புத்த நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்த நூல் [1] என்னும் நூல் உரைநூல்களால் தெரியவரும் நூல்களுள் ஒன்று. ஞானப்பிரகாசர் எழுதிய சிவஞான சித்தியார் பரபக்க உரையில் இந்த நூலின் ஒரு விருத்தப் பாவும், ஒரு வெண்பாவும் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. இந்தப் பாடல்களை இந்த உரைநூல் சுகந்த நூல் எனக் குறிப்பிட்டு விளக்கம் தந்துள்ளது. "புத்தன் என்பவன் சுகந்தன். துக்கத்தின் நிவாரண மார்க்கத்தை உணர்த்தி, சுகத்தைப் பெறும் மார்க்கத்தைக் காட்டுவதால் இந்நூல் 'புத்த நூல்'. இந்தப் பாடல்கள் 'சுகந்தநூல்' துணிபு". திருவொற்றியூர் தத்துவப்பிரகாரும் இந்த நூலின் விருத்தப் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார்.

புத்த சமயக் கோட்பாடுகளைக் கூறும் நூல்களும் தமிழில் 9 ஆம் நூற்றாண்டில் இருந்தன என்பதை இதனால் அறியமுடிகிறது.

மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ள பாடல்கள் [2][தொகு]

நாம் எட்டி வைத்துள்ள உருவம் 3, நாம் அடையும் வேதனை 6. அவற்றால் பெறும் ஞானக் குறிப்பும் 6. செய்கை 20. 5 கந்தப் பொருள்களும் [3] கணப் பொழுதில் பங்கு போட்டுக்கொண்டு மாறிப் பங்கம் ஆகிவிடும். இவை 13 சுகந்த நூல்களில் [4] காட்டப்பட்ட துணிபுகள்.

எட்டிவை உருவம் மூன்று வேதனை ஆறு ஞானம்
ஒட்டிய குறிப்பு ஓர் ஆறு செய்கையும் இருபது ஆகக்
கட்டிய பஞ்ச கந்தம் கணத்தினில் பங்கம் ஆகும்
தொட்ட நூல் பத்தும் மூன்றும் சுகதநூல் துணிவு தானே. [5]

உடலும் ஆன்மாவும் காரணம் பற்றி வருவன அல்ல. காரணன் ஒருவனால் வருவனவும் அல்ல. எல்லாம் தாமே வரும். நிலையில்லை. ஒன்றன் சார்வால் பிறவி வரும். சார்வால் செயல்களும் நிகழும். இது பதிபு [6] அடிப்படையில் தோன்றி மறையும். இவை 'சுகத நூலின்' துணிந்த முடிவுகள்.

சகசமும் ஆன்மாவும் காரணனும் இல்லை
சகலமும் ஆம் அனித்தம் சார்வால் பிறவி
வகை வினை உண்டு பதிபு ஒன்ற மாய்தல்
சுகதநூல் முத்தித் துணிபு. [7]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 204. 
  2. பாடல்கள் பொருள் நூக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன
  3. பஞ்ச பூதம்
  4. புத்த நூலில்
  5. இது விருத்தம்
  6. பதிவாகிய விதி
  7. இது வெண்பா
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்த_நூல்&oldid=3504869" இலிருந்து மீள்விக்கப்பட்டது