பிழை திருத்தும் குறியீடு நினைவகம்
பிழை திருத்தும் குறியீடு நினைவகம் ( Error Correction Code memory - ECC Memory ) நினைவகம் என்பது கணினி பயன்பாட்டில் தரவு பிழைகளை கண்டறிந்து சரி செய்யும் திறன் கொண்ட சிறப்பு நினைவகமாகும்[1]. பொதுவாக கணினியில் பயன்படுத்தப்படும் நினைவகங்கள் தரவை சேமிக்க உதவுகின்றன ஆனால் அவை பிழைகளை சரி செய்ய முடியாது. பிழை திருத்தும் குறியீடு நினைவகம் கூடுதல் தரவு குறியீடுகளைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தகவலை தொடர்ந்து சோதனை செய்து எந்த பிழை ஏற்பட்டாலும் அதனை தானாக திருத்தும். இதனால் கணினி செயல்பாடுகள் அதிக நம்பகத்தன்மையுடன் நடைபெறும்.
இவ்வகை நினைவகம் பெரும்பாலும் சேவையகங்கள் மற்றும் அறிவியல் கணக்கீட்டு அமைப்புகள் போன்ற முக்கிய துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. காரணம் இவ்விடங்களில் தரவு பிழைகள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். பிழை திருத்தும் குறியீடு நினைவகம் ஒரு இருமத்திற்கான (பிட்டிற்கான) மற்றும் இரண்டு இருமத்திற்கான (பிட்டிற்கான) பிழைகளை தானாக கண்டறியும் திறனும், திருத்தும் திறனும் கொண்டது. சாதாரண நினைவகங்களை ஒப்பிடும்போது இதன் விலை அதிகமாகவும் வேகம் குறைவாகவும் இருக்கும். ஆனால் தரவு நம்பகத்தன்மை மிகவும் முக்கியமான சூழலில் இதன் பயன்பாடு அவசியமாகக் கருதப்படுகிறது.
பிழை திருத்தும் குறியீடு நினைவகத்தின் மூலம் கணினி கணக்கீட்டு முடிவுகள் நிலையானதும் துல்லியமானதும் ஆகின்றன. அறிவியல் ஆய்வுகள் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் பிழை திருத்தும் குறியீடு நினைவகம் பிழைதிருத்தத்தின் மூலம் பெரிய பங்கு வகிக்கிறது.
டிஆர்ஏஎம் (DRAM) எனப்படும் இயக்கநிலை சீரற்ற அணுக்க நினைவகத்தில் (Dynamic Random-Access Memory) தரவு சிதைவுகள், மின் அல்லது காந்த குறுக்கீடுகள், பின்னணி கதிர்வீச்சு (விண்வெளியிலிருந்து வரும் நியூட்ரான்கள்) அல்லது சிப் பேக்கேஜிங்கில் உள்ள மாசுகளிலிருந்து வரும் ஆல்பா துகள்கள் ஆகியவற்றால் ஏற்படலாம். இந்த பிழைகளைத் தடுக்க, பல்வேறு தீர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் நினைவ சோதனை (RAM parity) மற்றும் பிழை திருத்தும் குறியீடு நினைவகம் ஆகியவை அடங்கும். இந்த முறைகள் கூடுதல் நினைவக பிட்களையும், நினைவக கட்டுப்படுத்திகளையும் பயன்படுத்தி பிட் மாற்றங்களைக் கண்டறிந்து சரிசெய்கின்றன.
ஒற்றை பிழை திருத்தம் மற்றும் இரட்டை பிழை கண்டறிதல் (SECDED) எனப்படும் பொதுவான பிழை திருத்தும் திட்டமானது, ஒற்றை இரும (பிட்) பிழைகளை சரிசெய்யவும், இரட்டை இரும (பிட்) பிழைகளை கண்டறியவும் உதவுகிறது. சிப்கில் ஈசிசி (Chipkill ECC) போன்ற மேம்பட்ட வகைகள், முழு நினைவக சிப்பின் தோல்வி உட்பட பல இரும (பிட்) பிழைகளை சரிசெய்யும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Werner Fischer. "RAM Revealed". ADMIN Magazine. Retrieved October 20, 2014.