புகாரா வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புகாரா வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. இது தற்போது உசுபெக்கிசுத்தான் நாட்டின் புகாரா மாகாணத்தின் தலைநகராகும். பட்டுப் பாதையில் அமைந்துள்ள இந்நகரம் பன்னெடுங்காலமாகச் சிறப்பு மிக்க வணிக மையமாகவும், அறிவியற் களமாகவும், பண்பாட்டுக் கூடமாகவும், சமய நிலையமாகவும் இருந்துள்ளது. சாமானிய அரசின் பொற்காலத்தில் இஸ்லாமிய உலகில் மட்டுமல்லாது அக்காலத்தில் முழு உலகிலுமே மிகச் சிறந்த அறிவியற் களமாக புகாரா நகரம் மிளிர்ந்தது. ஏராளமான பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள் போன்றவற்றைக் கொண்டுள்ள புகாராவின் வரலாற்று மையம் உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக யுனெசுக்கோவினாற் குறிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரசீக நாகரிகத்தின் முதன்மையான இடங்களுள் ஒன்றாக புகாரா திகழ்ந்தது. ஆறாம் நூற்றாண்டில், இந்நகரிற் துருக்கிய மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை மெள்ள மெள்ளக் கூடிச் செல்லலாயிற்று. இந்நகரின் கட்டிடக்கலையும் தொல்லியற் சிறப்பும் நடு ஆசியாவின் வரலாற்றினதும் கலைப் பண்பாட்டினதும் மிகச் சிறந்த தூண்களாகும். புகாராவும் அதன் சுற்றுப் புறமும் பன்னெடுங்காலமாகவே பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே விளங்கியது. இந்நகரின் குடியிருப்பாளர்களின் தொடக்கம் இப்பகுதியில் ஆரியர்களின் குடியேற்ற காலத்துக்கு இட்டுச் செல்கிறது.

கதைவழித் தொடக்கம்[தொகு]

ஈரானியக் காப்பியமான சா நாமாவின்படி, ஈரானின் பிசுதாக்கு மரபின் மன்னருள் ஒருவரான கைக்காவுசு என்பவரின் மகன் மன்னர் சியாவசு என்பவராலேயே இந்நகரம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஏராளமான ஆறுகள், வெப்பமான நிலங்கள் மற்றும் பட்டுப் பாதையில் இதன் அமைவிடம் என்பவற்றின் காரணமாகவே இந்நகரைத் தோற்றுவிக்கத் தேவைப்பட்டதாக அவர் கூறினார். கதையின் படி, சியாவசு தனது சிற்றன்னையான சுதாபிஃ என்பவர் மீது காதலுற்று அவரை மயக்கவும் கெடுக்கவும் முனைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. தான் குற்றமற்றவரெனக் காட்டுவதற்காக அவர் நெருப்பினுள் நடந்ததாகக் கூறப்படுகிறது. தீச்சுவாலைகளினுள்ளிருந்து எவ்விதக் காயமும் படாதவராக வெளிப்போந்த பின்னர், அவர் தற்காலத்தில் ஆமூதர்யா எனப்படும் ஒக்சசு ஆற்றைக் கடந்து தூரானுக்குச் சென்றார். சமர்கந்தின் மன்னன் அபுராசியாபு என்பவன் தன்னுடைய மகளான பரங்கீசு (பாரசீகம்: فرنگيس) என்பவரைச் சியாவசுக்கு மணமுடித்து வைத்ததுடன் புகாரா சோலைவனப் பகுதியல் ஒரு சிற்றரசையும் வழங்கினார். அங்கே அவர் பாரசீக மொழியிற் கோட்டை என்ற பொருளில் ஆர்கு என அழைக்கப்படும் புகாரா கோட்டையையும் அதனைச் சூழவும் நகரையும் நிறுவினார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், சியாவசு தன்னுடைய மாமனரைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு ஒன்றுபட்ட ஈரானுக்கும் தூரானுக்கும் மன்னராக முயல்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை நம்பிய மன்னன் அபுராசியாபு தன்னுடைய மகளான பரங்கீசின் முன்னிலையிலேயே சியாவசைக் கொல்லுமாறு ஏவினான். சியாவசின் தலை கோட்டையின் வைக்கோல் வணிகர் வாயிலுக்குக் கீழே புதைக்கப்பட்டது. இதற்குப் பழிவாங்கு முகமாக, கைக்காவுசு மன்னர் அக்காலத்தில் ஈரானின் மிகச் சிறந்த வீரனான ருஸ்தம் என்பவனைத் தூரானின் மீது படையெடுத்துச் செல்லுமாறு அனுப்பினார். அபுராசியாபைக் கொன்ற ருஸ்தம், பரங்கீசையும் சியாவசின் மகன் கைக்குஸ்ரூவையும் பாரசீகத்துக்கு அழைத்துச் சென்றான்.

