உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய பொருளாதாரக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய பொருளாதாரக் கொள்கை (New Economic Policy, NEP, உருசியம்: но́вая экономи́ческая поли́тика (НЭП), ஒ.பெ நோவயா எக்கனமீச்சிசுக்கயா பொலீத்திக்கா) என்பது 1921 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் விளாதிமிர் லெனின், உருசிய உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதாரக் கொந்தளிப்புக்கு மாற்றாக தற்காலிகமாக அறிமுகப்படுத்திய ஒரு பொருளாதாரக் கொள்கை ஆகும். லெனின் இக்கொள்கையை 1922 இல் ஒரு பொருளாதார அமைப்பாக வகைப்படுத்தினார், அதில் "கட்டற்ற சந்தைமுறை, முதலாளித்துவம், இரண்டும் அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது", அதே சமயம் சமூகமயமாக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் "லாப அடிப்படையில்" செயல்படும்.[1] NEP ஆனது வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவன மற்றும் சந்தை வழிமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் சோவியத் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. இந்தக் கொள்கையின் கீழ் சிறு வணிகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டன; தனிநபர்கள் வர்த்தகம் மற்றும் லாபம் ஈட்டுவதில் ஈடுபட அனுமதித்தது. இது தொழில்முனைவு மற்றும் பொருளாதார மீட்சியை வளர்த்தது.[2]

விவசாய சீர்திருத்தம் புதிய பொருளாதாரக் கொள்கையின் மற்றொரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் இது விவசாயிகள் தங்கள் உபரி விளைபொருட்களை திறந்த சந்தையில் விற்க அனுமதித்தது. இந்த மாற்றம் விவசாய உற்பத்தியை ஊக்கப்படுத்தியது மட்டுமின்றி, தேசத்தை பாதித்த பரவலான உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவியது. பொருளாதாரத்தை மேலும் உறுதிப்படுத்தவும், வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் மற்றும் பண ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கவும் ஒரு புதிய நாணயமும் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்துறை வளர்ச்சியைத் தூண்டுவதையும் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு கூடுதலாக, புதிய பொருளாதாரக் கொள்கை வெளிநாட்டு முதலீட்டை வரவேற்றது.

யோசப் ஸ்டாலின் தலைமைப் பதவியைப் பெற்ற பிறகு 1928 இல் புதிய பொருளாதாரக் கொள்கையை சோவியத் ஒன்றியம் கைவிட்டது.[3]

தோற்றம்

[தொகு]

மார்ச் 1921 இல் உருசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது கட்சி மாநாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. பரவலான பஞ்சம், பொருளாதாரச் சரிவு மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவற்றினால் மார்க்சிய கம்யூனிசத்தின் கடுமையான கொள்கைகளில் இருந்து மாறுதல்களை லெனின் முன்மொழிந்தார். இந்த புதிய கொள்கையானது அரசுடமை ஆக்கப்படாத  வரையறுக்கப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்படட தனியார் நிறுவனங்களுக்கும், சிறிய அளவிலான விவசாயத்திற்கும் அனுமதித்ததுடன் விவசாயிகள் தங்கள் உபரி விளைபொருட்களை அரசிற்கு வரி செலுத்திய பிறகு உள்ளூர் சந்தைகளில் விற்க முடியும். இது போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கவும் முயன்றது.

NEP இன் கீழ் ரூபிளின் பெறுமதி உறுதிப்பட்டு, பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மேலும் மீட்டெடுக்கப்படும் எனவும் மற்றும் பல சோவியத் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தில் படிப்படியான உயர்வுக்கு பங்களிக்கும் எனவும் கருதி இக்கொள்கை முன் மொழியப்பட்டது.

தாக்கங்கள்

[தொகு]
ஸ்திரத்தன்மை மற்றும் ஒழுங்கை மீட்டமைத்தல்

NEP பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தை உறுதிப்படுத்த உதவியது. அதிகரித்த விவசாய உற்பத்தியானது சிறந்த உணவு கிடைப்பதற்கு வழிவகுத்தது; பசியைக் குறைத்தது மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தியது. இந்த ஸ்திரத்தன்மை குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதித்தது.

