பீட்டர் செல்லர்சு
பீட்டர் செல்லர்சு | |
---|---|
![]() செல்லர்சு (1973 இல்) | |
பிறப்பு | சவுத்சீ, போர்ட்சுமவுத், இங்கிலாந்து | 8 செப்டம்பர் 1925
இறப்பு | 24 சூலை 1980 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 54)
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1925–1980 |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 3, நடிகர்கள் மைக்கேல் செல்லர்சு, விக்டோரியா உட்பட |
பீட்டர் செல்லர்சு ( Peter Sellers, பிறப்பு: ரிச்சர்டு என்றி செல்லர்சு; 8 செப்டம்பர் 1925 – 24 சூலை 1980) ஆங்கிலேய நடிகரும் நகைச்சுவையாளரும் ஆவார். இவர் துவக்கத்தில் பிபிசி வானொலியின் தி கூன் ஷோ என்ற நகைச்சுவை தொடர்நாடகத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். தொடர்ந்து பல வெற்றி பெற்ற நகைச்சுவைப் பாடல்களில் இடம் பெற்றிருந்தார். இன்ஸ்பெக்டர் குளோசோவாக தி பிங்க் பாந்தர் திரைப்படத்தொடரில் நடித்து உலகளவில் பிரபலமானார்.
சவுத்சீயில் பிறந்த செல்லர்சு தனது நாடக அறிமுகத்தை பிறந்த இரண்டாவது வாரத்திலேயே சவுத்சீயின் கிங்சு தியேட்டரில் துவங்கினார். தனது பெற்றோர்களுடன் பல இடங்களுக்கு சென்று அவர்களது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.பின்னர் பேரிகையாளராகவும் என்டர்டெய்ன்மென்ட் நேசனல் சர்வீசு அசோசியேசனில் உறுப்பினராகவும் இங்கிலாந்து முழுமையும் சுற்றி வந்தார். போர்க்கால கேங் ஷோவின் போது தமது பலகுரல் திறனை மெருகேற்றிக் கொண்டார். போருக்குப் பின்னர் வானொலியில் முதன்முறையாக ஷோடைம்என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பல வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.
செல்லர்சு தமது திரைப்பட வாழ்வை 1950களில் தொடங்கினார். பெரும்பாலும் அதிகாரத்திலிருந்த இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை நக்கல் செய்யும் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருந்தாலும் பிற வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றார். ஐயம் ஆல்ரைட்டு ஜாக் (1959), இசுடான்லி குப்ரிக்கின் லோலிட்டா (1962), டாக்.இசுட்ரேஞ்சுலவ் (1964), வாட்டிசு நியூ புசிகேட்? (1965), கேசினோ இராயல் (1967), தி பார்ட்டி (1968), பியிங் தேர் (1979) மற்றும் ஐந்து பங்குகளாக வெளியான பிங்க் பாந்தர் திரைத்தொடர் (1963–1978) இவரது கலைத்திறனை பறைசாற்றுகின்றன.
டாக்.இசுட்ரேஞ்சுலவ், பியிங் தேர் திரைப்படங்களுக்காக அகாதமி விருதுக்கு செல்லர்சு மூன்று முறையும், சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுக்கு இருமுறையும், தி ரன்னிங் ஜம்ப்பிங் & இசுடான்டிங் இசுடில் திரைப்படத்திற்காக சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு ஒரு முறையும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐயாம் ஆல் ரைட் ஜாக் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிரித்தானிய அகாடமி திரைப்பட விருது பெற்றுள்ளார். டர்னர் கிளாசிக் மூவீசு செல்லர்சு "இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கான மிகச் சிறப்பான நகைச்சுவை நடிகராக" கருதுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Peter Sellers". Turner Classic Movies. Turner Broadcasting System. Archived from the original on 24 October 2012. Retrieved 14 August 2012.