தொல்லியற் தொடக்கம்[தொகு]

உத்தியோகபூர்வமாக இந்நகரம் பொ.மு. 500 வாக்கில், தற்போது ஆர்கு எனப்படும் பகுதியில் நிறுவப்பட்டது. எனினும் புகாரா சோலைவனம் அதற்கும் நெடுங்காலத்துக்கு முன்னரேயே குடியிருப்புப் பகுதியாகவே இருந்துள்ளது. உருசியத் தொல்லியலாளர் குசுமினா என்வர் 2007 ஆம் ஆண்டு வரலாற்றுக்கு முந்திய பட்டுப் பாதை, பொ.மு. மூன்றாம் ஆயிரவாண்டில் நடு ஆசியாவில் இந்தோ-ஆரியர்களின் பரவலுக்கு முன்னிருந்த சாமான்-பாபா நாகரிகத்துடன் தொடர்புள்ளதென எழுதுகிறார்.[1] பொ.மு. 3000 முதல் வரகுசா, வர்தான், பைக்கந்து, ராமித்தான் ஆகிய இடங்களிற் சப்பல்லி நாகரிகம் எனப்படும் முன்னேறிய வெண்கலக் காலப் பண்பாடொன்று நிலவியது. பொ.மு. 1500 இல், வறண்ட காலநிலை, இரும்புத் தொழினுட்பம், ஆரிய நாடோடிகளின் வருகை போன்ற காரணிகள் இச்சோலைவனத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் மக்கட்டொகையைச் சடுதியாகக் கூட்டியது. சப்பல்லியரும் ஆரியரும் சரௌசான் ஆற்றின் மருங்குகளிலிருந்த ஏரிக் கரைகளின் அடர்த்தியான காடுகளுக்கு நடுவிலமைந்திருந்த கிராமங்களில் ஒன்றாக வாழ்ந்தனர். பொ.மு. 1000 ஆம் ஆண்டு வாக்கில், இவ்விரு கூட்டத்தினரும் ஒரு தனித்துவமான பண்பாட்டைத் தோற்றுவித்தனர். பொ.மு. 700 ஆம் ஆண்டளவில், சுகுது எனவழைக்கப்பட்ட இப்புதிய பண்பாடு சரௌசான் பள்ளத்தாக்கின் நகர அரசுகளிற் கோலோச்சியது. இக்காலப் பகுதியில், இங்கிருந்த ஏரியிற் சகதி நிறைந்து வற்றிப் போனதால், அரணமைக்கப்பட்ட மூன்று குடியிருப்புக்கள் தோன்றின. பொ.மு. 500 ஆம் ஆண்டாகும் போது நன்கு வளர்ச்சியடைந்திருந்த இக்குடியிருப்புக்கள் மூன்றையும் சுற்றி மதிலமைக்கப்பட்டு, புகாரா நகரம் தோற்றுவிக்கப்பட்டது.

பாரசீக, சாசானியப் பேரரசுகள்[தொகு]

கிரேக்க-பக்திரிய அரசன் இயூக்கிரத்திடேசு (பொ.மு. 170-145) என்வனின் 20-இசுத்தாத்தர் தங்க நாணயம். பண்டைக் காலத்தில் வார்க்கப்பட்ட மிகப் பெரிய தங்க நாணயம் இதுவாகும்.

