புதர்க்காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதர்க்காடை
ஆண்
பெட்டை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. asiatica
இருசொற் பெயரீடு
Perdicula asiatica
(Latham, 1790)

புதர்க்காடை (jungle bush quail))((பெர்சிகுடா ஆசியாடிகா) என்பது ஃபாசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த காடை இனப் பறவை ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தை தாயகமாக கொண்டது. இது இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இது நேபாளத்திலும் காணப்படுகிறது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து அங்கு காணப்படவில்லை, மேலும் ரீயூனியன் தீவில் அறிமுகப்படுத்தப்பட்ட பறவைகள் உள்ளன.

இந்த இனங்கள் பல்வேறு வாழ்விடங்களில் புதர் அல்லது பாறை உறை கொண்ட வறண்ட பகுதிகளில் வாழ்கின்றன. இவை விதைகளையும், சிறிய பூச்சிகளையும் உண்கிறது. பொதுவாக இவை 6-25 பறவைகள் கொண்ட சிறிய கூட்டமாக உள்ளன. இனப்பெருக்கம் மழைக் காலத்தின் முடிவில் தொடங்கி குளிர் காலம் முடியும் வரை நீடிக்கும், இதன் வாழிட எல்லைப் பொறுத்து இனப்பெருக்க காலம் மாறுபடும். இவை தரையில் மேலோட்டமாக சுரண்டி கூடுகளை அமைத்து 4-8 முட்டைகளை இடுகின்றன. பெட்டை மட்டுமே அடைகாக்கிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் புதர்காடையை அதன் பெரிய வாழிட எல்லை மற்றும் நிலையான எண்ணிக்கை காரணமாக தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தியுள்ளது.

விளக்கம்[தொகு]

இவை 6.3–7.2 அங்குல (16–18 செ.மீ.) நீளமும், 57–81 கிராம் எடை கொண்ட ஒரு சிறிய வகை காடையாகும். [2] இது குறிப்பிடத்தக்க பாலின இருமையைக் கொண்டுள்ளது. ஆண்பறவையின் முதுகுப்புறம் சிவப்பு கலந்த தவிட்டு நிறத்திலும், கருப்பும் வெளிர் மஞ்சளுமான கறைகளும் கோடுகளும் இடையிடையே காணப்படும். வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும், நெருங்கிய கருங்கோடுகளும் காணப்படும். கண்ணின் மேல் வெளிர் மஞ்சளும் பழுப்புமான புருவமும் தலையில் இருந்து கழுத்துவரை கீழ் நோக்கிச் செல்வது தெளிவாக தெரியும். மேவாயும் தொண்டையும் நல்ல செம்பழுப்பு நிறமாக இருக்கும். பெட்டைக் காடைகளின் உடலின் மேற்பகுதியும் மேவாயும் தொண்டையும் ஆண் பறவையைப் போன்றே இருந்தாலும், உடலின் அடிப்புறம் நிறம் மங்கி இளஞ்சிவப்பு நிறத்திலிதிருக்கும்.

வயதாக வயதாக இந்தப் பறவைகளின் நிற அழகு மங்கத் தொடங்குகிறது. இளம் பறவைகளின் தலையில் செம்பழுப்பு நிறத்தைக் காண முடியாது.

துணை இனங்கள்[தொகு]

புதர் காடைகளில் ஐந்து அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் உள்ளன:[3]

  • P. a. asiatica (லாதம், 1790): இந்த துணையினம், வட, நடு இந்தியாவில் காணப்படுகிறது.[3]
  • P. a. vidali விஸ்லர் & கின்னியர், 1936: தென்மேற்கு இந்தியாவில் காணப்படும், இது பரிந்துரைக்கப்பட்ட கிளையினங்களைக் காட்டிலும் அதிக சிவப்பு நிற மேற்பகுதிகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக தலையின் மேற்புறத்தில், மேலும் ஆண்களின் கீழ்ப்பகுதிகளில் பரந்த வரிகளைக் கொண்டுள்ளது.[4]
  • P. a. ceylonensis விஸ்லர் & கின்னியர், 1936: இலங்கையில் காணப்படுகிறது. இதன் மேல் பகுதி மற்றும் தொண்டை மற்ற கிளையினங்களை விட மிகவும் கருமையாக உள்ளது.[4]
  • P. a. punjaubi விஸ்லர், 1939: பஞ்சாப் காட்டப் புதர் காடை என்றும் அழைக்கப்படும் இது வடமேற்கு இந்தியாவில் காணப்படுகிறது. இது பரிந்துரைக்கப்பட்ட கிளையினங்களை விட வெளிறிய நிறமுடையது.[4]
  • P. a. vellorei அப்துல்அலி & ரூபன், 1965: தென்னிந்தியாவில் காணப்படுகிறது.[3]

நடத்தையும் சூழலியலும்[தொகு]

