புதிய சிந்தனையாளன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய சிந்தனையாளன் (2022 மே மாதத்துக்கு முன்பு சிந்தனையாளன் என்ற பெயரில் வெளியானது) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் இருந்து வெளியாகும் ஒரு சிற்றிதழாகும். இது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் இதழாகும்.

குறிக்கோள்[தொகு]

இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய-பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடியரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்.

வரலாறு[தொகு]

சிந்தனையாளன் இதழை வே. ஆனைமுத்து அவர்கள் 1974 ஆகத்து 17 அன்று தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் கிழமை ஏடாக துவக்கினார். இந்த இதழை அச்சிட்டு வெளியிடுவதற்காகவே பாவேந்தர் அச்சகம் என்ற அச்சகத்தையும் தொடங்கினார். சிந்தனையாளனை அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை அவரும் அவரின் பிள்ளைகளுமே மேற்கொண்டனர்.

1982 இல் சிந்தனையாளன் இதழை சென்னையில் இருந்து வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதழை வெளியிடுவதற்காக பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம் தொடங்கப்பட்டது. பின்னர் 1983 செப்டம்பர் முதல் சிந்தனையாளன் இதழ் சென்னையில் இருந்து பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழும வெளியீடாக வெளியானது. முதலில் கிழமை இதழாகவும், பின் திங்கள் இருமுறை இதழாகவும், அதன்பின் திங்கள் இதழாகவும் வெளியிடப்பட்டுவந்தது.

பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமத்துக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாக சிந்தனையாளன் இதழை கட்சி ஏடாக வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1988 வரை பெரியார் சமஉரிமைக் கழக மாத ஏடாகவும், கட்சியின் பெயர் 1988 மார்ச் 13 முதல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என மாற்றப்பட்டதால் 1988 ஏப்ரல் முதல்மா. பெ. பொ. கட்சி ஏடாக வெளிவந்தது.

சென்னை, திருவல்லிக்கேணி, இலால்பேகம் தெரு எண் 5யிலிருந்து வெளியிடப்பட்டு, பின் இராயப்பேட்டை, பெருமாள் தெரு முகவரியில் இருந்தும், பின்னார் சேப்பாக்கம் முருகப்பா தெருவிலிருந்து வெளியிடப்பட்டது. 1974இல் உரிமம் பெற்ற முகவரி மாற்றப்படாமலே இருந்துவந்தது. 1018 இல் ஆனைமுத்து இதழின் வெளியீட்டு உரிமையை மா.பொ.பொ கட்சிக்கே ஒர் உறுதிமொழி ஆவணம் வாயிலாக எழுதி கொடுத்துவிடார். உரிமத்தை கட்சிப்பெயருக்கு மாற்ற விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் மாபெபொ கட்சி பதிவு பெற்ற கட்சி அல்ல என்று என்று புதுதில்லியில் உள்ள செய்தி ஏடுகளுக்ககான பதிவாளர் உரிமையை மாற்றித் தர மறுக்கப்பட்டது. அதனால் இதழின் வெளியீட்டு உரிமை கட்சியின் பெயருக்கு மாற்ற இயலாமல் போனது. இந்நிலையில் 2020 ஏப்ரல் 6 அன்று வே. ஆனைமுத்து இறந்துவிட்டார். அதன்பிறகு இதழின் ஆசிரியர் பொறுப்பை வாலாசா வல்லவன் ஏற்றார். இதழின் வெளியீட்டு உரிமை ஆனைமுத்து அவர்களின் பெயரிலேயே இருந்துவந்தது. இந்நிலையில் சிந்தனையாளன் என்ற பெயரிலேயே இதழை நடத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், 2022 ஏப்ரல்-மே-இல் இருந்து புதிய சிந்தனையாளன் என்ற பெயரில் இதழ் வெளிவரத் துவங்கியது.[1] இதழும் புதியதாக துவங்கிய இதழ்போன்று சுவடி: 1, ஏடு : 1 என வெளிவரத் துவங்கியது.

காலக்கோடு[தொகு]

  • தொடக்கம்-கிழமை ஏடு-17 செப்டம்பர் 1974
  • மாதமிருமுறை ஏடு -1981-1982
  • இடை நிறுத்தம்-1982 திசம்பர் முதல்
  • சென்னையிலிருந்து கிழமை ஏடாக- 17 செப்டம்பர்1983 முதல்
  • சென்னையிலிருந்து மாதம் இருமுறை ஏடாக- 15 பெப்ரவரி 1984
  • சென்னையிலிருந்து செய்தி மடல்- 1986-1987
  • சென்னையிலிருந்து மாத இதழாக 1988 முதல்[2]
  • 2020 ஏப்ரல் 6 அன்று வே. ஆனைமுத்து இறந்த காரணத்தால் இதழின் ஆசிரியர் பொறுப்பை வாலாசா வல்லவன் ஏற்றார்.
  • சட்ட சிக்கலால் 2022 ஏப்ரல்-மே இதழிலிருந்து புதிய சிந்தனையாளன் என்று புதிய பெயரிலிருந்து இதழ் வெளிவரத் துவங்கியது.

குறிப்புகள்[தொகு]

  1. புதிய சிந்தனையாளன் மாத இதழ் 2022 ஏப்ரல்-மே பக்கம் 3-4
  2. சிந்தனையாளன் மாத இதழ் செப்டம்பர் 2014. பக்கம் 25

வெளி இணைப்புகள்[தொகு]