பொ.மு. 500 ஆம் ஆண்டில், பாரசீகப் பேரரசின் கீழடங்கிய சிற்றரசாக புகாரா வரலாற்றில் நுழைந்தது. பிற்காலத்தில், அது மகா அலெக்சாண்டர், கிரேக்க அடிப்படையிலான செலூசியப் பேரரசு, கிரேக்க-பக்திரியன்கள், குசான் பேரரசு என்பவற்றினால் ஆளப்பட்டது. அக்காலத்தில் அது அநாகித்தா என்னும் பெண் கடவுளின் வழிபாட்டிடமாகத் திகழ்ந்ததுடன் அக்கடவுளின் ஆலயமும் அங்கிருந்தது. சரௌசான் பள்ளத்தாக்கினர் அக்காலத்தில் ஒவ்வொரு சந்திர மாதத்துக்கு ஒரு முறையுமெனத் தம் அநாகித்தாவின் பழைய சிலைகளை அக்கடவுளின் புதிய சிலைகளைக் கொண்டு மாற்றினர். அநாகித்தாவின் மோகு ஆலயத்துக்கு முன்னாலேயே வணிகப் பண்டிகை இடம்பெறுவதாயிருந்தது. அப்பண்டிகை அங்கிருந்த குடியிருப்பாளர் அனைவரும் தங்கி வாழ்ந்த நிலத்தின் வளத்துக்கு மிகத் தேவையாயிருந்தது. அவ்வணிகப் பண்டிகைகளின் காரணமாக, புகாரா சிறப்பு மிக்க வர்த்த நிலையமாக மாறியது. பண்டைக் காலத்தில் வார்க்கப்பட்ட மிகப் பெரிய தங்க நாணயமான கிரேக்க-பக்திரிய அரசன் இயூக்கிரத்திடேசு (பொ.மு. 170-145) என்வனின் 20-இசுத்தாத்தர் என்னும் 169.2 கிராம் நிறையுடை தங்க நாணயம் புகாராவிற் கண்டெடுக்கப்பட்டது. எனினும், அது பிற்காலத்தில் மூன்றாம் நெப்போலியன் என்பவனால் பாரிசு நகரின் பதக்கக் காப்பகம் என்னும் அருங்காட்சியகத்துக்கு உரித்தாக்கப்பட்டது.[2][3][4]

பட்டுப் பாதையில் வணிகத்தை மிகப் பாதுகாப்பானதாக்கும நோக்கில், வடக்கத்திய இனக் குழுக்களை ஹான் மரபினர் (பொ.மு. 206 - பொ.கா. 220) துரத்தியடித்ததைத் தொடர்ந்து பட்டுப் பாதையிலான வணிகம் முன்னேறியதும்,[5] ஏற்கனவே வளமான நகராயிருந்த புகாரா மிகச் சிறந்த வணிகச் சந்தையாக மாறியது. பொ.மு. 350 கள் வரையில் அங்கு நடந்த பட்டு வணிகம் புகாராவின் மக்கட்டொகையைப் பெரிதும் கூடிச் செல்ல வைத்தது. குசான் பேரரசின் வீழ்ச்சியின் பின்னர் மொங்கோலியாவின் உவார் இனத்தினரின் ஆளுகையின் கீழ் புகாரா நகரம் வந்ததும் அதன் சிறப்புக் குன்றத் தொடங்கியது.

அரபியராற் கைப்பற்றப்படுவதற்கு முன்னர், சாசானியப் பேரரசின் கீழ் வாழ்ந்த ஆயினே மானீ, கிழக்கத்திய அசீரியத் திருச்சபை ஆகிய இரு சமயங்களினதும் அரணாக புகாரா விளங்கியது. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த கிறித்தவ சமயச் சின்னங்களைக் கொண்ட ஏராளமான நாணயங்கள் புகாராவினுள்ளும் அதனைச் சூழவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏராளமான நாணயங்களில் சிலுவை போன்ற கிறித்தவ சமயச் சின்னங்கள் காணப்படுகின்றமை காரணமாக, அக்காலத்திய ஆட்சியாளர் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றியிருக்கலாம் என்ற கருத்தும் சிலரிடையே நிலவுகிறது. நடு ஆசியாவில் வேறெங்கும் காணப்படாதளவு மிகப் பெரும் எண்ணிக்கையிலான சிலுவைச் சின்னங்கள் கொண்ட நாணயங்கள் புகாராவிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளன.[6]

