உள்ளடக்கத்துக்குச் செல்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

ஆள்கூறுகள்: 10°07′09″N 78°40′04″E / 10.1193°N 78.6678°E / 10.1193; 78.6678
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலின் கோபுரம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் is located in தமிழ் நாடு
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
தமிழ் நாடு-இல் உள்ள இடம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் is located in இந்தியா
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை மாவட்டம்
அமைவு:திருப்பத்தூர்
ஆள்கூறுகள்:10°07′09″N 78°40′04″E / 10.1193°N 78.6678°E / 10.1193; 78.6678
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
இணையதளம்:www.pillaiyarpattitemple.com

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் (Pillaiyarpatti Pillaiyar Temple) இந்தியாவிலுள்ள, தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில், பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் மற்றும் சிவகங்கையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.

வரலாறு

[தொகு]

இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[1] இக்கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.[2][3] குகைக்கோயிலில், சிவன் மற்றும் பிற கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகம கல்வெட்டுக்களில் எழுதியுள்ளபடி இக்கோயில், பொ.ஊ. 1791 மற்றும் 1738ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.

தல வரலாறு

[தொகு]
விநாயகரின் பொ.ஊ. 17-ம் நூற்றாண்டு பாறைச் (புடைப்புச்) சிற்பம்
பிள்ளையார்பட்டி கோயில் கோபுரம்

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கோயில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் என்பதை அறியலாம். பொ.ஊ. 17ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது. மேலும், கல்வெட்டுகள் மூலமாக, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்றவை இத் தலத்தின் முற்காலப் பெயர்கள் என அறிய முடிகிறது.[4]

இந்தக் கோயில் பொ.ஊ. 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது.[5] இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.

கோயில் அமைப்பு

[தொகு]

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில், தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது. பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது. இங்கு திருமணம் நடைபெற வைக்கும் "கார்த்தியாயினி" அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்கும் "நாகலிங்கம்" சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் "பசுபதீசுவரர்" சன்னதியும் உள்ளது.

குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.

இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.

மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. இக் கோயில் சிவன் கோயிலாக இருந்தாலும் கற்பக விநாயகரால் மக்களிடையே பிரசித்தி பெற்று பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

ராஜகோபுரம்

[தொகு]

கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.

திருக்குளம்

[தொகு]
கோயிலின் மண்டபம்

விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.

முக்கிய திருவிழாக்கள்

[தொகு]

இத் தலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் பெருவிழாவாக உள்ளது. முதல் நாள் விழா கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து "காப்பு கட்டுதல்" மற்றும் விழா தொடர்பான நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் பிள்ளையாருக்கு "சந்தன காப்பு" அலங்காரம் செய்யப்படுகிறது. இந் நிகழ்ச்சி பக்தர்களிடையே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும். மேலும், கார்த்திகை மாதத்தில் "திருக்கார்த்திகை தீபத் திருவிழா", மார்கழி மாத திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருதல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேட பூசை போன்றவை நடைபெறுகின்றன.

நேர்த்தி கடன்

[தொகு]
கோயிலில் அமைந்துள்ள திருக்குளம்

இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத் தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம் (கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள். தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.

இதனையும் காண்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  • தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://temple.dinamalar.com/New.php?id=643
  2. http://www.pillaiyarpattitemple.com/tamil/history.html பரணிடப்பட்டது 2015-05-26 at the வந்தவழி இயந்திரம் திருக்கோயில் தோற்றம்]
  3. "Karpaga Vinayagar Kovil". Tamilnadu.com. 2 February 2013. Archived from the original on 11 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Diwakar, Macherla (2011). Temples of SouthIndia (1st ed.). Chennai: Techno Book House. p. 154-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-83440-34-4.
  5. V., Meena. Temples in South India. Kanniyakumari: Harikumar Arts. p. 18.

வெளி இணைப்புகள்

[தொகு]