கலாச்சார மலர்ச்சி

NEP இன் பொருளாதார ஸ்திரத்தன்மை ஒரு துடிப்பான கலாச்சார மலர்ச்சியை உருவாக்கியது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தங்களை வெளிப்படுத்த அதிக சுதந்திரத்தை அனுபவித்தனர். இதன் விளைவாக இலக்கியம், கலை மற்றும் நாடகம் செழித்தோங்கியது. இந்த கலாச்சார மறுமலர்ச்சி, புரட்சிகர இலட்சியங்களை புதிய வெளிப்பாடுகளுடன் கலந்து  ஒரு தனித்துவமான சோவியத் அடையாளத்திற்கு பங்களித்தது.

அதிகரித்த நுகர்வோர் சந்தை

சந்தை வழிமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியதன் மூலம், நுகர்வோருக்கு அதிக அளவில் பொருட்கள்  கிடைத்தது. இந்த மாற்றம் மக்கள் பல்வேறு வகையான தயாரிப்புகளை அணுக அனுமதித்ததுடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது . இருப்பினும்,இது முந்தைய சோசலிச கொள்கைகளுடன் முரண்பட்டும் வகையில் அதிக பொருள் செல்வத்திற்கான மக்களின் நாட்டத்தை  உருவாக்கியது.

சமூக அணுகுமுறைகளில் மாற்றம்

NEP தினசரி வாழ்க்கைக்கு மிகவும் நடைமுறை அணுகுமுறையை ஊக்குவித்தது. பல குடிமக்கள் சுய  தொழில் வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, தனிப்பட்ட வெற்றி மனநிலையை பின்பற்றத் தொடங்கினர். இந்த மாற்றம் முந்தைய சோசலிசம் சார்ந்த கூட்டுக் கொள்கைகளுடன் முரண்பட்டது. இது மிகவும் சிக்கலான சமூகக் கட்டமைப்பிற்கு வழிவகுத்தது.

குலாக்களின் எழுச்சி

குலக்குகள் (Kulaks) என்று அழைக்கப்படும் பணக்கார விவசாயிகள் செழிக்க இந்தக் கொள்கை அனுமதித்தது. ஒரு புதிய சமூக வர்க்கத்தின் இந்த தோற்றம், செல்வ ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்ததால், கிராமப்புற சமூகங்களுக்குள் பதட்டங்களை உருவாக்கியது. சிலர் NEP இலிருந்து பயனடைந்தாலும், மற்றவர்கள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தனர், இது மோதல்களுக்கு வழிவகுத்தது.

நகர்ப்புற இடம்பெயர்வு

பொருளாதார வாய்ப்புகள் அதிகரித்ததால், பலர் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வேலை தேடி இடம்பெயர்ந்தனர். இந்த நகரமயமாக்கல் மாஸ்கோ மற்றும் லெனின்கிராட் போன்ற நகரங்களின் வளர்ச்சிக்கு பங்களித்தது. எனினும் இது சமூக இயக்கவியலை மாற்றியதுடன் பலதரப்பட்ட  நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தை உருவாக்கவும் வழிவகுத்தது.

விளைவு மற்றும் முடிவு

[தொகு]
கருத்தியல் மோதல்கள்

பல போல்ஷிவிக்குகள் NEP ஐ சோசலிசக் கொள்கைகளுக்கு துரோகம் செய்வதாகக் கருதினர். தனியார் நிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ கூறுகளின் அனுமதி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் குறிப்பிடத்தக்க கருத்தியல் பிளவுகளை உருவாக்கியது. இந்த உள் கருத்து வேறுபாடு, புரட்சி முழுமையான சோசலிசத்தை நோக்கி நகர வேண்டும் என்று நம்பிய கடும்போக்கு கம்யூனிஸ்டுகள் மத்தியில் கொள்கை ஆதரவை பலவீனப்படுத்தியது.

