பி. சி. சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி.சி. சேகர்
B.C.Segar
公元前新鲜的
SekharBC2.jpg
மலேசிய ரப்பர் துறையின் தந்தை
பிறப்பு17 நவம்பர் 1929
சுங்கை பூலோ, சிலாங்கூர்,
 மலேசியா
இறப்புசெப்டம்பர் 6, 2006(2006-09-06) (அகவை 76)
காளியப்பா மருத்துவமனை சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
கல்விபுதுடில்லி பல்கலைக்கழகம்
மிச்சிகன் பல்கலைக்கழகம்
சிங்கப்பூர் பல்கலைக்கழகம்
பணிஅறிவியலாளர்
மலேசிய ரப்பர்
ஆய்வுக் கழகம்
பெற்றோர்அச்சுத சேகர் நாயர்
சீதாலட்சுமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
சுகுமாரி நாயர்
(பள்ளி ஆசிரியை)
பிள்ளைகள்4
ஜெயக்குமார் (54)
கோபிநாத் (51)
சுஜாதா (49)
வினோத் (44)

டான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர் (B.C.Sekhar, நவம்பர் 17, 1929 - செப்டம்பர் 6, 2006) மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வியூகத்திற்கு மாற்றியவர்.[1][2] நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை என்று போற்றப்படுகிறவர். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர், முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர்.[3]

மலேசியாவின் ரப்பர், செம்பனைத் தொழில்களின் தந்தையாகப் புகழப்படும் பி.சி.சேகர், இயற்கை ரப்பர் தொழில்துறையில் பெரிய பெரிய புரட்சிகளைச் செய்தார். அந்தத் துறைகளையே ஒட்டு மொத்தமாக நவீனப் படுத்தினார். சிலாங்கூர், சுங்கை பூலோவில் இருக்கும் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை (Rubber Research Institute of Malaysia) [4] உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர். இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதிய தர ரப்பர் முறைமையை அமைத்துக் கொடுத்தார்.[5]

பின்புலம்[தொகு]

மலேசியாவின் ரப்பர் தொழில்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு இரு முக்கிய நிகழ்ச்சிகள் அடையாளம் சொல்லப் படுகின்றன. ஒன்று மலாயாவில் ரப்பர் அறிமுகம் செய்யப்பட்டது இரண்டாவது பி. சி. சேகரின் பிறப்பு.[6]

முதல் நிகழ்வு 1873-இல் நடந்தது. அமேசான் காட்டில் இருந்து 12 ரப்பர் விதைகள் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள கியூ அரச தாவரவியல் தோட்டத்தில் நடப்பட்டன. அங்கிருந்து அவை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பயிர் செய்யப்பட்டன. எல்லா கன்றுகளுமே உயிர் பெறவில்லை, மடிந்து விட்டன. இரண்டு ஆண்டுகள் கழித்து சர் ஹென்றி விக்ஹாம்[7] என்பவர் 70,000 ரப்பர் விதைகளை பிரேசிலிலிருந்து கள்ளக் கடத்தல் செய்தார்.[8] அந்த விதைகளில் 2,800 விதைகள் துளிர்விட்டு கன்றுகள் ஆகின.

இவற்றில் 2000 கன்றுகள் இலங்கைக்கு அனுப்பப் பட்டன. அவற்றில் 22 கன்றுகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து ‘ரப்பர் ரிட்லி’ எனும் எச்.என்.ரிட்லி ஒன்பது ரப்பர்க் கன்றுகளை மட்டும் 1877-இல் மலாயாவுக்கு கொண்டு வந்தார். அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. அவற்றில் எட்டு கன்றுகள் இறந்துவிட்டன. ஒரே ஒரு கன்றுதான் பிழைத்துக் கொண்டது. அந்தக் கன்று பெரிதாகி மரம் ஆனபிறகு அதன் விதைகளின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின. 1898-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது.

