புத்தர் கோயில், தியாகனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயிலில் உள்ள புத்தர் சிலை
வயல்வெளியில் இருந்த, தற்போது தியான மண்டபத்தில் உள்ள புத்தர் சிலை

புத்தர் கோயில் தமிழ் நாட்டில் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தியாகனூர் கிராமத்தில் அமைந்துள்ளது. [1] அத்துடன் இவ்வூரில் புத்தர் தியான மண்டபமும் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் தலைவாசலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், ஆறுகளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து கிழக்கில் 79 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இங்குள்ள புத்தரை தியாகன் என்றே அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குறிப்பிட்டு வந்ததால் தியாகனூர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.[3] தமிழ்நாட்டில் சேலம் மற்றும் பெரம்பலூர் இடையே உள்ள உள் பகுதிகளில் சில தனித்துவமாகவும் கம்பீரமாகவும் தோற்றமளிக்கும் சிலைகளை, 'பெரம்பலூர் புத்தர் சிலைகள்' என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.[4]

புத்தர் கோவில்[தொகு]

அமைப்பு[தொகு]

இக்கோவில் தியாகனூருககு வடக்கில் விரகனூரை ஒட்டி அமைந்துள்ளது. ஓர் அரச மரத்தின் நிழலில், 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட இக்கோவில் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இக்கோவில் கட்டப்பட்டது. விமானத்தின் கிரீவ கோட்டங்களில் நான்கு சுதைச் சிற்பங்கள் இடம்பெற்றள்ளன. கிழக்குக் கோட்டத்தில் புத்தர், தெற்கில் கண்ணன், மேற்கில் நரசிம்மர், வடக்கில் கிருஷ்ணன் என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. [3]

சிலை[தொகு]

கருவறையில் நான்கு கருங்கல் தூண்கள் தாங்கும் மண்டபத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை சுமார் 6 அடி உயரமுடையது. முகத்தில் புன்னகை தவழ, பத்மாசனத்தில் அமர்ந்து அமைதியாகத் தவம் செய்யும் இச்சிலை ஒற்றைக்கருங்கல்லில் செதுக்கப்பட்டது. [1]புத்த நூல்கள் விவரிக்கும் விதமாக, இங்குள்ள புத்தர், "தண்டுகளிலிருந்து தளர்ந்த ஒரு பனை மரத்தின் பழம்" போல அழகாகவும், அமைதியானதாகவும், பிரகாசமாகவும் காணப்படுகிறார். நிலக்கரி வண்ணக் கருப்பு முடியுடன் காணப்படும் அவரது அமைதியான தோற்றம் ஆழமாக ஈர்க்கிறது.[1]

பூசை[தொகு]

ஓய்வு பெற்ற கால்நடை மேற்பார்வையாளரான ஜி.பாண்டுரங்கன், (வயது71), இக்கோவிலைக் கவனித்துக்கொள்கிறார். பெங்களூர் அருகே உள்ள பௌத்த மடாலயத்தைச் சேர்ந்த சிலர் இந்தக் கோவிலுக்கு வருகை தந்தபோது இக்கோவிலில் பௌத்த முறைப்படி வழிப்பாடு நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். இதற்காக பாண்டுரங்கனுக்கு பெங்களூருவில் பயிற்சி தருவதற்கும், மடாலயத்தின் செலவில் பெங்களூரு சென்று வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் தயாராக இருந்துள்ளனர். "ஆனால் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை" என்று இவர் கூறியுள்ளார். இக்கோவிலில் இந்து சமய முறைப்படி பூசைகள் நடைபெற்று வருகின்றன. [1]

புத்தர் தியானமண்டபம்[தொகு]

அமைப்பு[தொகு]

புத்தர் கோவிலுக்கு அருகில் ஒரு தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 10 மீட்டர் உயரம் கொண்ட மண்டபத்தைக் கட்டுவதற்கு சுமார் ரூ.70 லட்சம் செலவாகியுள்ளது. இதற்கான நிதி தொழிலதிபர்கள் மற்றும் தன்னார்வ பங்களிப்பாளர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டது. ஊர் மக்கள் புத்தருக்கு கோவில் அமைப்பதில் முனைப்புக் காட்டியுள்ளனர். மாவட்ட ஆட்சியரும் அரிதான இந்த புத்தர் சிலையை பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொண்டதன் விளைவாக உருவான இந்த மண்டபம் ஜூன் 21, 2013 ஆம் தேதியன்று அவரால் திறந்து வைக்கப்பட்டது.[5] விவசாயி கே துரைசாமி புத்த விகாரை அமைக்க 1955 இல் 20 சென்ட் நிலம் தனமாக வழங்கியுள்ளார். [3]

சிலை[தொகு]

சுருள் முடியுடன் கூடிய புத்தர் பத்மாசனத்தில் தவக்கோலத்தில் அமர்ந்துள்ள இந்த ஒற்றைக் கருங்கற்சிலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சிலை இதற்கு முன்பாக தியாகனூரில் உள்ள வயல்வெளியில் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனைச் சுற்றி பயிரிடப்பட்டிருந்தது. [3] சுமார் ஆறு அடி உயரமுடைய இந்தச் சிலை மூன்று அடி உயரமுடைய தாமரை பீடத்தின் மீது நிறுவப்பட்டுள்ளது.[5]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Buddha at the crossroads The Hindu June 09, 2012
  2. Thiyaganur Onefivenine
  3. 3.0 3.1 3.2 3.3 தியாகனூர் புத்தர் சிலைகள் இளம்போதி March 18, 2014
  4. Ancient Buddha Statues of Salem and Dharmapuri Abhaya Devi. Way of Bodhi October 21, 2020
  5. 5.0 5.1 Buddha dhayna mandapam inaugurated in Salem The Times of India June 29, 2013