சமத்துவமின்மை மற்றும் வர்க்க வேறுபாடு

NEP ஆனது செல்வ ஏற்றத்தாழ்வுகள் தோன்றுவதற்கு வழிவகுத்தது. குறிப்பாக பணக்கார விவசாயிகளை (குலாக்கள்) பயனாளியாகியதுடன், ஏழை விவசாயிகள் ஓரங்கட்டப்பட்டதாக உணரச் செய்தது. இது கிராமப்புற சமூகங்கள் மற்றும் சமூககட்டமைப்புகளுக்குள்  பதட்டங்களை உருவாக்கியது . வளர்ந்து வந்த வர்க்க வேறுபாடுகள், வர்க்கமற்ற சமூகம் என்ற போல்ஷிவிக் குறிக்கோளுடன் முரண்பட்டு, சமூக ஒற்றுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.

விவசாயத்தை சார்ந்திருத்தல்

NEP விவசாய உற்பத்தியை பெரிதும் நம்பியிருந்தது. இது ஆரம்பத்தில் வெற்றிகரமாக இருந்தபோதிலும், பயிர் விளைச்சல் மற்றும் வானிலை நிலைகளில் ஏற்ற இறக்கங்களால் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியதாக மாற்றியது. இந்த நம்பகத்தன்மை அற்ற தொழில்துறை வளர்ச்சியை உருவாக்கியது. ஏனெனில் வளங்கள் பெரும்பாலும் விவசாயத் துறைக்கு ஒதுக்கிடப்பட்டு, ஒட்டுமொத்த பொருளாதார பல்வகைப்படுத்தலைக் கட்டுப்படுத்தியது.

பொருளாதார உறுதியற்ற தன்மை

NEP பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினாலும், அது ஏற்ற இறக்கத்தையும் அறிமுகப்படுத்தியது. இப்பொருளாதாரம் ஓர் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியதுடன் விலை மற்றும் வர்த்தக ஏற்ற இறக்கங்களைப் போதுமான அளவு கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த உறுதியற்ற தன்மை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஸ்டாலினின் எழுச்சி

ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்களும் விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் கூட்டுமயமாக்கலுக்கு வாதிட்டனர், ஒரு சோசலிச அரசின் இலக்குகளை அடைவதற்கு NEP போதுமானதாக இல்லை என்று கருதினர் . 1920 களின் பிற்பகுதியில், ஜோசப் ஸ்டாலினின்  எழுச்சியும் அதிகார உயர்வும் NEP ஆனது சோவியத் பொருளாதார முறைமையில் இருந்து அகற்றப்படுவதற்கு வழிவகுத்தது.

கூட்டுமயமாக்கலுக்கு மாற்றம்

1920 களின் பிற்பகுதியில் NEP இலிருந்து கூட்டுமயமாக்கலுக்கு மாறியது. இது  விவசாய உற்பத்தியை கூட்டுப் பண்ணைகளாக ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த மாற்றம் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயினும் பரவலான பஞ்சம், சமூக அமைதியின்மை மற்றும் கூட்டுமயமாக்கலின் போது பயன்படுத்தப்பட்ட கடுமையான முறைகள் கிராமப்புற மக்களை மேலும் அந்நியப்படுத்தியதுடன் விவசாயிகளின் எதிர்ப்பிற்கும் வழிவகுத்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lenin, V.I. "The Role and Functions of the Trade Unions under the New Economic Policy", LCW, 33, p. 184., Decision of the C.C., R.C.P.(B.), 12 January 1922. Published in Pravda No. 12, 17 January 1922; Lenin's Collected Works, 2nd English Edition, Progress Publishers, Moscow, 1973, first printed 1965, Volume 33, pp. 186–196.
  2. "Britannica Money". www.britannica.com (in ஆங்கிலம்). 2024-10-04. பார்க்கப்பட்ட நாள் 2024-10-06.
  3. "The New Economic Policy (NEP)", Resources for Teaching History : 14–16, Bloomsbury Education, 2010, எண்ணிம ஆவணச் சுட்டி:10.5040/9781472926647.ch-034, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781472926647

வெளி இணைப்புகள்

[தொகு]