பொ.கா. 650 இல் இஸ்லாமியப் படைகள் வந்த போது, பல்லின, பல் சமயக் கூட்டு மக்களைக் கொண்ட நகரமாக புகாரா இருந்தது. இஸ்லாமியக் கலீபகத்தின் ஆட்சியின் கீழ் ஒரு நூற்றாண்டு கழிந்துவிட்ட நிலையிலும் கூட, புகாரா நகரத்தாரிற் பலரும் இஸ்லாத்திற்கு மாறாமல், தங்களது பழைய சமயங்களிலேயே இருந்தனர்.[7] நடு ஆசியாவில் மைய அரசொன்று இல்லாதிருந்தமையினால் எந்தவொரு சண்டையிலும் அரபியரால் மிக எளிதாகவே வெற்றி பெற முடிந்ததெனினும் அவர்களால் நடு ஆசிய ஆட்சிப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. உண்மையில், சுகுதியக் கூட்டமைப்பின் ஏனைய சிற்றரசுகளைப் போலவே, புகாராவும் தாங் பேரரசுக்கு எதிராக இஸ்லாமியக் கலீபகத்தின் உதவியைப் பெற்றிருந்தனர். எவ்வாறெனினும், பொ.கா. 751 இல் தலாசுப் போர் நிகழும் வரையில் அரபிகள் உண்மையில் புகாராவை முழுமையாகக் கைப்பற்றியிருக்கவில்லை. அக்காலப் பகுதியில் புகாராவின் மிகச் செல்வாக்கான சமயமாக இஸ்லாம் மாறியது. இப்போது வரைக்கும் இஸ்லாமே புகாராவின் மிகச் செல்வாக்கான சமயமாகத் திகழ்கிறது.

தொடக்க இசுலாமிய காலம்[தொகு]

நர்சகி தன்னுடைய புகாரா வரலாறு (பொ.கா. 943-44 நிறைவு செய்யப்பட்டது) என்ற நூலிற் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

மகு கடைத்தெரு என்னும் ஒரு கடைத்தெரு புகாராவில் இருந்தது. ஆண்டுக்கு இருமுறை அங்கு ஒரு நாட் சந்தை கூடும். சந்தை நாளின் போது மக்கள் சிலைகளை வாங்கவும் விற்கவும் செய்தனர். இச்செயல் இஸ்லாமிய வெற்றியின் பின்னரும் கூட இடம் பெற்றது. ஆட்கள் சிலைகளை விற்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். சிலை விற்பனையில் நாளாந்தம் 50,000 வெள்ளிக்காசுகள் கைமாறின. முகம்மது இப்னு ஜஃபர் நர்சகி அவ்விடத்துக்குச் சென்ற போது, அது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு புதினப்பட்டார். அவர் புகாராவின் பெரியோர்களிடம் கேட்ட போது, புகாராவாசிகள் பழங்காலத்திற் சிலை வணங்கிகளாகவே இருந்ததாகவும் சில வணங்கிகளுக்கு அது அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.[8] 712-713 ஆண்டு காலப்பகுதியிற் குத்தைபா இப்னு முஸ்லிம் என்பவர் புகாராவின் கோட்டையினுள் ஒரு பெரிய பள்ளிவாசலைக் கட்டினார். அவ்விடம் அதற்கு முன்னர் வேறொரு ஆலயமாக இருந்தது.[9]

பின்னர் புகாராவாசிகள் முஸ்லிம்களாக மாறினர். எனினும் முஸ்லிம் ஆட்சியாளர் அங்கிருந்து சென்ற ஒவ்வொரு வேளையும் அவர்கள் மீண்டும் கிறித்தவராகினர். குத்தைபா இப்னு முஸ்லிம் அவர்களை மூன்று முறை முஸ்லிம்களாக மாற்றியிருந்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் கிறித்தவர்களாகவும் சிலை வணங்கிகளாகவும் மாறினர். நான்காவது தடவை அவர் போரிட்டு அந்நகரைக் கைப்பற்றிய பின்னர் மிகவும் முயன்று அங்கே இஸ்லாத்தை நிலைநாட்டினார்.[10] எப்படியிருப்பினும், ரிச்சர்டு நெல்சன் பிரையி போன்ற அறிஞர்கள் உமையா கலீபா முஆவியா அவர்களின் காலத்திற் குத்தைபா இப்னு முஸ்லிம் என்பவர் வாழ்ந்திருக்கவில்லை என்றும் அவரது காலம் அதற்கு மிகப் பிந்தியது என்றும் கூறுகின்றனர். எனவே, இச்செய்தியின் நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகிறது.[11]

.

