவட்டம் உள்ளது.
 • அன்னை மரியாவின் உடை மூன்று நிறங்களில் உள்ளது. அவர் மேலே அணிந்துள்ள போர்வை வெண்ணிறத்தில் உள்ளது. இது வெற்றி, தூய்மை ஆகியவற்றைக் குறிக்கும். அதன் கீழே உள்ள மேலாடை கருஞ்சிவப்பாக உள்ளது. சிவப்பு அன்பின் அடையாளம்; ஆழ்ந்த சிவப்பு ஆழ்ந்த அன்பின் அடையாளம். மரியா கடவுள் மட்டிலும் தம் மகன் மட்டிலும் எல்லையற்ற அன்புகொண்டிருந்ததோடு, எல்லா மக்களையும் தாயன்போடு தம் உள்ளத்தில் கொண்டுள்ளார் என்னும் உண்மை இவ்வாறு உணர்த்தப்படுகிறது.
 • மரியாவின் வலது கை இயேசுவைச் சுட்டிக் காட்டுகிறது. சிலுவையில் தொங்குகின்ற இயேசுவில் தான் மனிதர் மீட்பு என்னும் கொடையைப் பெறுகின்றனர் என்பதையும், இயேசுவே விண்ணகத்துக்கு வழி என்பதையும் மரியாவின் சைகை காட்டுகிறது.
புனித தமியானோ கோவிலும் சிலுவையும். அசிசி நகர், இத்தாலியா.

மகதலா மரியா[தொகு]

 • இயேசுவின் இடது புறம் நிற்கின்ற மகதலா மரியாவின் உடையின் செந்நிறம் கண்களைக் கவர்கிறது. மகதலா மரியா இயேசுவின் மட்டில் காட்டிய ஆழ்ந்த அன்பு இதனால் குறிக்கப்படுகிறது.

நூற்றுவர் தலைவர்[தொகு]

 • ஓவியத்தின் இடது புற ஓரத்தில் நிற்கின்ற நூற்றுவர் தலைவர் இயேசு சிலுவையில் இறந்தபோது சாட்சி கூறினார். துன்பங்களுக்கு நடுவிலும் பொறுமையாய் இருந்து, கடவுளின் திருவுளத்தை இறுதிவரை நிறைவேற்றிய இயேசு உயிர்துறந்ததைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்" என்றார் (காண்க: மாற்கு 16:39). இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் இந்த அறிக்கையை மனதார வெளியிட வேண்டும் என்பதை நூற்றூவர் தலைவர் காட்டுகின்றார்.
 • நூற்றுவர் தலைவரின் கையைப் பார்த்தால், இரு விரல்கள் மடங்கியும் மூன்று விரல்கள் நிமிர்ந்தும் உள்ளன. "இப்போது நான் பேசுகிறேன்" என்று கூறுவதற்கு இக்குறியீடு அடையாளமாய் உள்ளது. "இயேசு உண்மையிலேயே இறைமகன்" என்று அவர் எடுத்துக் கூறுகிறார்.
 • இங்கே நிற்கின்ற நூற்றுவர் தலைவர் லூக்கா நற்செய்தியில் வருகின்ற நூற்றுவர் தலைவராக இருக்கலாம் என்றொரு விளக்கமும் உண்டு. அதன்படி, நூற்றுவர் தலைவருக்குப் பின்னே தெரிகின்ற சிறு உருவம் அவருடைய "ஊழியர்" என்றும், அவரையே இயேசு குணப்படுத்தினார் என்றும் விளக்குவர் (லூக்கா 7:1-10). ஆனால், இவ்விளக்கத்தைப் பலர் ஏற்பதில்லை. மாறாக, மாற்கு 16:39இல் வரும் நூற்றுவர் தலைவரே ஓவியத்தில் உள்ளார்.

சாட்சி பகர்வோர் பற்றி யோவான் நற்செய்தி[தொகு]

இயேசுவை ஈட்டியால் குத்தியவர்[தொகு]

 • இயேசு சிலுவையில் இறந்தபோது சாட்சி கூறிய வேறு மூன்று பேர் சிறிய உருவங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கீழே இடது புறத்தில் நிற்பவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தியவர். அவர் கையில் ஈட்டி உள்ளது. அவரது கண்கள் இயேசுவை ஏறெடுத்து நோக்குகின்றன. மரபுப்படி, அவர் பெயர் "லொஞ்சீனுஸ்" (Longinus). இயேசுவின் வலதுகைக் காயத்திலிருந்து வழிந்தோடுகின்ற இரத்தம் அவரது கைமூட்டு வரை வழிந்து நேரே லொஞ்சீனுசுடைய தலைமீது விழப்போவது போல ஓவியம் எழுதப்பட்டுள்ளது. சில ஓவியங்களில் இயேசு சிந்திய இரத்தம் லொஞ்சீனுசின் கண்ணில் விழுவதுபோல் உள்ளது. அவர் ஒரு கண்ணில் பார்வையற்றவராக இருந்ததாகவும், அக்கண்ணில் இயேசுவின் இரத்தத் துளி விழுந்ததும் அவர் பார்வை பெற்றதாகவும் ஒரு புனைவு உள்ளது.

