பி. ராமமோகன ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம்மோகன ராவ் (P. Rama Mohana Rao பிறப்பு 1957 செப்டம்பர் 15) என்பவர் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்தவராவார். இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், பிரகாசம் மாவட்டத்தில் பிறந்தவர்.[1]

படிப்பும் வேலையும்[தொகு]

ராமமோகன ராவ் வணிகப்பாடத்தில் முதுநிலைபட்டம் பெற்று, இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொருளாதாரப் படிப்பை முடித்து, அதன்பிறகு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவராவார். 1985 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். 1987 முதல் 1992 வரை உதவி ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியராக பல்வேறு மாவட்டங்களில் பதவியில் இருந்தார். 1992 முதல் 1994 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், 1994 முதல் 1996 வரை மாவட்ட ஆட்சியராகவும், திமுக ஆட்சிகாலத்தில் குடிநீர் வழங்கல் துறை இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர், காகித ஆலை நிறுவனத் தலைவர், நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர், வீட்டுவசதித்துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், சமூக நலத்துறைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருந்தார். 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் வேளாண்துறை செயலாளராக இருந்தார். 2011 ஆண்டு அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுபோது முதல்வரின் செயலாளர் நிலை 2 ஆக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். 2014 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்து முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்றபோது அவருக்கும் செயலாளராக இருந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று முதல்வராக ஜெயல்லிதா பதவியேற்றபோது அப்போதும் முதல்வரின் செயலாளராக தொடர்ந்தார். அதன்பிறகு ராமமோகன ராவ் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இந்நிலையில் முதல்வரின் செயலாளர் நிலை 1 இல் இருந்த ஷீலா பிரியா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு ராமமோகன ராவ் வந்தார். இதன்பிறகு தலைமைச் செயலாளராக இருந்த கு. ஞானதேசிகன் மாற்றப்பட்டு அந்த பதவிக்கு ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் 2016 திசம்பர் 21 அன்று ராமமோகன ராவ் வீட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையிட்டனர்.[2] இதையடுத்து ராமமோகனராவ் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டா்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "உதவி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை". தி இந்து. திசம்பர் 2016. doi:22. 
  2. ஆர்.சிவா (22 திசம்பர் 2016). "தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை". செய்தி. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ராமமோகன_ராவ்&oldid=3457828" இலிருந்து மீள்விக்கப்பட்டது