உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய கைலாச கோயில்

ஆள்கூறுகள்: 23°13′13″N 88°21′53″E / 23.22028°N 88.36472°E / 23.22028; 88.36472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய கைலாச கோயில்
புதிய கைலாச கோயில் எழில்மிகுத் தோற்றம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மேற்கு வங்காளம்
மாவட்டம்:கிழக்கு வர்த்தமான் மாவட்டம்
அமைவு:கல்னா நகரம்
ஆள்கூறுகள்:23°13′13″N 88°21′53″E / 23.22028°N 88.36472°E / 23.22028; 88.36472
கோயில் தகவல்கள்

புதிய கைலாச கோயில் (Naba Kailash Mandir) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தின் கல்னா நகரில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். 1809ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட இந்த கோயில் அமைப்பு, இரண்டு மைய வட்டங்களின் கலவையைக் கொண்டுள்ளது. இதில் 108 சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. 108 என்பது ஒரு செபமாலையில் உள்ள மணிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. மேலும் இந்த கோயிலின் சுவர்களில் மகாபாரதம், இராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வெளி வட்டத்தில் எழுபத்து நான்கு கோயில்களும், உள் வட்டத்தில் முப்பத்து நான்கு கோயில்கள் உள்ளன. இந்த 108 கோயில்களில் ஒவ்வொன்றிலும் ஒரு சிவலிங்கம் உள்ளது.[1] உள் வட்டத்தில் உள்ள ஒவ்வொரு சிவலிங்கமும் சதாசிவனைக் குறிக்கும், வெள்ளை நிறத்திலிருக்கும். வெளி வட்டத்தில் உள்ள சிவலிங்கத்தின் பாதி, ருத்ரா என்பதைக் குறிக்கும் கருப்பு நிறத்திலும், பிற பாதி வெள்ளை நிறத்திலிருக்கும்.[2]

அமைப்பு

[தொகு]
புதிய கைலாச கோயில்
மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் (a) கோயிலின் எழில் தோற்றம் (b) மலர் வடிவம் (c) கழுகுப்பார்வை

புதிய கைலாச கோவிலில் 108 சிவன் கோயில்கள் இரண்டு வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.[3] இரண்டு வட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயில்களில், 74 கோயில்கள் வெளி வட்டத்திலும், 34 கோயில்கள் உள் வட்டத்திலும் அமைந்துள்ளன.[1] வெளி வட்டத்தின் மேற்குப் பகுதியில் அதிகமாக கோயில்கள் உள்ளன. இரண்டு வட்டங்களாக அமைந்த 108 கோயில்களும் அட்-சலா பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளன. உட்புற வட்டத்தின் சுற்றளவு சுமார் 336 அடி (102 மீ) மற்றும் வெளிப்புற வட்டத்தின் சுற்றளவானது சுமார் 710 அடி (220 மீ) ஆகும். இந்த கோயில்கள் குறைந்த உயரமுள்ள அடித்தள-பல்தர்களில் கட்டப்பட்டுள்ளன. மேலும் இவை ஒன்றுக்கொன்று அருகில் உள்ளன. இந்தக் கோயில்கள் சுமார் 20 அடி (6.1 மீட்டர்) உயரமும், 9 அடி (3.9 மீட்டர்) அகலமும் கொண்டவை. வெளி வட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கோயில் பஞ்ச-ரத்னா பாணியில் கட்டப்பட்டுள்ளது. எட்டு படிகள் கொண்ட மண்டபம் உள்ளது. இந்தக் கோயில் 6 அடி உயரம் (1.8 மீட்டர் அடிப்பகுதி) கொண்ட பலிபீடத்தின் மீது அமைந்துள்ளது. மேலும் கோயிலின் உயரம் 35 அடி (11 மீட்டர்) ஆகும். இந்தக் கோயிலின் தற்போதைய பெயர் ஜலேசுவர் கோயில். இரண்டு வட்டங்களின் மையத்திலும் ஒரு கிணறு உள்ளது. இது கோயிலின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.[2][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Amitabha, Gupta (7 September 2022). "Ambika Kalna: An ode to Bengal's temple architecture". www.telegraphindia.com. Retrieved 17 September 2023.
  2. 2.0 2.1 Das, Bibekananda (1999). কালনা মহকুমার প্রত্নতত্ত্ব ও ধর্মীয় সংস্কৃতির ইতিবৃত্ত. Kolkata: Pharma KLM Pvt. p. 71.
  3. "১০৮ শিবমন্দির নিয়ে উদ্বেগ কালনায়". www.anandabazar.com (in Bengali). Kalna. 9 March 2016. Retrieved 17 September 2023.
  4. Chowdhury, Jagyeswar (1994). বর্ধমান: ইতিহাস ও সংস্কৃতি (৩ খণ্ড). Pustaka Bipani. p. 127.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_கைலாச_கோயில்&oldid=4344757" இலிருந்து மீள்விக்கப்பட்டது