தலாசுப் போர் நிகழ்ந்ததிலிருந்து ஒரு நூற்றாண்டு காலத்தினுள் இஸ்லாம் மெள்ள மெள்ள புகாராவினுள் வேரூன்றியது. பொ.கா. 850 இற்சாமானியப் பேரரசின் தலைநகரமாக புகாரா மாறியது. அக்காலப் பகுதியிலேயே அரபு ஆதிக்கத்திலிருந்த புகாராவிற் பாரசீக மொழியும் பண்பாடும் மீண்டும் தழைத்தோங்கின. சாமானியப் பேரரசின் ஆளுகையிலிருந்த போது, அதன் பெருமையைப் பொறுத்தவரையில் பக்தாத் நகருக்குப் போட்டி நகரமாக புகாரா விளங்கியது.[12] அரபு மொழிக்கு மிக்க சங்கை செய்திருந்த அதேவேளை, பூயி மரபினர் மற்றும் சபாரிய மரபினர் ஆகியோரின் ஆட்சிக் காலங்களைவிட மிகக் கூடியளவிற் பாரசீக மொழியையும் பண்பாட்டையும் மீளத் தழைத்தோங்கச் செய்வதில் சாமானியர் பெரும் பங்காற்றினரென அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[12] "இங்கே இப்பகுதியின் மொழி பாரசீகமாகும். இதன் ஆட்சியாளர் பாரசீக மன்னர்களே." எனச் சாமானிய ஆட்சியாளர் கூறியதாகப் புகழ் மிக்க கூற்றொன்று உள்ளது.[12]

சாமானிய அரசின் பொற்காலத்தில் இஸ்லாமிய உலகில் மட்டுமல்லாது அக்காலத்தில் முழு உலகிலுமே மிகச் சிறந்த அறிவியற் களமாக புகாரா நகரம் மிளிர்ந்தது. குறிப்பிடத் தக்க அறிஞர்கள் பலரும் இந்நகரிலேயே தமது ஆக்கங்களை அமைத்தனர். முகம்மது அல்-புகாரி எனவழைக்கப்படும் தலைசிறந்த ஹதீஸ் கலை அறிஞரும் இந்நகரிற் பிறந்தவரே. அவரது ஹதீஸ் தொகுப்பே இஸ்லாமிய உலகில் இன்று வரையும் மிகவும் போற்றப்படும் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது காலப் பகுதியில், புகாரா நகரம் நடு ஆசியாவின் மிகப் பெரும் நகரமாகவும் குர்துபா, கெய்ரோ, பக்தாத் போன்ற பெருநகரங்களைப் போன்று 300,000 பேருக்கு மேற்பட்ட மக்கட்டொகையையும் கொண்டிருந்தது. இந்நகரம் நக்சபந்திய்யா தரீக்கா போன்ற பல்வேறு சூபிய வழிமுறையினரினதும் சிறப்புக்குரிய இடமாகவும் காணப்பட்டது. பொ.கா. 999 இல், சாமானியரிடமிருந்த புகாராவின் ஆட்சி துருக்கிய இனத்தவரான கராகான் மரபினரின் கைகளுக்கு வந்தது. அதன் பின்னர் புகாரா நகரம் குவாரசம் பேரரசின் கீழ் வந்தது. குவாரசம் மரபினரே மொங்கோலியத் தூதரைக் கொலை செய்து அவர்களின் பகையைத் தேடிக் கொண்டோராவர். 1220 ஆம் ஆண்டில், அதன் காரணமாகப் படையெடுத்து வந்த மொங்கோலியப் பேரரசன் செங்கிசு கான் இந்நகரைத் தரைமட்டமாக்கினான். அதன் பின்னர் மீண்டும் மெதுவாகத் தளிர்த்த இந்நகரம் சகதாயி கானரசு, தைமூரியப் பேரரசு என்பவற்றின் பகுதியாக விளங்கியது.

சுகுது ஆற்றிற் தொடங்கி புகாராவின் தோட்டங்களுக்கும் சமவெளிகளுக்கும் நீர் வழங்கிய முதன்மையான ஓடைகளையும் கால்வாய்களையும் பற்றி இப்னு ஹௌக்கல் என்பவர் விபரமாக எழுதியுள்ளார்.[13]

கராகான் மற்றும் குவாரசம்சா காலப் பகுதிகளில் புகாரா[தொகு]

பொ.கா. 1005 இல், கராகானிய மரபினரின் துருக்கிய அரசினுள் புகாரா உள்வாங்கப்பட்டது. இஸ்லாமிய உலகின் மிக அழகிய மினாராக்களுள் ஒன்றான கல்யாண் மினாராவைக் கராகான் ஆட்சியாளர் அர்சலான் கான் கட்டுவித்தார்.