இயேசுவுக்குப் புளித்த திராட்சை இரசம் கொடுத்தவர்[தொகு]

 • சிறு உருவமாக வரையப்பட்டுள்ள இன்னொரு சாட்சி ஓவியத்தின் வலது புறம் நிற்கிறார். அவர் பெயர் ஸ்டேஃபட்டோன் (Stephaton) என்பது மரபு. இவர் இயேசுவுக்குப் புளித்த திராட்சை இரசத்தைக் கடற்காளானில் தோய்த்துக் குடிக்கக் கொடுத்தவர். கிரேக்க மொழியில் கடற்காளானைக் குறிக்கும் சொல்லின் மரூஉ தான் ஸ்டேஃபட்டோன் என்பர். அவர் கைகளில் கடற்காளானும் ஈசோப்புத் தண்டும் உள்ளன. 1938இல் இவ்வோவியம் பழுதுபார்க்கப்பட்டபோது இப்பொருள்கள் தெரியாவிட்டாலும், மூல ஓவியத்தில் அவை இருந்தன. அவர் அணிந்திருக்கும் குறுகிய ஆடை அவரை உரோமையர் என்று அடையாளம் காட்டினாலும், அவரது உடலின் பிற பகுதிகளைப் பார்க்கும் போது அவர் எருசலேம் கோவிலில் ஒரு காப்பாளராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இயேசுவின் சாவை உற்று நோக்கியவர்கள்[தொகு]

 • நூற்றுவர் தலைவருக்குப் பின்னே ஒரு சிறு உருவம் உள்ளது. அதன் முகம் மட்டுமே தெரிகிறது. அவருக்குப் பின் வேறு மூவரின் தலை மேற்பகுதி மட்டுமே தெரிகிறது. எனவே ஒரு கும்பல் அங்கு உள்ளது என்றும், அதன் முதல் ஆளாக நிற்பவரின் முகம் மட்டுமே தெரிகிறது என்றும் கொள்ளலாம். இயேசு இறந்தபோது பலர் "தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்" (மத்தேயு 27:55). அதுபோலவே, இத்திருவோவியத்தைப் பக்தியோடு உற்று நோக்குபவரும் இயேசுவின் சாவின் உட்பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பாகக் காட்டப்படுகிறது.

சிலுவைச் சாவும் வானதூதர்களும்[தொகு]

 • சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் வலதுகைப் பக்கம் மூன்று வானதூதரும் இடதுகைப் பக்கம் மூன்று வானதூதரும் உள்ளனர். அவர்களுடைய கை அசைவும், முக பாவனையும் அவர்கள் இயேசுவின் வியப்புமிகு சாவு பற்றி உரையாடிக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.
 • சிலுவையில் தொங்கும் இயேசுவின் காலடியில் ஆறு மனித உருக்கள் தெளிவின்றி உள்ளன. வலது புற ஓரத்தில் உள்ள இரு முகங்கள் மட்டுமே தெளிவாக உள்ளன. அவர்களுக்கு ஒளிவட்டமும் உள்ளது. அவர்கள் அம்ப்ரியா பகுதியின் பாதுகாவலர்களாகிய புனித பேதுரு, புனித பவுல் ஆவர். தெளிவாகத் தெரியாத உருவங்கள் அம்ப்ரியா பகுதியின் பிற பாதுகாவலர்களாகிய புனித யோவான், புனித மிக்கேல், புனித ரூஃபீனோ, புனித திருமுழுக்கு யோவான் ஆகியோர்.

சிலுவையும் பேதுருவின் சேவலும்[தொகு]

 • ஓவியத்தின் வலதுபுறம், சிலுவையில் தொங்குகின்ற இயேசுவின் இடது பக்கத்தில் அவரது கணுக்காலுக்குச் சிறிது மேலே ஒரு சேவல் தெரிகிறது. இயேசுவின் முதன்மைச் சீடராகிய பேதுரு, இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட போது தம் உயிரைக் காப்பாற்றும் எண்ணத்தில், "இயேசுவை அறியேன்" என்று சொல்லி மறுதலித்தார். இயேசு அவரிடம் "நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது" (யோவான் 13:38) என்று ஏற்கெனவே கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சிகளை ஓவியத்தில் வரும் சேவல் நினைவூட்டுகிறது. கிறித்துவை நம்புவோர் தம் நம்பிக்கையில் நிலைத்திருக்க கடவுளின் அருளை இறைஞ்ச வேண்டும் என்னும் உண்மை இங்கே சுட்டப்படுகிறது.

