உள்ளடக்கத்துக்குச் செல்

பி. கிருஷ்ணப் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. கிருஷ்ணப் பிள்ளை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1906
வைக்கம், கோட்டயம்
இறப்புஆகத்து 19, 1948
முஹம்மா, ஆலப்புழா
அரசியல் கட்சிகேரளத்தில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவியவர்
துணைவர்தங்கம்மா
வாழிடம்வைக்கம்

பி. கிருஷ்ணப் பிள்ளை ( மலையாளம்: പി. കൃഷ്ണപിള്ള, : 1906, வைக்கம், கோட்டயம் – ஆகத்து 19, 1948 , முஹம்மா, ஆலப்புழா) கேரளத்தின் பொதுவுடமையாளரும் கவிஞரும் ஆவார். கேரளத்தில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவியவர் என்றும் கேரளாவின் முதல் பொதுவுடமையாளர் என்றும் போற்றப்படுகிறார்.[1]

இளமைக் காலம்[தொகு]

கிருஷ்ணப்பிள்ளை வைக்கத்தில் கீழ்-நடுத்தரக் குடும்பமொன்றில் நாராயணன் நாயருக்கும் பார்வதியம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தனது இரு பெற்றோர்களையும் இழந்த கிருஷ்ணப்பிள்ளை ஐந்தாம் நிலையில் (தற்கால பத்தாம் வகுப்பு) பள்ளிக்கல்வியை விட வேண்டியதாயிற்று. 1920இல் தமது இல்லத்திலிருந்து வெளியேறி இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்றார்.

அரசியல்/சமூக இயக்கங்கள்[தொகு]

இரண்டாண்டுகள் கழித்து ஊர் திரும்பியபோது கேரளாவில் சமூகக் குமுறல் நிலவுவதைக் கண்டார். தொடர்ந்து பல மக்கள் இயக்கங்களில் பங்கு பற்றினார். 1924இல் நடந்த வைக்கம் போராட்டத்திலும் 1930இல் கோழிக்கோடு முதல் பையனூர் வரை உப்புச் சத்தியாக்கிரக நடையிலும் பங்கேற்றார். 1931இல் குருவாயூர் கோவில் மணியை அடித்த முதல் நம்பூதிரி பிராமணர் அல்லாதவராக இருந்தார்.

கிருஷ்ணப்பிள்ளை தமது அரசியல் வாழ்வை இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகவும் காந்தியவாதியாகவும் துவக்கினார். மெதுவாக இடதுசார் சிந்தனைகளுக்கு ஆட்பட்டார். 1934இல் காங்கிரசு சோசலிச கட்சி மும்பையில் நிறுவப்பட்டபோது அக்கட்சியின் கேரளச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தமது அரசியற் செயற்பாடுகளை மலபார் பகுதியில் குவியப்படுத்தியிருந்த பிள்ளை 1936இல் கொச்சி, திருவிதாங்கூர் அரசுப்பகுதிகளுக்குச் சென்றார். 1938இல் தற்போது புகழ்பெற்ற ஆலப்புழா தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஒருங்கமைத்தார். பெரும் வெற்றி பெற்ற இப்போராட்டமே 1946இல் புன்னப்பரா-வயலார் போராட்டத்திற்கும் திருவிதாங்கூரில் சி. பி. இராமசாமி ஐயரின் வீழ்ச்சிக்கும் தூண்டலாக அமைந்தது.

கிருஷ்ணப்பிள்ளையின் அயராத உழைப்பால் காங்கிரசு சோசலிச கட்சியின் மலபார் கிளையை இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் கேரளக் கிளையாக மாற்றினார். சனவரி 26, 1940இல் முறையாக கேரளத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி நிறுவப்பட்டது. 1948இல் கொல்கத்தா தீர்மானத்தின்படி இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்த இந்தியப் பொதுவுடமைக் கட்சி முயன்றபோது அதற்கு தடை விதிக்கப்பட்டது; அதனால் கிருஷ்ணப்பிள்ளை உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் தலைமறைவாக இருக்க வேண்டி வந்தது.

இறப்பு[தொகு]

முஹம்மாவில் ஓர் தொழிலாளியின் குடிசையில் ஒளிந்துகொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்தார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கிருஷ்ணப்_பிள்ளை&oldid=3990591" இலிருந்து மீள்விக்கப்பட்டது