கித்தான் என்னும் நாடோடிக் கூட்டத்துக்கு எதிராகப் போரிடுவதற்காக சீனாவின் சொங் மரபினர் புகாராவின் முஸ்லிம் கூலிப்படையினரை வரவழைத்தனர். 1070 இல், வடகிழக்கிலிருந்த லியாவோ பேரரசுக்கு எதிராகப் போராடுவதற்கும் போரினால் அழிவுற்ற பகுதிகளில் மீண்டும் குடியிருப்புக்களை ஏற்படுத்துவதற்குமென சொங் பேரரசர் சென்சொங் 5,300 முஸ்லிம் ஆண்களை புகாராவிலிருந்து சென்று சீனாவிற் குடியேறுமாறு வேண்டி நின்றார். லியாவோ பேரரசுக்கெதிரான தனது போர் நடவடிக்கைகளில் உதவுவதற்கு சொங் பேரரசர் அக்கூலிப்படையினரைப் பயன்படுத்திக் கொண்டார். பிற்காலத்தில் அவ்வாட்கள் சொங் தலைநகரமான கைபெங்கிற்கும் யெஞ்சிங்கிற்கும் (தற்கால பெய்ஜிங்) இடையிற் குடியேறினர். 1080 இற் சீனாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் 10,000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அழைக்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர்.[14] அவர்கள் சீன மொழியில் சையிது "சோபையர்" என அழைக்கப்பட்ட அப்போதைய புகாராவின் அமீரின் தலைமையிற் சென்று குடியேறினர். அவரே சீனாவில் இஸ்லாத்தின் "தந்தை" எனவழைக்கப்படுகிறார். இஸ்லாத்துக்குச் சீனாவின் தாங் மற்றும் சொங் அரசுகள் வழங்கிய பெயர் சீன மொழியில் தஷி ஃபா ("அரபியரின் சட்டம்") என்பதாகும்.[15] ஆனால் அவர் ஹுயிஹுயி ஜியாவோ ("ஹுயிஹுயியினரின் சமயம்") எனப்படும் புதிய பெயரை இஸ்லாத்துக்கு வழங்கினார்.[16]

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது குவாரசம்சா முகம்மது (1200–1220) என்பவற்றாற் கைப்பற்றப்பட்டது.

புகாரா கானரசு[தொகு]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
புகாரா வரலாற்று மையம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
புகாரா கோட்டை நுழைவாயில்
வகைபண்பாட்டு
ஒப்பளவுii, iv, vi
உசாத்துணை602
UNESCO regionஆசியா-பசுபிக்கு
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1993 (17th தொடர்)

இது 16 ஆம் - 18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய ஒரு நிலப்பண்ணை முறை அரசாகும். அவ்வரசு புகாரா கானரசு எனப் பெயர் பெறக் காரணம் சைபானியர் அரசு (1500–1598) புகாராவுக்கு மாறியதனாலாகும். அதன் கடைசி சைபானிய ஆட்சியாளரான இரண்டாம் அப்துல்லாஹ் கான் (ஆ. 1577–1598) என்பவரது காலத்திலேயே மிகப் பெரும் பரப்பளவையும் புகழையும் கொண்டிருந்தது. 1740 இல் அது நாதிர் ஷாவினால் வெற்றி கொள்ளப்பட்டது. அவரது இறப்பின் பின்னர், 1747 இல், உசுபேக்கிய அமீர் குதாயர்-பீ என்பவரின் வழித்தோன்றல்களால் அது அத்தாலீக்கு எனப்படும் அமைச்சுப் பதவிகளினூடாக ஆட்சி செய்யப்பட்டது. 1785 இல் அவரது வழித்தோன்றலான ஷா முராத் என்பவர் மங்கீத்து மரபினர் எனப்படும் அக்குடும்பத்தின் மரபுவழி ஆட்சியை முறை செய்த பின்னர், கானரசு புகாரா அமீரகமாக மாறியது.[17]

புகாரா அமீரகம் (1785-1920)[தொகு]

