புதுக்கோட்டை அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுக்கோட்டை அருங்காட்சியகம்

புதுக்கோட்டை அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாநகரின் திருக்கோகர்ணத்தில் 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பெற்ற பழமையான அருங்காட்சியகம் ஆகும்.இவ்வருங்காட்சியகம், தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிருவகிக்கப்பெறுகின்றது.

அறிமுகம்[தொகு]

புதுக்கோட்டை தமிழக மாவட்டங்களில் ஒன்றாகும். 1974-ஆம் ஆண்டு சனவரி 14-ஆம் நாள் மாவட்டமாக உருவாகியது. இம்மாவட்டம் தமிழ் நாட்டின் 15-ஆவது மாவட்டமாக உருவானது. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு 03.03.1948-இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பெற்றது. தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் இந்த புதுக்கோட்டை அருங்காட்சியகம் தான்.[1]

காட்சிப் பொருட்கள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோலைகள்,அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப் படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பெற்று உள்ளன.

சித்தன்னவாசலின் 2-ம் நூற்றாண்டின் “பிராமி” கல்வெட்டு இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பழங்கால கல்வெட்டுக்கள், கற்சிலைகள், செப்பு பட்டயங்கள், புதையல் வெண்கலப்பானை, குடிநீர் பாத்திரங்கள், தாம்பாளங்கள், குத்து விளக்குகள், சைவ வைணவ பூஜை பொருட்கள், அரக்கு வேலைப்பாடுகள், சித்தன்னவாசல் ஓவியங்கள் சில இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரே மரத்தால் இணைப்புகள் இல்லாமல் செய்யப்பட்ட சங்கிலி, கோட்டைகளில் பயன்படுத்திய பூட்டுகள் என அனைத்தும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.[1]


உசாத்துணை[தொகு]

  • அருங்காட்சியகம், புதுக்கோட்டை
  • புதுகோட்டை மாவட்ட வரலாறு ஆசிரியர்- முனைவர்.ஜெ.இராஜா முகமது, வெளியீடு: இயக்குநர், அரசு அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை-600008.2004. பக்.192-195.

வெளி இணைப்புகள்[தொகு]

  • 1.0 1.1 "நகர்வலம் – புதுக்கோட்டை அருங்காட்சியகம்".