புதிய உலக பிணந்தின்னிக் கழுகு
புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் புதைப்படிவ காலம்:இயோசீன் முதல் ஹோலோசீன் வரை | |
---|---|
வான்கோழி பிணந்தின்னிக் கழுகு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | லஃப்ரேஸ்னயே, 1839
|
பரவல் வான்கோழி பிணந்தின்னிக் கழுகு கோடை காலத்தில் மட்டும் காணப்படும் பகுதி குறைந்தது ஒரு உயிரினம் வருடம் முழுவதும் காணப்படும் பகுதி
|
புதிய உலக பிணந்தின்னிக் கழுகு என்பது தற்போது உயிர் வாழும் உயிரினங்களில் 5 பேரினங்களை கொண்டுள்ளது. தற்போது அமெரிக்காக்களின் சூடான மற்றும் மித வெப்பப் பகுதிகளில் காணப்படும் ஐந்து பிணந்தின்னிக் கழுகுகள் மற்றும் இரண்டு கோன்டோர் பறவைகளை இந்த குடும்பம் உள்ளடக்கியுள்ளது. நியோஜீன் காலத்தின் போது புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள், பழைய உலகம் மற்றும் வட அமெரிக்கா ஆகிய இரண்டு பகுதிகளிலும் பரவலாகக் காணப்பட்டன.
பிணந்தின்னிக் கழுகுகள் பெரும்பாலும் இறந்த உயிரினங்களின் உடல்களை உண்டு வாழ்கின்றன. இறந்த உடல்களை உண்பதால் இவற்றிற்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் நல்ல நுகரும் திறனைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகள் இறந்த உயிரினங்களின் உடல்களை பார்வையின் மூலம் கண்டறிகின்றன. பல்வேறு பிணந்தின்னிக் கழுகுகளின் குறிப்பிடத்தகுந்த அமைப்பானது இறகுகள் அற்ற தலைப் பகுதி ஆகும்.
விளக்கம்
[தொகு]புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் பொதுவாக பெரிய உருவத்துடன் காணப்படுகின்றன. 56 முதல் 61 சென்டிமீட்டர் வரை நீளம் உடைய சிறிய மஞ்சள் தலை பிணந்தின்னிக் கழுகு முதல் 120 சென்டிமீட்டர் வரை நீளத்திலும் 12 அல்லது அதற்கு மேற்பட்ட கிலோகிராம் எடையையும் அடையக்கூடிய கலிபோர்னியா மற்றும் ஆண்டீஸ் மலை கோன்டோர்கள் வரை இவை வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. இவற்றின் சிறகுகள் பொதுவாக கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் உள்ளன. சில நேரங்களில் வெள்ளை நிற அடையாளங்களுடன் காணப்படும். அனைத்து உயிரினங்களுமே சிறகுகள் அற்ற தலைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியை கொண்டுள்ளன.[1] சில உயிரினங்களில் இப்பகுதி பிரகாசமான நிறத்திலிருக்கும்.
அனைத்து புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகளும் நீளமான அகண்ட சிறகுகளையும் ஒரு கடினமான வாலையும் கொண்டுள்ளன. இந்த அமைப்பு இவை வானில் உயரே மிதக்க உதவுகின்றது.[2] அனைத்து நிலவாழ் பறவைகளிலேயே வானில் மிதப்பதற்கு ஏற்றவாறு இவை தகவமைந்து உள்ளன.[3]
இவற்றின் அலகானது சற்றே வளைந்துள்ளது. மற்ற கொன்றுண்ணி பறவைகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் அலகானது வலிமையற்று காணப்படுகின்றது.[4] உயிரோடு இருக்கும் உடல்களை கிழிப்பதற்கு பயன்படாமல் இறந்து அழுகிய உடல்களை கிழிப்பதற்கு பயன்படுவதால் இவற்றின் அலகு இவ்வாறு அமைந்துள்ளது.[3]
பரவல் மற்றும் வாழ்விடம்
[தொகு]புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் புவியின் மேற்கு அரைக்கோளத்தில் மட்டுமே காணப்படுகின்றன. இவை தெற்கு கனடாவில் இருந்து தென்னமெரிக்கா வரை காணப்படுகின்றன.[5] பெரும்பாலான புதிய உலக பிணந்தின்னிக் கழுகு இனங்கள் தங்களது வாழ்விடத்தை காலநிலைக்கு ஏற்ப மாற்றுவதில்லை. ஆனால் கனடா மற்றும் வடக்கு ஐக்கிய அமெரிக்காவில் காணப்படும் வான்கோழி பிணந்தின்னி கழுகு இனங்கள் குளிர்காலத்தில் தெற்குப் பகுதிக்கு இடம் பெயர்கின்றன.[6] புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் பல்வேறு வகையான வாழ்விடம் மற்றும் சூழ்நிலை அமைப்புகளில் வாழ்கின்றன. பாலைவனம் முதல் வெப்பமண்டல மழைக்காடுகள் வரை இவை காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து மலைப் பகுதிகள் வரை இவை காணப்படுகின்றன.[5] அழுகிய உடல்களை அறிவதற்கு ஏற்ப தகவமைந்த நுகரும் திறனை இவை பயன்படுத்துகின்றன.
நடத்தை மற்றும் சூழலியல்
[தொகு]வளர்ச்சி
[தொகு]புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் மற்றும் கோன்டோர் பறவைகள் கூடுகளை கட்டுவதில்லை. ஆனால் வெற்று மேற்பரப்பின் மீது முட்டைகளை இடுகின்றன. உயிரினத்தைப் பொருத்து சராசரியாக 1 முதல் 3 முட்டைகள் இடப்படுகின்றன.[1] பிறக்கும் குஞ்சுகள் இறகுகள் இன்றி பிறக்கின்றன.[7]
உண்ணுதல்
[தொகு]தற்போது உயிர் வாழும் அனைத்து புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் மற்றும் கோன்டோர் பறவைகள் தோட்டி விலங்குகள் ஆகும். மேலும் இவை பழங்கள் (குறிப்பாக அழுகிய பழங்கள்) மற்றும் குப்பைகளிலிருந்து உணவு உண்ணக் கூடியவை. அழுகிக் கொண்டிருக்கும் இறந்த விலங்குகளின் உடலிலிருந்து வெளிப்படும் எதைல் மெர்காப்டன் என்ற வேதிப்பொருளின் வாசனையைக் கொண்டு இவை அழுகிய உடல்களை கண்டறிகின்றன. புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகளின் மூளையில் உள்ள வாசனைகளை கிரகிக்கும் பகுதியானது மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது பெரியதாக உள்ளது.[8] அமெரிக்க கருப்பு பிணந்தின்னிக் கழுகு மற்றும் அரச பிணந்தின்னிக் கழுகு ஆகிய மற்ற உயிரினங்கள் போல் நுகரும் திறனை அவ்வளவாக கொண்டிருக்கவில்லை. அவை பார்வையின் மூலமே உணவை கண்டறிகின்றன. சிலநேரங்களில் மற்ற பிணந்தின்னிக் கழுகுகளை பின்தொடர்ந்து அவை உணவை கண்டறிகின்றன.[9]