ஆலிம் கான் (1880-1944), புகாராவின் கடைசி அமீர், 1920 இற் பதவி நீக்கப்பட்டார்

உருசியப் பேரரசுக்கும் பிரித்தானியப் பேரரசுக்கும் இடையிலான பெரும் ஆதிக்கப் போட்டியின் போது, புகாரா மிக முக்கிய பங்கு வகித்தது. சார்ளசு இசுட்டொடார்த்து, ஆர்த்தர் கொனொல்லி ஆகியோர் புகாராவின் சுல்தானாற் கைது செய்யப்பட்டுச் சிறிது காலத்தின் பின்னர் கோட்டைக்கு வெளியிற் சிரச்சேதம் செய்யப்பட்டனர். 1845 இல் அவர்களைத் தேடிச் சென்ற யோசேப்பு வுல்பு என்பவர் ஒருவாறு அத்தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்.[18] கடைசியாக புகாரா அமீரகம் உருசியப் பேரரசின் கீழ்ப்பட்ட நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டிலும் கூட, நடு ஆசியப் பகுதியின் மிக முக்கியமான சமய, பண்பாட்டுக் கூடலாக புகாரா விளங்கியது. 1834 இற் பிரெஞ்சுகீழைநாட்டியலாளர் ழான் யக்குயசு பியேர் டெசுமைசன்சு என்பவர் ஒரு முஸ்லிம் வணிகர் போன்று நாடகமாடி அங்குச் சென்றார்.[19]

புகாராவின் கடைசி அமீர் முகம்மது ஆலிம் கான் (1880–1944) ஆவார். கசுவீன் ஊடறுப்புத் தண்டவாளம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்டது. புகாராவுக்கு மிக அண்மித்த தொடருந்து நிலையம் அங்கிருந்து பனிரெண்டு மைல் தொலைவிலுள்ள காகன் எனுமிடத்தில் இருந்த போதிலும், அமீரின் சொந்தத் தேவைக்கென ஒரு தனியான தண்டவாளம் புகாராவை அடையும் வண்ணம் காணப்பட்டது.

உருசியப் புரட்சியும் அதன் பின்னரும்[தொகு]

