பி. எஸ். பி. பொன்னுசாமி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
பி. எஸ். பி. பொன்னுசாமி | |
---|---|
பிறப்பு | பேரையூர், தமிழ்நாடு | 6 சூன் 1908
இறப்பு | 29 சனவரி 1998 வத்திராயிருப்பு, தமிழ்நாடு | (அகவை 89)
பெற்றோர் | பொன்னாயிரம் பிள்ளை முத்தம்மாள் |
பிள்ளைகள் | பொன்.ஞானசேகரன் பொன்.தனசேகரன் |
வத்திராயிருப்பு பி. எஸ். பி. பொன்னுசாமி இந்திய விடுதலைப்போராட்டத்தின் பொழுது அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை ஏற்று, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, பல பங்களிப்புகள் தந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.
பிறப்பு
[தொகு]மதுரை மாவட்டம் பேரையூரில் பி. எஸ். பொன்னாயிரம் பிள்ளை - முத்தம்மாள் தம்பதியின் மகனாக 1908-ம் ஆண்டு ஜூன் 6-ம் நாள் பிறந்தார். இவர் 90 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து மறைந்தது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில். இப்பகுதியில் 'பி.எஸ்.பி' என் இவர் அழைக்கப்பட்டார்.
எதிர்ப்புப் போராட்டம்
[தொகு]இளம் வயதில் அண்ணல் காந்தியடிகளை மதுரையில் சந்தித்ததன் விளைவாக விடுதலைப் போராட்டத்தில் இவர் ஈடுபட்டார். ஆரம்பக் கட்டத்தில் அரவிந்தரைப் போல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயில் கவிழ்ப்புச் சதி, தந்திக் கம்பிகள் அறுப்பு, ஒரே நாள் நள்ளிரவில் 10 கள்ளுக்கடைகளுக்கு தீவைப்பு போன்றவற்றில் இவரும் இவரது நண்பர்களும் ஈடுபட்டதாக போலீசாருக்குத் தெரியவந்தது. உடனிருந்த ஒருவரே காட்டிக்கொடுத்ததுதான் காரணம். இவர்களிடமிருந்து 13 கள்ளத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் மற்றும் ஒரு டைப்ரைட்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து நள்ளிரவு 2 மணி அளவில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் அப்பன்ராஜ் போலீசாருடன் பொன்னுசாமி பிள்ளை வீட்டுக்குச் சென்று அவரை அடித்து ஊரின் மையப்பகுதியான முத்தாலம்மன் திடலுக்கு இழுத்து வந்தார். பொதுமக்கள் முன்னிலையில் தடியால் தாக்கினார். இதில் பொன்னுசாமி பிள்ளை நெற்றியில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் மிதந்தார். விடிந்ததும் அரசு டாக்டர் நயினார் பிள்ளை உதவியால் ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிவகாசி உதவி கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஓராண்டு கடுங்காவல் சிறையும் 15 ரூபாய் அபராதமும் இவருக்கு விதிக்கப்பட்டது.
சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங் கேற்று இருமுறை மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வ.உ.சி.யைப்போல இவரும் செக்கு இழுத்திருக்கிறார். ஒருநாள் சிறைக் கஞ்சியில் புழு இருந்ததைப் பார்த்து சக கைதி களைத் திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். மாவட்ட ஆட்சியரும், நீதிபதியும் நேரில் வந்து விசாரித்து இவரது கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால் சிறை அதிகாரிகள் இவர் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
"நிலை விலங்கு' தண்டனை அளித்தனர். சுவற்றில் உள்ள இரும்பு வளையங்களில் இவரது கைகளைப் பிணைத்து நிற்க வைப்பதுதான் இத்தண்டனை. காலை 9 முதல் 11.30 மணி வரையும் பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையிலும் இவ்வாறு நின்று கொண்டிருக்க வேண்டும். இத்தண்டனை 8 நாள்கள் நீடித் தது. சிறையில் இருந்தபோது இவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் போடப்பட்டன. பின்னர் இவை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. சிறையில் இவருடன் இருந்தவர்களில் "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமனும் ஒருவர். முதல்வர்கள் காமராஜர், பி.எஸ். குமாரசாமிராஜா ஆகியோரின் நெருங்கிய நண்பராகவும் பொன்னுசாமி பிள்ளை விளங்கினார்.
இவரது தியாகத்தைப் பாராட்டி சுதந்திர தின வெள்ளிவிழாவின்போது அன்றைய பிர தமர் இந்திரா காந்தி தாமிரப்பட்டயம் வழங்கி கௌரவித்தார். "வெள்ளையனே வெளியேறு' இயக்கப் பொன்விழாவில் அன் றைய முதல்வர் ஜெயலலிதா சால்வை அணி வித்து கேடயம் வழங்கினார். தியாகிகளுக் கான மத்திய, மாநில அரசு ஓய்வூதியம் இவருக்குக் கிடைத்து வந்தது.
சுதந்திரம் பெற்றபின் வத்திராயிருப்பு பகுதியில் அரசியல் பணியுடன் ஹரிஜன சேவை, கதர் மற்றும் கூட்டுறவு இயக்கத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். பிளவுபடாத ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் செயலராகவும் இருந்துள்ளார். வாழ்வின் பிற்பகுதியில் ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டு கோயில் திருப்பணிகளில் முக்கிய பங்காற்றினார்.
தமது 90-வது வயதில் 1998-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி வத்திராயிருப்பில் அவரது இல்லத்தில் காலமானார். காந்தியவாதியான இவரது உடல் தகனம், காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி நடந்தது. இவரது தியாகம், எளிமை, நேர்மை, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை இப்பகுதி மக்கள் இன்றும் நினைவுகூர்கின்றனர். தியாகி பி.எஸ்.பி. பொன்னுசாமி பிள்ளையின் நூற்றாண்டு நிறைவுநாள் 6-6-2008ம் தேதியில் அனுசரிக்கப்பட்டது.
இவரது மகன் பொன்.ஞானசேகரன், தினமணி செய்தி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மற்றொரு மகன் பொன்.தனசேகரன் தினமணி, ஆனந்த விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் செய்தியாளராக பணியாற்றியவர். தினமலர் இதழில் வெளியான இவரது கட்டுரைக்கு 2008ம் ஆண்டிற்கான சரோஜினி நாயுடு தேசிய விருது கிடைத்தது.