அதன் பின்னர் உலகத்திலேயே அதிகமான ரப்பரை உற்பத்தி செய்த நாடாக மலாயா மாறியது.[9] (இவ்வாறு மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் ஒரு கன்று வளர்ந்து இன்னும் கோலாகங்சாரில் காட்சிப் பொருளாக நின்று கொண்டு இருக்கிறது. கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன் அந்த மரம் இருக்கிறது. அதன் வயது 135.)[10]

தென் அமெரிக்காவில் ரப்பரைப் பயிர் செய்து பார்த்தார்கள். சரியாக வரவில்லை. கன்றுகளுக்குக் கருகல் நோய் வந்து அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. சிங்கப்பூரில் நடப்பட்ட 13 கன்றுகளில் இன்னும் இரு மரங்கள் மட்டுமே உள்ளன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது.[11] அவற்றுக்கும் வயது 135.

வாழ்க்கை வரலாறு[தொகு]

பிறப்பு[தொகு]

மலேசிய ரப்பர் வரலாற்றை மாற்றிய இரண்டாவது நிகழ்வு பாலசந்திர சகிங்கல் சேகர் என்ற முழுப்பெயர் கொண்ட பி. சி. சேகரின் பிறப்பு. 1929 நவம்பர் மாதம் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தது. குடும்பத்தில் மூன்றாவது குழன்தை. சேகர் என்று பெற்றோர்கள் பெயர் வைத்தனர். தகப்பனாரின் பெயர் அச்சுத சேகர் நாயர். தாயாரின் பெயர் சீதாலட்சுமி அம்மாள். டான்ஸ்ரீ பி.சி.சேகர், சுங்கை பூலோ உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். அருகாமையில் 1925-இல் பிரித்தானியர்கள் உருவாக்கிய மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகமும் இருந்தது. அந்தத் தோட்டம் இப்போது இல்லை. அங்கே ’மலாயன் கிலாஸ்’ எனும் தொழில்சாலை இருந்தது.

பள்ளி வாழ்க்கை[தொகு]

பி. சி. சேகர், தன்னுடைய தொடக்க, உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளைச் சுங்கை பூலோ, கோலாலம்பூர் நகரங்களில் மேற்கொண்டார். பட்டப் படிப்பிற்காகப் புதுடில்லி சென்றார். டில்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்தார். பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அடுத்து சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிய போது சிறந்த சேவைகளை வழங்கினார்.

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகம்[தொகு]

ஏறக்குறைய 50 ஆண்டுகள் இயற்கை ரப்பர் தொழில்துறையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்ட பி. சி. சேகர், படிப்படியாக முன்னேறி 1966 ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ஆனார். அவர்தான் அக்கழகத்தின் முதல் மலேசியர், முதல் இந்தியர், முதல் ஆசியர். அதுவரை அந்தத் தலைமைப் பதவியைப் பிரித்தானியர்களே வைத்து வந்தனர். வேறு யாருக்கும் தகுதி இல்லை என்று மற்ற இனத்தவரைத் தவிர்த்தனர்.

பி. சி. சேகரின் பங்களிப்புகளில் மிக முக்கியமானது எஸ்.எம்.ஆர் எனும் மலேசியத் தர ரப்பர் திட்டத்தை (Standard Malaysian Rubber (SMR) Scheme) உருவாக்கியது தான்[12]. அந்தத் திட்டத்தின் மூலம் மலேசிய ரப்பர், உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் முதல் தரமாகக் கருதப் பட்டது. அந்தத் திட்டம் ரப்பர் தொழில்துறையின் மூலப்பொருள் மேம்பாட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