1920 முதல் 1925 வரை புகாரா மக்கள் சோவியத் குடியரசு காணப்பட்டது. 1925 இல் அது உசுபெக் சோவியத் சமவுடைமைக் குடியரசுடன் இணைக்கப்பட்டது. மொஸ்கோ நகரில் உள்ள பிரித்தானியத் தூதரகத்திற் கடமையாற்றிய இளம் இராசதந்திரி பிட்சுரோயி மக்லியன் என்பார் 1938 ஆம் ஆண்டு புகாரா நகருக்கு அடிக்கடி பயணித்ததுடன், புகாராவின் புகழ் மிக்க இடங்களைப் பார்வையிடுவதிலும் இந்நகரின் பூங்காக்களிற் படுத்துறங்குவதிலும் இன்பம் கண்டார். அவர் புகாராவைச் சிறந்த கட்டிடக் கலையைக் கொண்ட புனிதமிக்க நகரம் என்றே குறிப்பிடுகிறார்.[18]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] The prehistory of the Silk Road by Elena Efimovna Kuzʹmina and Victor H. Mair. University of Pennsylvania Press, 2007
  2. Paul Bernard (2009). "EUCRATIDES,name of two Greco-Bactrian kings". Encyclopaedia Iranica. பார்க்கப்பட்ட நாள் September 22, 2009.
  3. Frank L. Holt (May/June 1994). "A History in Silver and Gold". Aramco Services Company. பார்க்கப்பட்ட நாள் September 22, 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. Otto Mørkholm, Philip Grierson, Ulla Westermark. Early Hellenistic coinage: from the accession of Alexander to the Peace of Apamea (336-188 B.C.) (1991 ). Cambridge University Press. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-39504-6.  - Total pages: 273
  5. C.Michael Hogan, Silk Road, North China, Megalithic Portal, ed. Andy Burnham
  6. Mark Dickens (2001). "Nestorian Christianity in Central Asia" (PDF). Oxus Communications. Archived from the original (PDF) on ஏப்ரல் 15, 2007. பார்க்கப்பட்ட நாள் September 23, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Josef W. Meri, Medieval Islamic Civilization: An Encyclopedia, 2006, Taylor & Francis ISBN 0-415-96691-4
  8. The History of Bukhara by Narshaki, Pg 25.
  9. The history of Bukhara by Abū Bakr Muḥammad ibn Jaʻfar Narshakhī, Richard Nelson Frye Page 67
  10. Textual sources for the study of Zoroastrianism
  11. The History of Bukhara by Narshaki (Tras. Richard Nelson Fyre), Commentary, Pg 137
  12. 12.0 12.1 12.2 Elton L. Daniel, The History of Iran, Greenwood Press (2000) p. 74, ISBN 0-313-30731-8. View p. 74 on Google Books.
  13. G. Le Strange: The Lands; pp. 461-2.
  14. ( )Raphael Israeli (2002). Islam in China: religion, ethnicity, culture, and politics. Lexington Books. பக். 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7391-0375-X. http://books.google.com/books?id=KoiD_yafPT8C&pg=PA284&dq=nasr+al+din+yunnan&hl=en&sa=X&ei=IH77To_CMqT10gHOv_y6Ag&ved=0CEoQ6AEwBA#v=onepage&q=the%20song%20emperor%20shen%20tsung%20shenzong%20invited%20a%20group%20of%205%2C300%20arabs%20under%20leadership%20of%20amir%20sayyid%20so%20fei%20er%20bukhara&f=false. பார்த்த நாள்: December 20 2011. "During the Sung (Song) period (Northern Sung, 960-1127, Southern Sung, 1127-1279) we again hear in the Chinese annals of Muslim mercenaries. In 1070, the Song emperor, Shen-tsung (Shenzong), invited a group of 5,300 young Arabs, under the leadership of Amir Sayyid So-fei-er (this name being mentioned in the Chinese source) of Bukhara, to settle in China. This group had helped the emperor in his war with the newly established Liao Empire (Khitan) in northeastern China. Shen-zong gave the prince an honrary title, and his men were encouraged to settle in the war-devasted areas in northeastern China between Kaifeng, the capital of the Sung, and Yenching (Yanjing) (today's Peking or Beijing) in order to create a buffer zone between the weaker Chinese and the aggresive Liao. In 1080, another group of more than 10,000 Arab men and women on horseback are said to have arrived in China to join So-fei-er. These people settled in all the provinces of the north and northeast, mainly in Shan-tung (Shandong), Ho-nan (Hunan), An-hui (Anhui), Hu-pei (Hubei), Shan-hsi (Shanxi), and Shen-hsi (Shaanxi). . .So-fei-er was not only the leader of the Muslims in his province, but he acquired the reputation also of being the founder and "father" of the Muslim community in China. Sayyid So-fei-er discovered that Arabia and Islam were" 
  15. Israeli 2002, ப. 283; Tashi or Dashi is the Chinese rendering of Tazi-the name the Persians used for the Arabs
  16. ( )Raphael Israeli (2002). Islam in China: religion, ethnicity, culture, and politics. Lexington Books. பக். 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7391-0375-X. http://books.google.com/books?id=KoiD_yafPT8C&pg=PA284&dq=nasr+al+din+yunnan&hl=en&sa=X&ei=IH77To_CMqT10gHOv_y6Ag&ved=0CEoQ6AEwBA#v=onepage&q=misnamed%20by%20tang%20and%20song%20chinese%20as%20dashi%20guo%20%20dashi%20fa%20the%20religion%20or%20law%20of%20islam&f=false. பார்த்த நாள்: December 20 2011. "misnamed by the Tang and Song Chinese as Ta-shi kuo (Dashi guo) ("the land of the Arabs") or as Ta-shi fa (Dashi fa) ("the religion, or law, of Islam"). This was derived from the ancient Chinese name for Arabia, Ta-shi (Dashi), which remained unchanged even after the great developments in Islamic history since that time. He then introduced Hui Hui Jiao (the Religion of Double Return, which meant to submit and return to Allah), to substitute for Dashi fa, and then replaed Dashi Guo with Hui Hui Guo (the Islamic state). This in Chinese Hui Hui Jiao was unversally accepted and adopted for Islam by the Chinese, Khiran, Mongols, and Turks of the Chinese border lands before the end of the eleventh century." 
  17. Soucek, Svat, A History of Inner Asia (2000), p. 180.
  18. 18.0 18.1 Eastern Approaches, Fitzroy Maclean, ch 6 "Bokhara the Noble" 1949
  19. Encyclopeida Iranica
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாரா_வரலாறு&oldid=3617866" இலிருந்து மீள்விக்கப்பட்டது