பி. ஆர். பழனிச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. ஆர். பழனிச்சாமி என்பவர் தமிழ்நாட்டில் மதுரையில் வசித்து வரும் ஒரு தொழில் அதிபர் ஆவார். இவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்தில் பிராதுக்காரன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் கிரானைட் எனப்படும் விலை உயர்ந்த கருங்கல் வணிகத்தில் ஈடுபட்டு வருபவர்.

ஒப்பந்தப் பணி[தொகு]

வைகை பிரதான கால்வாய் ஒப்பந்ததாராக இருந்த பி. ஆர். பழனிச்சாமி, தனது கட்டுமானப் பணிகளுக்கான் கற்கள், மற்றும் உடை கற்கள் தேவைக்காக, திருச்சியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்த கல் தோண்டும் நிலத்தை விலைக்குப் பெற்றார். இந்நிலத்தில் தோண்டிய போது கிடைத்த கற்கள் விலை உயர்ந்த கருங்கற்களாக (கிரானைட்) இருந்தன. இதனால் இவர் விலை உயர்ந்த கற்களைத் தோண்டி எடுத்து விற்பனை செய்யத் தொடங்கினார். நாளடைவில், இந்த கற்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யத் தொடங்கினார். இதற்காக மதுரை மாவட்டத்தின் மேலூர் பகுதியில் பல்வேறு நிலங்களை விலைக்குப் பெற்றுத் தொழிலை விரிவுபடுத்தினார்.

உ. சகாயம் அறிக்கை[தொகு]

மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் மக்கள் இவரது கல் தோண்டும் தொழிலால் தங்களின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுவதாகவும், விவசாயம் செய்ய முடியாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இச்சூழலில், அரசு நிலங்களில் அனுமதியின்றி முறைகேடாகக் கற்கள் தோண்டி எடுக்கப்படுகிறது என்று தினபூமி நாளேடு 2011 ஆம் ஆண்டில் தனிப்பட்ட முறையீட்டை தொடர்ந்தது. இதன் பின்னனியில் எழுந்த விசாரணையைத் தொடங்கிய, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம், தமிழ்நாடு அரசின் தொழில்துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், "மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகாவில் அரசு அனுமதி பெற்று குவாரிகள் நடத்தி வரும் பலர் அரசு புறம்போக்கு, பொதுப்பாதைகள்,கண்மாய்கள், குளங்கள், பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தி விற்பனை செய்துள்ளதாகவும், கிரானைட் கற்கள் கடத்தலால் சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். இந்தநிலை தொடராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு கட்டணம் செலுத்தாமல் எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் திருடப்பட்ட கற்களைக் கைப்பற்றி பொது ஏலம் விட வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்நாடு கனிமவள நிறுவனமே கிரானைட் கற்களை எடுத்து விற்பனை செய்ய வேண்டும். நேர்மையான அதிகாரிகள் கொண்ட பறக்கும்படை அமைத்து கிரானைட் குவாரிகளை சோதனை செய்ய வேண்டும்" என்றும் கூறியிருந்தார். [1] இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உ. சகாயம், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதன் பிறகு உ. சகாயம் மே மாதம் அரசுக்கு அனுப்பிய அறிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இதுகுறித்த செய்திகள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது.

விசாரணைக் குழுக்கள்[தொகு]

இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, இது குறித்து விசாரணை செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட 18 குழுக்களை அமைத்தார். இக்குழுவினர் மதுரை மாவட்டத்தின் மேலூர் பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளில் பி.ஆர்.பழனிச்சாமியின் பி. ஆர்.பி. நிறுவனம் மற்றும் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி மகன் துரை தயாநிதி பங்குதாரராக இருக்கும் ஒலிம்பஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 35 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றப்பதிவு[தொகு]

இந்த விசாரணையின் போது பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது மகன்கள், மத்திய அமைச்சர் மு. க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் முன் ஜாமீன் வேண்டி மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றன.

சரண்[தொகு]

இந்நிலையில் பி. ஆர். பழனிச்சாமி ஆகஸ்ட் 18 அன்று மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரண் அடைந்தார்.[2], [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிரானைட் கடத்தலால் ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு: முன்னாள் கலெக்டர் சகாயம்[தொடர்பிழந்த இணைப்பு] (விகடன் செய்தி)
  2. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி போலீசில் சரண் (தினமணி செய்தி)
  3. "கிரானைட் முறைகேடு : பி.ஆர்.பழனிச்சாமியிடம் விசாரணை , மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சி பிரச்சாரம்". Archived from the original on 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._பழனிச்சாமி&oldid=3574349" இலிருந்து மீள்விக்கப்பட்டது