புங்கா வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புங்கா வீடுகள் (Bhunga) என்பவை இந்தியாவின், குசராத் மாநிலத்தின் கட்ச மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய வீடுகளாகவும், புவி அதிர்ச்சியைத் தாங்கக்கூடியவாறு, குறைந்த செலவில் கட்டப்படும் வீடுகளாகும்.[1]

வரலாறு[தொகு]

1819 ஆம் ஆண்டு இன்றைய குசராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் எட்டாகப் பதிவாகியிருந்தது. அதுவரை நடந்த பூகம்பங்களில் இதுவே அதிகமான ரிக்டர் அளவாகும். இதனால் இப்பகுதியில் உள்ள தேரா, காத்ரா, மோதலா ஆகிய நகரங்களில் இருந்த வீடுகள் முழுவதுமாக மண்ணோடு மண்ணாகின. இந்த நிலநடுக்கப் பாதிப்புக்குப் பிறகு அந்தப் பகுதி கொத்தனார்கள் கூடி நிலநடுக்கத்தால் பாதிக்காத வீடுகளை வடிவமைக்க ஆலோசித்தனர். அவர்கள் தங்களின் மரபார்ந்த பழைய கட்டிடக் கலையில் இருந்து மண் வீடுகளின் தொழில்நுட்பத்தைக் கொண்டு புதிய வகையில் வீடுகளை உருவாக்கத் தொடங்கினர். அவையே புங்கா வீடுகள் என அழைக்கப்படுவன.

புங்கா வீடுகளின் பரவல்[தொகு]

இந்தப் புங்கா வீடுகள் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள கிராமப்பகுதிகளில் பெருமளவு கட்டப்பட்டன. குறிப்பாக பந்நி, பச்சாவ் ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் கட்டப்பட்டன.[2] முதலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் இந்த வீடுகளை கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் வழியாக கட்ச் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இவ்வகை வீடுகள் கட்டப்பட்டன.

கட்டுமானப் பொருட்கள்[தொகு]

பந்நி பகுதி கற்களும், ஜல்லிகளும் இல்லாப் பகுதி என்றாலும், களிமண் நிறைந்த பகுதியாக இருந்தது. இதனால் கட்டுமானத்துக்குக் களிமண்ணைதான் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவியது. மேலும் இப் பகுதியில் பல வகையான மரங்களும் புற்களும் காணப்பட்டதால், இவற்றையும் கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால்தான் இந்தப் பகுதியில் கட்டப்படும் புங்கா வீடுகள், களிமண்ணையும் மரங்களையும் புற்களையும் கொண்டு கட்டப்படுகின்றன. புங்கா வீடுகளின் சிறப்பு கட்டுமானப் பொருள்களை மற்ற பகுதிகளில் இருந்து தருவிக்காமல், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே சுய சார்புடன் கட்டுமானம் செய்கின்றனர்.

கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் பகுதி கட்ச் பாலைவனப் பகுதியைச் சேர்ந்ததாகும். இங்கு காலோ துங்கர், கரோ துங்கர் என்னும் இரு மலைகள் உள்ளன. இந்தப் பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. எனவே இந்தப் பகுதியில் கட்டப்படும் புங்கா வீடுகள் சுண்ணாம்புக் கற்களையும் கட்டுமானப் பொருள்களாகக் கொள்கின்றன.

வீடுகளின் அமைப்பு[தொகு]

புங்கா வீடுகள் பல அறைகளின் தொகுப்பாக உள்ளன. ஒவ்வொரு அறையும் வட்டவடிவில் கட்டப்பட்டிருக்கின்றன. ‘வாஸ்’ என அழைக்கப்படும் தாழ்வாரம் ஒவ்வொரு புங்காவையும் இணைப்பதற்குப் பயன்படுகிறது. இந்தத் தாழ்வாரப் பகுதிகளில்தான் அவர்களின் பெரும்பாலான தினசரி வேலைகள் நடைபெறுகின்றன. ஒரு புங்காவுக்குள் எந்த அறையும் கிடையாது. படுக்கையறையாக ஒரு புங்காவும் வரவேற்பறையாகவும் ஒரு புங்காவும் பயன்படுத்தப்படுவதுண்டு. சமையலறைப் புங்கா, ‘ரன்தனியூ’, என அழைக்கப்படுகிறது. குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும்போது புதியதாக புங்காக்கள் உருவாக்கப்படும்.

புங்கா வீடுகளின் அமைப்பு கால நிலைகளுக்கு ஏற்பத் தாங்கும் நுட்பம் பெற்றவை. குஜராத்தின் இந்த வடபகுதி பாலை நிலப் பகுதியாகும். அதனால் அதிக வெப்பம் வீட்டுக்குள் இறங்காத வண்ணம் இந்த வீடுகளின் தொழில் நுட்பம் உள்ளது. ஒரே ஒரு அறை கொண்ட புங்கா வீடுகளின் சுவர்கள் அடர்த்தியானவை. மேற்கூரை வெப்பத்தைக் கடத்தா வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். புங்காவின் சுவர்களின் காற்றும் வெளிச்சமும் வருவதற்காக சன்னல்கள் உண்டு.

வட்டவடிவ வீடுகள்[தொகு]

பொதுவாக பூகம்பத்தால் வீடுகள் பாதிகப்பட வீட்டின் மூலைகள் ஒரு காரணமாக ஆகிறன. இதனால் வீடுகளில் மூலைகளை தவிர்க்க புங்கா வீடுகளை வட்ட வடிமாகக் கட்டுகின்றனர். இதுவே இதன் தனிச்சிறப்பு ஆகும். அதுபோல நீளம் குறைந்த சுவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நிலநடுக்கத்தைத் தாங்கும் நிலைத்தன்மை கட்டடத்துக்குக் கிடைக்கிறது. கூரைகள் புற்கள் அல்லது ஓலையால் அமைக்கப்படுவதால் கூரையின் பளு குறைவு. அதனால் நிலநடுக்கத்தால் மேற்கூரை விழ வாய்ப்பு குறைவு. 2001ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த நிலநடுக்கத்தில் புங்கா வீடுகள் பாதிப்படையவில்லை என்பதிலிருந்து இந்த வீட்டின் உறுதிக்கு சானாறாக உள்ளது. இவ்வகை வீடுகள் பாதுகாப்பனவை மட்டுமல்லாமல் அழகானவையாக உள்ளன. பண்டிகைக் காலங்களில் பெண்கள் வீட்டின் புறச் சுவர்களில் அழகான வண்ணம் தீட்டுகிறார்கள். உள்ளே கண்ணாடிச் சில்லுகளைக் கொண்டு பூ வடிவத்தில் சித்திரங்கள் உருவாக்குகிறார்கள். புங்கா வீடுகளின் அமைப்பு இன்று குஜராத்தையும் தாண்டிப் பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த அமைப்பு முறையில் இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்தில் தங்கும் விடுதிகளும் கட்டப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhunga': Kutch's engineering wonder". தி இந்து (ஆங்கிலம்) (பெப்ரவரி, 26, 2001). பார்த்த நாள் 11 ஏப்ரல் 2016.
  2. "Traditional Circular House-form (Bhunga) in Kutchh, Gujarat". wikidot.com/. பார்த்த நாள் 11 ஏப்ரல் 2016.
  3. "மரபு இல்லங்கள்-3: பூகம்பம் தாங்கும் புங்கா வீடுகள்". தி இந்து (தமிழ்) (பெப்ரவரி, 27. 2016). பார்த்த நாள் 10 ஏப்ரல் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புங்கா_வீடு&oldid=2557885" இருந்து மீள்விக்கப்பட்டது