இயற்கை ரப்பர் மூலமாக ரப்பர் குழாய்த் தயாரிப்பு, உருளிப்பட்டைத் (tyre) தயாரிப்பு, கையுறைத் தயாரிப்பு, நிலநடுக்கப் பேரழிவுத் தடுப்புச் சாதனங்கள் தயாரிப்பு போன்ற தயாரிப்புகளில் பல ஆழமான ஆய்வுகளைச் செய்து அவற்றில் பல புதுமைகளையும் கண்டார். இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கைதான் என்று சொன்ன பி.சி.சேகர் ’இயற்கை ரப்பர் செயற்கை ரப்பரை மெல்லச் சாகடிக்கும்’ எனும் தத்துவத்திற்கு புதிய வடிவு தந்தார். ரப்பரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்றால் ’சுங்கை பூலோ போ, சேகரைப் பார்’ என்று சொல்லும் அளவுக்கு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் நிலை உயர்ந்தது. டான்ஸ்ரீ பி.சி.சேகர் அந்தக் கழகத்தின் தலைவராக இருந்த போது. உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கழகத்திற்கு வந்து பல அற்புதமான ஆராய்ச்சிகள் செய்தனர். அதற்கு வழிவகை செய்யும் விதமாக அதன் ஆய்வுத் தரம், ஆய்வுத் திறன்கள், ஆய்வுப் பண்புகள் ஆகியவற்றை உயர்த்தியிருந்தார்.

ரப்பர் பால் உற்பத்தியும் ரப்பர் விலை ஒழுங்கும்[தொகு]

சில சமயங்களில் ரப்பர் மரங்களுக்குச் சாயம் அடிப்பார்கள். பச்சை, சிகப்பு, மஞ்சள் நிறச் சாயங்களாக இருக்கும். அப்படி சாயம் அடிப்பதன் மூலம் ரப்பர் மரங்களின் பால் உற்பத்தியை மூன்று மடங்காகப் பெருக்கிக் காட்ட முடியும் என்பதைக் கண்டுபிடித்தர் பி. சி. சேகர்.

அனைத்துலக ரப்பர் விலையை ஒருமுகப் படுத்துவதற்கு தீவிரமான செயல்பாடுகளில் இறங்கி வெற்றி கண்டார். அதனால், மலேசியா, பிரேசில், தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை போன்ற பல ரப்பர் உற்பத்தி நாடுகள் பலன் அடைந்தன. அதன்வழி பல இலட்சம் சிறு தோட்டக்காரர்களும், மலேசியக் கிராமப்புற ஏழைகளும் நன்மை அடைந்தனர்.

தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம்[தொகு]

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கும் திட்டத்தை 1983 ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தார். தோட்டத் தொழிலாளர்கள் மூலமாகக் கோடிக்கணக்கான பணத்தைச் சுரண்டிக் கொண்டிருந்த தோட்ட முதலாளிமார்களுக்கு அது பலத்த அடியாக அமைந்தது.

இப்போது மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கிறது. ஓய்வூதியம் கிடைக்கிறது. ஓய்வூதியப் பயன்களும் (gratuity benefits) கிடைக்கின்றன.[13]

குடும்ப வாழ்க்கை[தொகு]

டான்ஸ்ரீ பி.சி.சேகருக்கு சுகுமாரி எனும் மனைவியும் ஜெயக்குமார், கோபிநாத்,[14] சுஜாதா, வினோத் எனும் நான்கு பிள்ளைகளும், எட்டு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காளியப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்.[15] இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார் அப்போது அவருக்கு வயது 77. அவரது உடல் கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டு, செராஸ் மின்சுடலையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. தொழிலாளிகள், அறிவியலாளர்கள், வர்த்தகர்கள், அரசுத் தலைவர்களென மலேசிய சமூகத்தின் அனைது தரப்பினரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்.[16]

அவரைப் பற்றி ஓர் ஆய்வு நூல் வெளியிடப்பட்டுள்ளது[17]. பி. சி .சேகரின் இரண்டாவது மகன் கோபிநாத் சேகர், ஓரு தொழில்நுட்ப புத்தாக ஆய்வு நிறுவனத்தை (Sekhar Research Innovations; SRI) நடத்தி வருகிறார்[18]. அவருடைய இன்னொரு மகன் வினோத் சேகர் மீது பண மோசடிகளின் காரணமாக, கோலாலம்பூர் மலேசிய உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன[19].

சாதனைகள்[தொகு]

தொழிலாளர் நலன்[தொகு]

பி. சி. சேகர் பதவியில் இருந்த காலத்தில் ரப்பர் மரங்கள் மற்று ரப்பர் தொழிலாளிகள் இருவரது நலனையும் பார்த்துக் கொண்டார். மலேசிய அதிகாரிகளிடம் அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம்: “மரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். மரம் இல்லை என்றால் மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனும் இல்லை’.