புத் காடைகளை 6 முதல் 25 வரையிலான சிறு கூட்டமாகவே காணமுடியும். புல்வெளிகளில் உணவு தேடும். காலையிலும் மாலையிலும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நீர் குடிக்க வருவதும் அதேபோல் வரிசை ஒழுங்கு தவறாமல் ஒரு புல்வெளியை விட்டு இன்னொரு புல்வெளியை நாடிச் செல்வது காணத் தகுந்த காட்சியாகும். இரவில் புதர்களில் அடையும்போது சிறு சிறு கூட்டமாகப் பிரிந்து புதர்களில் வெளிப்பக்கமாக பார்த்தபடி படுத்திருக்கும். ஆட்கள் அருகில் வரும்வரை அமைதியாக இருக்கும் இவற்றை காலால் மிதிக்கும் அளவுக்குப் பக்கத்தில் நெருங்கியபின் இவை 'விர்' என இறக்கையை அடித்தபடி எல்லாம் ஒரே சமயத்தில் கூட்டமாக எழுந்து பல திசைகளிலும் சிதறிப் பறக்கும். சற்று தொலைவு பறந்து, பின் புதர்களில் மீண்டும் மறையும், பறவைகள் ஒன்றுக்கு ஒன்று குரல் கொடுத்து மீண்டும் கூட்டமாக சேர்ந்து கொள்ளும்.[4][5]

உணவு[தொகு]

brownish quail chick with black mottling and white stripe on the face
ஒரு காட்டில் புதர் காடை குஞ்சு
five white eggs on a black background
வைஸ்பேடன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் முட்டைகள்

புதர் காடைகள் புல், களைகள், பயறு, தினை போன்றவற்றின் விதைகளையும், கரையான்கள் மற்றும் அவற்றின் குடம்பிகள் போன்ற சிறிய பூச்சிகளையும் உண்ணும்.[5][4]

இனப்பெருக்கம்[தொகு]

பதர் காடைகளின் இனப்பெருக்க காலம் மழைக் கால முடிவில் தொடங்கி குளிர் காலம் முடியும் வரை நீடிக்கும். வாழிடத்திற்கு ஏற்ப காலம் மாறுபடும்: கர்நாடகத்தில் சனவரி முதல் மார்ச் வரை, தக்காணப் பீடபூமியில் அக்டோபர் முதல் மார்ச் வரை, நடு இந்தியாவில் ஆகத்து முதல் ஏப்ரல் வரை, மற்றும் கிழக்கு நடு இந்தியா மற்றும் இலங்கையில் மார்ச் முதல் ஏப்ரல் வரை. ரீயூனியனில், நவம்பரில் இனப்பெருக்கம் நிகழ்கிறது.[4][5]

புல் புதரின் அருமே தரையில் புல்லால் மெத்தென ஆக்கி முட்டையிடும். நான்கு முதல் எட்டு முட்டைகள் வரை இடும். முட்டைகள் கிரீம் வெண்மை நிறமாக இருக்கும். முட்டையின் அளவு 24 mm–28.4 mm × 18.4 mm–22 mm (0.94 அங்–1.12 அங் × 0.72 அங்–0.87 அங்) இருக்கும். 16 முதல் 18 நாட்கள் வரை அடைகாக்கும். ஆண் ஒரே துணையோடு வாழும் பண்பு உடையது. பெண் மட்டுமே அடைகாக்கும். முட்டைகள் பொரிந்த பிறகு, ஆண் பறவை குஞ்சுகளை பாதுகாக்கவும் வளர்க்கவும் உதவுகிறது.[4][5]

மேற்கோள்[தொகு]

  1. BirdLife International (2018). "Perdicula asiatica". IUCN Red List of Threatened Species 2018: e.T22678997A131873750. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22678997A131873750.en. https://www.iucnredlist.org/species/22678997/131873750. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Hume, A.O.; Marshall, C.H.T. (1880). Game Birds of India, Burmah and Ceylon. II. Calcutta: A.O. Hume and C.H.T. Marshall. பக். 116. 
  3. 3.0 3.1 3.2 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela (eds.). "Pheasants, partridges, francolins – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Madge, Steve; Phil, MacGowan (2010) (in en). Pheasants, Partridges, and Grouse: Including buttonquails, sandgrouse, and allies. London: Christopher Helm. பக். 247–248. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-3565-5. 
  5. 5.0 5.1 5.2 5.3 McGowan, Philip J.K.; Kirwan, Guy M. (2020-03-04). Billerman, Shawn M.; Keeney, Brooke K.; Rodewald, Paul G. et al.. eds. "Jungle Bush-Quail (Perdicula asiatica)" (in en). Birds of the World (Cornell Lab of Ornithology). doi:10.2173/bow.jubqua1.01. https://birdsoftheworld.org/bow/species/jubqua1/1.0/introduction. பார்த்த நாள்: 2021-12-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதர்க்காடை&oldid=3763117" இலிருந்து மீள்விக்கப்பட்டது