இயேசுவின் உயிர்த்தெழுதலும் விண்ணேற்றமும்[தொகு]

 • இந்த ஓவியத்தின் மேல்பகுதியில் நடுவட்டம் ஒன்று உள்ளது. அதில் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவின் உருவம் உள்ளது. அதைச் சூழ்ந்து இருபுறமும் ஐவர் ஐவராக வானதூதர்கள் உள்ளனர். உயிர்த்தெழுந்த இயேசுவின் தலைக்கு மேலே வானகத் தந்தையின் கை தெரிகிறது.
 • வழக்கமாக, சிலுவைச் சாவைச் சித்தரிக்கும் ஓவியங்களில் இயேசுவின் உயிர்த்தெழுதல் இராது. ஆனால் இந்த ஓவியத்தில் இயேசு சாவை வென்று வெற்றி வீரராக விண்ணகம் செல்லும் காட்சி அழகாகச் சித்தரிக்கப்படுகிறது. இயேசு கல்லறையிலிருந்து வெளியேறுவதோடு, தமது வலது காலை முன்னெடுத்து வைக்கிறார். விண்ணகம் செல்லும் பாணியில் அவர் முன்னேறுகின்றார். அவர் போர்த்தியிருக்கும் உடை பொன் நிறத்தில் உள்ளது. இது இயேசுவின் இறைப்பண்பைக் காட்டுகிறது. அவருடைய கழுத்துத் துணி அவர் அன்பினால் உலகை ஆள்வதைக் காட்டுகிறது. அவர் தம் வலது கையை உயர்த்தி ஆசி வழங்குகின்றார். இடது கையில் சிலுவையைச் செங்கோல் போல வைத்திருக்கின்றார். அவருடைய சாவுக்குக் கருவியாக இருந்த சிலுவை இங்கே அவருடைய மாட்சிமையின் அடையாளமாக மாறிவிட்டது. எனவே அது பொன்னிறத்தில் உள்ளது.

விண்ணக மாட்சிமை[தொகு]

 • சூழ்ந்திருக்கும் வானதூதர்கள் விண்ணக மாட்சிமையின் அடையாளமாகப் பொன்னிற, மற்றும் செந்நிற ஆடைகளை அணிந்துள்ளார்கள். ஐந்து வானதூதர்கள் தம் கையை நீட்டி இயேசுவை வாழ்த்துகிறார்கள். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கும் புன்னகை தவழ்கின்றது. இயேசுவின் முகத்திலும் புன்னகையைக் காணலாம்.

வானகத் தந்தை இயேசுவை வரவேற்றல்[தொகு]

 • ஓவியத்தின் மேல் உச்சியில் உள்ள அரைவட்டத்தில் தெரிகின்ற கை விண்ணகத்தில் உறைகின்ற தந்தையாம் கடவுள் தம் மகன் இயேசுவை வரவேற்கும் அன்புச் சைகையாக உள்ளது. தந்தையின் கைவிரல்கள் இரண்டு ஆசி வழங்கும் பாணியில் நிமிர்ந்து உள்ளன.

தமியானோ சிலுவை வழங்கும் போதனை[தொகு]

மேலே தரப்பட்ட விரிவான விளக்கத்தின் அடிப்படையில் தமியானோ சிலுவை வழங்குகின்ற போதனையைக் கீழ்வருமாறு சுருக்கமாகத் தொகுக்கலாம்:

 • இயேசு மனிதர்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுவிக்கும் வண்ணம் சிலுவையில் இறந்தார். அவர்தம் சிலுவைச் சாவு மனிதரின் திட்டத்தால் நிகழ்ந்தது என்றாலும், கடவுள் மனிதர் மட்டில் கொண்ட எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாகவும் இயேசுவின் சிலுவைச் சாவு அமைந்தது.
 • இயேசுவின் காயங்களிலிருந்து வழிந்த இரத்தம் மனிதருக்கு மீட்பு கொணர்ந்தது. இயேசுவிடம் துலங்கிய அன்பு அவரிடம் நம்பிக்கை கொள்வோரிடமும் துலங்க வேண்டும். எனவே, அவர்கள் இயேசுவை "உற்று நோக்கி" அவரிடமிருந்து இறைவாழ்வைப் பெற வேண்டும்.
 • இயேசு இறந்து, உயிர்பெற்றெழுந்த நிகழ்வால் புது வாழ்வு காண்போர் அந்நிகழ்வுக்குச் "சாட்சி பகர" அழைக்கப்படுகிறார்கள்.
 • மனித மீட்பின் வரலாறு இன்றும் தொடர்கிறது. கடவுளின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர் இவ்வுலகில் தொடர்கின்ற பயணம் அவர்களை ஒருநாள் விண்ணகம் கொண்டு சேர்க்கும். அங்கே கடவுளின் அன்பில் அவர்கள் எந்நாளும் மகிழ்ந்து திளைப்பார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

 1. புனித தமியானோ சிலுவை
 2. Scanlan, Michael (1983). The San Damiano Cross: An Explanation. Steubenville, Ohio: Franciscan University Press. OCLC 10409763
 3. Marc Picard, OFM Cap., The Icon of the Christ of San Damiano, Assisi, 1989.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_தமியானோ_சிலுவை&oldid=2758654" இருந்து மீள்விக்கப்பட்டது