2005 ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை மேம்படுத்துவதற்கு மாபெரும் திட்டம் வகுக்கப்பட்ட போது எந்தப் பதவியிலும் இல்லை. மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்திலும், கழக ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ஓர் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று மலேசிய அரசிடம் கேட்டுக் கொண்டார். அந்த நிலத்தை அவர்களின் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர் அப்போது பதவியில் இல்லை எனினும், அவரது வேண்டுகோளை மதித்து அவருடைய கோரிக்கையைத் தட்டாமல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் பல கோடி பணத்தை ஒதுக்கி வைத்தது. ஒய்வு பெற்ற ஒருவரின் கோரிக்கையை அரசு ஏற்றச் செயல் பி. சி. சேகரின் மதிப்பினையும் செல்வாக்கை உணர்த்துகிறது.

அதே சமயத்தில் அனைத்துலக ரப்பரின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்யக் கூடிய செல்வாக்கும் அவரிடம் இருந்தது.

பிரித்தானிய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆய்வுக் கழகம்[தொகு]

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் உள்ள பிரிகண்டான்பரி எனும் இடத்தில் இருந்த பிரித்தானிய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆய்வுக் கழகததை (British Rubber Producers' Research Association) ஒரு விளையாட்டரங்கமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அக்கழகத்தின் புதிய பெயர் ’துன் ரசாக் ஆய்வுக் கழகம்’ ஆகும்.[20] அது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியது. முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் தொடர்பு படுத்தப் பட்டார். அந்தத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. அத்தகைய மாற்றத்திற்கு முதன்முதலில் முழு எதிர்ப்பு தெரிவித்தவர் பி. சி. சேகர்.[21]

விருதுகள்[தொகு]

பி. சி. சேகர், மலேசிய நாட்டிற்கு செய்துள்ள அரிய சேவைகளுக்காகப் பேரரசர் டான்ஸ்ரீ விருதை வழங்கிக் கௌரவித்துள்ளார். இந்த விருது இந்தியாவின் பத்ம விபூஷண் விருதிற்குச் சமமானது. இவர் 1973-இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்சசே விருதையும்[22] மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 20 கண்டிபிடிப்புகளின் வழி புனைவுரிமைகளையும் பெற்று இருக்கிறார்.

 • ரப்பர் தொழில்துறை கழக ஆய்வாளர் - Fellow of the Institution of the Rubber Industry (1964)
 • அரச வேதியியல கழக ஆய்வாளர் - Fellow of the Royal Institute of Chemistry (1964)
 • மலேசிய வேதியியல் கழகத் தலைவர் - President of the Malaysian Institute of Chemistry
 • மலேசிய அறிவியல் கழகத் தலைவர் - President of the Malaysian Scientific Association. In 1969,
 • கால்வியின் விருது பெற்ற முதல் மலேசியர், முதல் ஆசியர் - First Malaysian and Asian—Colwyn Medal (1969)
 • ஜொகான் செத்தியா மக்கோத்தா விருது - Johan Setia Mahkota from His Majesty, the Supreme Head of Malaysia.
 • சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் - Honorary Doctor of Science - University of Singapore in 1970

மேற்கோள்கள்[தொகு]

