பீடியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்த்தினனின் சிற்ப வேலைகளை பீடியசு தனது நண்பர்களுக்குக் காட்டுகின்றார். (1868) சர். லாரன்சு அல்மா-தடேமா என்பவரால் வரையப்பட்டது.

பீடியசு (Phidias) (/ˈfɪdiəs/; பண்டைக் கிரேக்கம்Φειδίας, Pheidias; அண். கிமு 480 – 430) ஒரு கிரேக்கச் சிற்பியும், ஓவியரும், கட்டிடக்கலைஞரும் ஆவார். ஒலிம்பியாவில் உள்ள அவரது சேயுசு சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று. அத்துடன், ஆதீனிய அக்குரோபோலிசில் உள்ள ஆதெனா கடவுளின் சிலையும், இதற்கும் ஆதென்சு அக்குரோபோலிசின் மிகப் பெரிய வாயிலான புரொப்பிலாயாவுக்கும்[1] இடையில் உள்ள ஆதனா புரோமக்கோசின் மிகப் பெரிய வெண்கலச் சிலையும் பீடியசினால் வடிவமைக்கப்பட்டவை. பீடியசு ஆதென்சைச் சேர்ந்த சார்மிடீசின் மகன். ஏகியசு, அகேலாடசு என்போரே பீடியசின் ஆசிரியர்கள் என நம்பப்பட்டது.[2]

புளூட்டார்க், பீடியசுக்கும், கிரேக்க அரசியல் தலைவர் பெரிக்கிளீசுக்கும் இடையிலான நட்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆதெனா கடவுளுக்கான சிலை செய்வதற்காக வழங்கப்பட்ட பொன்னைத் திருடியதாகவும், கடவுளுக்கு மதிப்பளிக்காத வகையில் தன்னுடையதும், பெரிக்கிளீசினதும் உருவங்களை ஆதனாவின் கேடயத்தில் பொறித்ததாகவும் பீடியசு குற்றஞ்சாட்டப்பட்டார். இதைச் சாதகமாகக் கொண்டு பீடியசு மூலம் பெரிக்கிளீசைக் கொல்வதற்கு, அவருடைய எதிரிகள் முயன்றதாக புளூட்டார்க் எழுதியுள்ளார். மேற்படி குறிப்பின் வரலாற்றுப் பெறுமானம் சர்ச்சைக்கு உரியது.

செந்நெறிக்கால கிரேக்கச் சிற்ப வடிவமைப்புக்குத் தூண்டுகோலாக இருந்தவர் என்னும் பெருமைக்கு உரியவராகப் பீடியசைக் கருதும் வழக்கம் உள்ளது. தற்காலத்தில் பெரும்பாலான விமர்சகர்களும், வரலாற்றாளர்களும் எல்லாப் பண்டைக் கிரேக்கச் சிற்பிகளுள்ளும் பெருமை மிக்க ஒருவராகப் பீடியசைக் கருதுகின்றனர்.[3][4]

ஆக்கங்கள்[தொகு]

பீடியசினது என்று தெளிவாகச் சொல்லக்கூடிய மூல ஆக்கங்கள் எதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை. பல்வேறு அலவிலான நம்பகத்தன்மை கொண்ட உரோமர்காலப் பிரதிகள் ஏராளமாகக் கிடைக்கப்பெறுகின்றன. இது வழமைக்கு மாறானது அல்ல. ஏறத்தாழ எல்லாச் செந்நெறிக் காலக் கிரேக்க ஓவியங்களும் சிற்பங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. உரோமர் காலப் பிரதிகள் அல்லது அவை குறித்த குறிப்புக்கள் மட்டுமே கிடைக்கின்றன. பண்டைய உரோமர்கள் கிரேக்கக் கலைகளைப் பிரதி செய்தனர் அல்லது அவற்றை மேம்படுத்திப் பயன்படுத்தினர்.

பழங்காலத்தில் வெண்கலச் சிலைகளுக்காகவும்; பொன், தந்தம் முதலியன இழைத்துச் செய்யப்பட்ட ஆக்கங்களுக்காகவும் பீடியசு புகழ் பெற்றிருந்தார். அழகு எது? (Hippias Major) என்னும் பிளேட்டோவின் உரையில், பீடியசின் காலத்தில் பெருமளவு சிலைகள் சலவைக் கல்லில் செதுக்கப்பட்டிருந்தபோதும், மிக அரிதாகவே சலவைக்கற் சிற்பங்களைப் பீடியசு உருவாக்கினார் என்கிறார். அக்குரோப்போலிசில் கிரேக்க அரசியல் தலைவரான பெரிப்பிளீசு உத்தரவிட்ட பாரிய வேலைகள் பீடியசின் கண்காணிப்பிலேயே இடம்பெற்றதாக புளூட்டார்க் எழுதியுள்ளார்.[5] பண்டைக்கால விமர்சகர்கள் பீடியசின் திறமைகள் குறித்து உயர்வான கருத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாகப் பிற்காலத்துப் "பரிதாபக்" குழு எனச் சொல்லப்பட்டோரின் ஆக்கங்களோடு ஒப்பிடும்போது பீடியசின் ஆக்கங்கள் நெறிமுறை சார்ந்தவையாகவும், நிரந்தரமான ஒழுக்க மட்டத்தைப் பேணியவையாகவும் இருந்ததாக அவர்கள் பீடியசைப் புகழ்ந்தனர்.

பீடியசினது ஆக்கங்கள் பற்றிய விவரங்களுக்குப் புறம்பாக அவரது வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. மில்ட்டியாடெசு என்பவரின் உருவம் நடுவில் அமையப்பெற்ற தேசிய வீரர் குழுவொன்றின் சிற்பமே பீடியசின் முதல் வேலையாகும். கிரேக்க - பாரசீகப் போர்களின்போது இடம்பெற்ற மரத்தான் சண்டையில் கிரேக்கர் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிமு 447 இல், ஆதெனிய அரசியல் தலைவர் பெரிப்பிளீசு பல்வேறு சிலைகளை உருவாக்கும்படி பீடியசைப் பணித்தார். பார்த்தினனின் மேற்பகுதியில் அமைக்கப்படவிருந்த சிற்பங்களுக்கான சலவைக்கற் குற்றிகள் கிமு 434 வரை ஆதென்சுக்கு வந்து சேரவில்லை என்பதைக் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது. இது பெரிப்பிளீசின் இறப்புக்குப் பின்னரே இடம்பெற்றிருக்கக்கூடும். இதனால் பார்த்தினனின் பெரும்பாலான சிற்ப அலங்காரங்கள் பீடியசின் தொழிற் கூடத்தில் உருவாகியிருக்கக்கூடும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Birte Lundgreen, "A Methodological Enquiry: The Great Bronze Athena by Phidias" The Journal of Hellenic Studies
  2. "Ageladas | Greek sculptor". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
  3. "Phidias". Archived from the original on 2008-10-16. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  4. Bertrand Russell, The History of Western Philosophy, Chapter 10, Protagoras, page 95
  5. Spivey, Nigel (1996). Understanding Greek sculpture : ancient meanings, modern readings. New York: Thames and Hudson. பக். 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0500278768. இணையக் கணினி நூலக மையம்:36645523. https://www.worldcat.org/oclc/36645523. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடியசு&oldid=3563863" இலிருந்து மீள்விக்கப்பட்டது