 1. Today the natural rubber industry is thriving because of BC’s vision, mission and persistence.
 2. "He made many important scientific and technological contributions to the industry. The first one which received attention was the Constant Viscosity (CV) Rubber.". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.
 3. "Sekhar was chosen to become the first Malaysian and Asian director of the Rubber Research Institute in 1966". மூல முகவரியிலிருந்து 2012-02-12 அன்று பரணிடப்பட்டது.
 4. The Malaysian Rubber Board (MRB) is the custodian of the rubber industry in Malaysia. Established on 1 January 1998.
 5. "From the time he joined the Rubber Research Institute of Malaya (PRIM) until the time of his passing, he devoted his life to the advancement of research and development in natural rubber.". மூல முகவரியிலிருந்து 2012-01-05 அன்று பரணிடப்பட்டது.
 6. It is said that two crucial events set the course for Malaysia’s rubber industry. One took place in 1877, when H.N. ‘Rubber Ridley’ brought the Hevea Brasiliensis plant from the Botanical Gardens in Singapore to then Malaya. The second event occurred in 1929 in Ulu Bulu estate in Sungai Buloh, when a baby destined to change the course of Malaysia’s rubber industry was born.
 7. "Sir Henry Wickham is the man history credits with bringing rubber seeds from Amazonia to the Botanical Gardens at Kew in 1876.". மூல முகவரியிலிருந்து 2012-01-03 அன்று பரணிடப்பட்டது.
 8. In 1876, an English planter, Henry Wickham, collected 70,000 seeds and shipped them to England.[தொடர்பிழந்த இணைப்பு]
 9. Malaysia, Thailand and Indonesia - the world's top three natural rubber producers
 10. One of nine seedlings brought to malaya by Ridley is still standing tall in Kuala Kangsar, the royal town of Perak. The tree is located just outside the office of the Department of Lands And Mines (Federal). It was planted there in 1877 and is said to be one of the two oldest rubber trees in the country.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. There are two rubber trees with Heritage Tree status: One is at Japanese Cemetery Park, Chuan Hoe Avenue 89 and another at the Singapore Botanic Gardens, behind the Green Pavilion.[தொடர்பிழந்த இணைப்பு]
 12. "Among the many contributions made by Tan Sri Sekhar in his research endeavours, the Standard Malaysian Rubber(SMR) Scheme.". மூல முகவரியிலிருந்து 2012-01-05 அன்று பரணிடப்பட்டது.
 13. "Today, the plantation workers in RRI enjoy not only monthly wages but also pension rights and gratuity benefits calculated from the initial date of the workers’ date of employment.". மூல முகவரியிலிருந்து 2012-01-05 அன்று பரணிடப்பட்டது.
 14. Mr. Gopinath B. Sekhar has over 27 years of work experience involved in Trading, Rubber and Palm Oil processing.
 15. Malaysia's rubber industry pioneer, Dr B C Sekhar, died of a heart attack at the Kalayappa Hospital in Chennai yesterday.[தொடர்பிழந்த இணைப்பு]
 16. The spectrum of mourners seen at his wake and funeral was a testament to the extensive and deep impact he had on Malaysia and its people. The streets were filled with retired plantations workers, smallholders, scientists as well as leaders of commerce, industry and governments.
 17. B.C. Sekhar: Malaysia’s Man For All Seasons. The BC Biography traces his development from a young graduate who was faced with a number of ‘no vacancy’ responses from prospective employers to his rise to be one of the foremost scientists of his time nationally and internationally.[தொடர்பிழந்த இணைப்பு]
 18. "In 2004, Sekhar Research Innovations (SRI) was founded by local rubber technology legend, the late Tan Sri Dr B.C. Sekhar. When he passed on in 2006, his son, Gopinath B. Sekhar took over the company.". மூல முகவரியிலிருந்து 2014-04-07 அன்று பரணிடப்பட்டது.
 19. "The Director-General of Insolvency has filed an application for a committal order for the imprisonment of prominent businessman Datuk Vinod Balachandra Sekhar for contempt of court.". மூல முகவரியிலிருந்து 2011-01-14 அன்று பரணிடப்பட்டது.
 20. "Tan Sri Sekhar was in the forefront to prevent the Tun Abdul Razak Research Centre (TARRC) in Brickendonbury, England, being turned into a Sports Centre.". மூல முகவரியிலிருந்து 2012-01-05 அன்று பரணிடப்பட்டது.
 21. Public inquiry into RM70 million HPTC folly – object lesson to all Ministers and MPs on do’s and don’ts.
 22. "The 1973 Ramon Magsaysay Award for Government Service". மூல முகவரியிலிருந்து 2012-02-12 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._சேகர்&oldid=3297593" இருந்து மீள்விக்கப்பட்டது